வெள்ளி, ஜூன் 30, 2006

Soban babu's Desecration Confession

கண்ணகியைக் கட்டிப்பிடித்தேன் - முன்னாள் நடிகர் சோபன் பாபு

குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!


'நான் மெரினா கடற்கரைக்கு சென்று கண்ணகியைக் கட்டித் தழுவியது ஆட்டுக்கல் பகவதியே அறியும்' என்று முன்னாள் நடிகர் சோபன் பாபு பேட்டியளித்தார். முன்னாள் காதலியுடன் பொழுதைக் கழிக்க சென்னை பீச்சுக்கு சென்றதாகவும் அப்பொழுது தன்னுடன் இருந்த நடிகையை படம் பிடிக்க அமெச்சூர் வலைப்பதிவர் விரட்டியதாகவும், ஃப்ளிக்கர் கிராபரிடம் இருந்து தப்பிக்க 'கண்ணகி என் காதலி' என்று போஸ் கொடுத்து சமாளித்ததாகவும் விவரித்தார்.

'சோபன் பாபு கூறுவது அப்பட்டமான பொய்' என்றும் 'கண்ணகி சிலை அருகே கண்ணன்கள் யாரும் சென்ற ஆட்சி பதவியேற்கும் வரை அனுமதிக்கப்பட்டதில்லை' என்றும் முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்து சோபன் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"லட்சக்கணக்கான ரசிகைளின் மனதைப் புளகாங்கிதப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கண்ணகி சிலை அருகே என்ன நடந்தது என்பது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம். இதை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை.

2001 ஆம் ஆண்டு ஜகபதி பாபுவுக்காக ஒரு புதிய படம் தயாரித்தேன். அதற்கு கரடி ஜோஸியம் பார்த்தேன். அப்போதுதான் கண்ணகி என் மீது கோபமாக இருப்பது தெரியவந்தது. நான் மன்னிப்பு கேட்டு செல்வி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் இப்போது வெளியாகிவிட்டது" என்று சோபன் பாபு கூறியுள்ளார்.

கண்ணகியின் நினைவாக தான் பாடல் இயற்றியதாக சொன்ன அவர் விஜய் யேசுதாஸை வைத்து இசையமைத்துள்ளதாகத் தொடர்ந்தார்:

கண்ணகிசனம் சோபன் பாபனம்
கரடீஸ்வரம் சிலம்பாதுகம்
பாண்டியமர்த்தனம் நித்யநிர்மூலனம்
கண்ணகியாத்மஜம் காதலாஷ்ரயே

மெரீனாவுக்கு நள்ளிரவில் சென்று கற்புக்கரசி கண்ணகியைத் தொட்டு கட்டிப் பிடித்ததாகக் கூறிய தெலுங்கு நடிகர் சோபன் பாபுவை தண்டிக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆயினும் இப்பிரச்சனை தன் தந்தைக்கு தொடர்பானது என்பதால் அரசு தலையிடாது என்று கூறியுள்ள அமைச்சர் முக ஸ்டாலின், கண்ணகியைக் கைப்பற்றி தன் காதலியை மறைக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த நடிகை யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த நடிகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சமஸ்கிருதத்தில் கண்ணகிப் பாடல் என்பது பொருத்தமற்றது என்றும், தமிழில் பாடிய டூயட் தமக்குக் கிடைத்திருப்பதாக சொன்ன அமைச்சர், பாடலை ஒலிக்கவிட்டார்:

காற்சிலம்பு கண்ணகிக்கு
தள்ளுமுள்ளும் உடம்புக்கு மெத்தை

கண்ணகியே சோபனுக்கோ
சோபனுக்கே கண்ணகியா

லாரி இடிப்பு கண்ணகிக்கே
மீள் நிறுவல் கண்ணகிக்கே

"'கண்ணகியுடன் ஆண்' என்று சர்ச்சையை ஏற்படுத்தி, மலிவான விளம்பரம் தேட முயல்கிறேன் என்னும் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளார். அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். கூட தன் ஆட்சிக் காலத்தில் கண்ணகிக்கு மரியாதை செய்ததை 'மாலையிட்ட மணாளன்' என்று ஏசியவர்கள் இன்று கோட்டை விட்டதை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. உண்மை எதுவாக இருந்தாலும் நான் அதை வெளியில் சொல்வேன்" என்றார் ஜெயலலிதா.


நிஜ நிகழ்வுகள்: Webulagam : Jaimala should be prosecuted - Kerala Minister! | Dinamani.com - Headlines Page | Webulagam : Lord Ayyappan knows the truth - Jaimala!




| |

வியாழன், ஜூன் 29, 2006

R Ponnammal

என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளுக்கு ஒரு அறிமுகம் + தொலை உரையாடல்:

1.

First Part - Intro for R Ponnammaal - this is an audio post - click to play



2.
Second Part for R Ponnammal - this is an audio post - click to play



3.
Final Part of Ponnamaal - this is an audio post - click to play



ஆர் பொன்னம்மாளின் வலைப்பதிவு | ஆர் பொன்னம்மாள் வாழ்க்கைக் குறிப்புகள்



| |

Journeys

இரயில் பயணங்களில்

நான் ஸ்டேஷனை அடையும்போது இரயில் கிளம்ப நாலு நிமிடங்கள் தான் இருக்கும். அன்றோ, பதினான்கு மணித்துளிகள் பாக்கி வைத்திருந்தேன். மேகமூட்டம் உள்ள இரவில் ஓரிரு நட்சத்திரங்கள் மட்டும் மேகங்களுக்கு நடுவில் மின்னுவது போல், காத்திருப்போர் அமர்ந்திருக்கும் இருக்கைகளில், எனக்கொரு இடம் கண்டுபிடித்தேன். கையில் அன்றைய செய்தித்தாள். பராக்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

பிச்சைக்காரத் தோற்றம். தலையில் சடை முடிச்சுகள். முதுகில் துர்நாற்றம் வீசும் பொதிமூட்டை. கிட்ட நெருங்கியவுடனே பலரும், தான் அமர்ந்திருந்த இருக்கையை காலி செய்து தூரப் போயினர்.

'I wanna make a call. Can you spare me some change?'

கேட்ட தொனிக்கு பயந்தே கையில் கிடைத்ததை இட்டேன். இடாதவர்களை வாய்க்கு வந்தவாறு ஏசினான். சில்லறை தேறியவுடன், முக்கில் இருக்கும் தொலைபேசியை அழுத்தி, பைசாக்களை தானியங்கியில் இட்டு 'ஹலோ' ஆரம்பித்தான்.

எதிர்முனையில் கூட அந்த வீச்சமும், மட்ட சரக்கு கமழும் பேச்சும் எட்டியிருக்கலாம். துண்டித்து விட்டார்கள். இரண்டு, மூன்று முறை ரிசீவரை அழுத்தியும், மற்ற சாகசங்கள் செய்தும், பேசாத பேச்சுக்கு, காசைக் கறந்து விட்டிருந்தனர். வஞ்சிக்கப்பட்ட கோபம் முகத்தில் தெரிந்தது.

தொலைபேசி நிறுவனத்தின் 'சேவை மைய'த்திற்கான இலவச எண் 800-ஐ அடுத்து அழைத்தான். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்டு, பைசாவைத் திரும்பத் தருமாறு வேண்டினான். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் முறையீடு மையம் எங்கிருக்கிறதோ?

இந்தியாவிலா? அல்லது அமெரிக்காவின் ஒதுக்குப்புறமான கிராமத்திலா? அல்லது நிஜமுகங்களைத் தவிர்த்து கணினி மட்டுமே பேசும் மையமோ... தெரியவில்லை. கொடுத்த காசைத் திருப்பித் தரும் பழக்கம் தமக்கு இல்லாததை சொல்லியிருப்பார்கள். அவர்களின் பிறப்பு குறித்து ஐயமுற்று, அம்மா, அப்பாவையும் சேர்த்து வைது கொண்டிருந்தான்.

கேட்கக் கூசும் சொற்களைத் தவிர்க்க நினைத்த பலரும் இடத்தை காலி செய்து, வேறு இடங்களுக்கு நகர்ந்தனர்.

அப்பொழுதுதான் அந்த வாலிபன் அவனை நெருங்கினான். முதுகில் பெரிய பை. அமெரிக்கா முழுக்க பேக்-பாக் கட்டிக் கொண்டே சுற்றுப் பயணம் செய்பவன் போல் இருந்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபது வயதுதான் இருக்கும். திடகாத்திரமான தேகம்.

"மிஸ்டர்... நீங்கள் பேசும் மொழி பொது இடங்களில் பேசத் தகாதது!"

கண்டிப்பான தொனி இருந்தாலும் கனிவான நம்பிக்கை தரும் முகத்துடன் கண் பார்த்து பேசினான். கோட் அணிந்தவர்களும், திரண்ட புஜபலம் உடையவர்களும் கூட 'உனக்கேன் தேவையற்ற வேலை? விருது பட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா?' என்று புருவம் உயர்த்தி ஏளன முறுவலித்தார்கள்.

இரத்த நாளங்கள் வெடித்து விட்டது போன்ற கண்களுடன், "டேய்... (அர்ச்சனைகள்) உனக்கு என்ன தெரியும் (மேலும் அர்ச்சனைகள்) எனக்கு என்ன நடந்தது என்று..." குழற்கிறார் நிலைதடுமாறுகிறவர்.

'எது நடந்தாலும், இப்படி துர்வார்த்தைகளை பயன்படுத்தாமல், பண்போடு நடக்கலாமே?'

'எனக்கு இருக்கும் கோபத்துக்கு, உன்னை நொறுக்கிடுவேன்!'

பாதிக்கப்பட்ட வயோதிகனுக்கு மிக அருகில் நெருங்கி, 'வாங்க... வெளியில் போய் நமது சண்டையை வைத்துக் கொள்ளலாம்'

நேரடியாக சண்டைக் காட்சியைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு மிகுந்தது. நிச்சயம் இளைஞன் தான் ஜெயிப்பான். உடற்பயிற்சியில் கட்டுமஸ்தான் வளைவுகள். 'மென்ஸ் ஹெல்த்' போன்ற புத்தகங்களில் அட்டைப்படங்களில் வருவது போன்ற நாயக பாவம். வீடற்ற முதியவரோ, போதை உட்கொண்ட களைப்புடன் பசி மயக்கத்தில் பூஞ்சையாய் இருந்தார்.

ரயிலுக்கு இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. ட்ரெயின் கிளம்புவதற்கு ஒரு நிமிடம் வரை இவர்கள் இருவரின் குஸ்தியை வேடிக்கை பார்க்கலாம். நிலைமை எல்லை மீறினால், 911 மூலம் காவல் துறையைக் கூப்பிட்டு, எனக்கு ட்ரெயின் பிடிக்கும் அவசரத்தை சொல்லி, சாட்சி கூட சொல்லாமல் சமூக சேவகனாகி தப்பித்தும் விடலாம்.

ஆசையுடன் பின் தொடர்ந்தேன்.

ஸ்டேசன் வாயிலில், அந்த back-pack இளைஞன், சடாரென்று முதியவன் தோளில் கை போட்டான்.

'உனக்கு யாரைக் கூப்பிடணும்? இந்தா என் செல் ·போன்'

'அவங்க ·போனை எடுக்க மாட்டேங்கிறாங்க! எனக்கு காசு வேணும்'

'எதுக்கு உனக்கு காசு வேணும்? டிக்கெட்டுக்கு பணம் வேண்டுமா? எங்கே போகணும்? நானே எடுத்துத் தரேன்.'

'பசிக்குது... சாப்பிடணும்'

அங்கே இருந்த உணவகத்தில் சாண்ட்விச் வாங்கித் தருகிறான். மழை பெய்யாத கோடை நாளில் எறும்பு வெளிவந்து தன் துணுக்கான உணவைக் கண்டது போல் அவனும் கண்கள் மிளிர சாப்பிட ஆரம்பித்தான்.

எனக்கு ட்ரெயினுக்கு நேரமாவது உரைத்தது. அவசரமாக மீதத்தைப் பார்க்க முடியாமல் கிளம்பி விட்டேன்.

என்னுடைய வண்டிக்கு சிக்னல் போட்டு கிளப்பும்போது, ஓடிவந்து ஏறிக் கொள்கிறான் அதே இளைஞன். நிஜ நாயகர்களிடம் கையெழுத்து வாங்க மனம் ஏனோ அலைமோதுவதில்லை.

நன்றி: தமிழோவியம்




| |

புதன், ஜூன் 28, 2006

Mind Matters

மனம் போன போக்கில் எழுத வேண்டும். இலக்கு எதுவும் கூடாது. பாஸிவ் வாய்ஸை தவிர்க்க வேண்டும். அம்மாவிற்கு எழுதும் கடிதம் போல் இயல்பு கிடைத்தால் நல்லது. கஷ்டப்பட்டு உவமை போடக் கூடாது. எதிர்மறை வாக்கியங்களை விட்டு விடு.

ம்யூனிச் படத்தின் ஹீரோவைப் பார்த்தால் ஹல்க்தான் நிழலாடுகிறது. ஐ.எம்.டி.பி பக்கத்தின் சுட்டி கொடுக்கலாம். படிப்பவர்களுக்கே அங்கு போக வேண்டும் என்று தெரியாதா? கேள்விகளைக் கொண்டு கட்டுரையைத் தொடுப்பது அலுப்பாக இருக்கும்.

இந்து மதத்தில் பாவ மன்னிப்பு கிடையாது. யூதர்களுக்குக் கூட இல்லை. 'ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா' உபயம். சின்ன வயதில் இருந்தே குற்றவுணர்வை வைத்து மிரட்டுகிறார்கள். தப்பு செய்தோமோ; தோப்புக் கரணம் போட்டோமோ என்று விட முடிவதில்லை. ஜூரியை வைத்து தீர்ப்பு எழுதுவதற்கும் நீதிபதியை நடுவணாகக் கொண்டதற்கும் இதற்கும் முடிச்சுப் போட வேண்டும். கூகிள் தேடலில் மேட்டர் சிக்கும்.

திரைப்படமாக பட்டியலிட ஆசை. ஆனால், பார்த்துவிட்டேன் என்பதைத் தவிர படப் பட்டியலில் வேறு உபயோகம் ஏதும் இல்லை. இன்னொரு முறை டிவிடி-யை வாடகை எடுப்பது குறையலாம். புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் படப்பட்டியல் இடுவதற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. Been there... done that என்று உலகிற்கு ஓதுவது.

மிடில்-ஏஜ் க்ரைஸிஸ் என்றால் என்ன? கம்பி வளையத்தை எலி விடாமல் துரத்தி ஓடிக் கொண்டே இருக்கும். எலியாகத் தன்னையும், வளையமாக வேலையையும், கற்பிப்பது. நின்று விட்டால் ஆராய்ச்சியாளருக்கும் போரடிக்கும். மிகையுந்துரத்த வெம்பிணியுந்துரத்த அலுக்காமல் எதையாவது விரட்டும் மனம் இருக்கும் வரை நடு வயதுப் போராட்டங்களைத் தவிர்க்கலாம்.

அழகாக இருப்பவர்களையும் சொந்தக்காரர்களையும் தான் அமெரிக்கா விருப்பத்துடன் உற்றுப் பார்க்கிறது. கொசுவைக் கொன்றால் வருத்தமாக இல்லை. எலியை கார் மிதித்தால், காருக்கு சேதம் ஆகாதவரை லாபம். அணில் செத்துப் போனால் அன்று முழுக்க குற்ற உணர்ச்சி. Nicole Vaidisova-வைத்தான் விம்பிள்டனில் முன்னிறுத்துகிறார்கள். ஷரபோவா நேற்றைய மலர். மீடியாவுக்கு நாளொரு மாயை. எதுகை மோனை இல்லாவிட்டால் இயற்கையாக இருக்கும்.

லாப்ஸ்டரைக் கூட கனிவுடன் கொலை செய்ய வேண்டும் என்கிறார்கள். தனி வீட்டில் வாழாத ஈர்க்கிறாலை சாப்பிட மாட்டார்களாம். அகரமுதலி தேடாமல் ஈர்க்கிறால் என்றால் லாப்ஸ்டர் நண்டு என்று தெரிய வேண்டும்.

Takoyaki உண்ணுவதற்குக் கூட மஞ்சள் நீர் தெளித்து 'அட்டபாதரே! எண்காலி!! சாக்குக்கணவாய்!!! பேய்க்கணவாய!!!! வெட்டிக் கொள்ளலாமா?' என்று திருவிளையாடற் புராண விளிச்சொற்களுடன் வினவச் சொல்வார்கள்.

கவனம் சிதறக் கூடாது என்பதை விட சிந்தை மொய்ம்பு தேவை.

செவ்வாய், ஜூன் 27, 2006

Ghana vs Brazil

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting ஜெயிக்குமா???


உலகக்கோப்பை கால்பந்து 2006 » இன்றைய போட்டியின் முன்னோட்டம் - பிரேசில் vs கானா: "பிரேசில் வெல்வது என்பது கானா அணிக்கு இயலாத காரியமாக எனக்கு படுகிறது. கானா இந்த போட்டியில் வெல்வதற்கு எதாவது அதிசயம் நடக்கவேண்டும். ஆகையால் இதுவரை சிறப்பாக விளையாடிய கானா அணிக்கு Bye Bye சொல்லும் நேரம் வந்துவிட்டது."


பிபிசி-யின் கானா கையேடு


  • கானா - பிரேசில் :: பிபிசி முன்னோட்டம்


  • Guardian Unlimited :: கழனி நண்டு கானா


  • ஆப்பிரிக்க கண்டத்தின் பதினொன்று - New York Times


  • கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா



    | |

  • திங்கள், ஜூன் 26, 2006

    Sambar Pipeline to be Launched

    குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

    சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் சாம்பார், ரசத்தை அனுப்பும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி ஏன் ஆரம்பிக்கவில்லை என்று ஜெயலலிதா இன்று கேள்வி எழுப்பினார்.

    "நியாயவிலைக் கடை மூலம் ரேஷன் பொருட்களில் குறைந்த விலையில் அரிசி மட்டுமே தற்போது கிடைக்கிறது. சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற பிற மளிகை சாமான்களுக்கு மானியம் வழங்கினாலும் ஏழை மக்களின் வருவாய்க்கு ஏற்றவாறு விற்கப்படுவதில்லை.

    அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் வென்றால், லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் சென்னையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மொத்த சமையலையும் அனுப்ப வகை செய்யும்" என்றார் செல்வி ஜெயலலிதா.

    சத்துணவுக்கு ஆகும் போக்குவரத்து செலவு, வழியில் டியூசிஎஸ் பொருட்கள் கணிசமாக ஊழலாவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்க சென்னையிலிருந்து 11 மாவட்டங்கள் வழியாக மதுரைக்கு குழாய் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

    இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி, 'குழாயைத் திருகினால் கோழி' என்னும் திட்டம் தன்வசம் இருப்பதாக உட்னடியாக அறிவித்தார்.

    அவர் கூறுகையில், இருபது ரூபாய்க்கு கொள்முதலாகும் ப்ராய்லர் கோழிகள், வாடிக்கையாளரிடம் ஐம்பது/அறுபது ரூபாயாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தோல் நீக்கப்பட்ட கோழிகள், குழாய்கள் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட மனேகா காந்தி, கோழிகளுக்கு ஆதரவாக குழாயடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

    இவை அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த மாண்புமிகு ஜனாதிபதி அப்துல் கலாம், ரோஹிணி விண்கலத்திலேயே கொஞ்சம் 'வத்தக்குழம்பு' ஈஷிக்கொண்டு உலகை வலம் வந்ததைப் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். 'தொலைநோக்குப் பார்வையுடன் நிலவுக்கும் சாம்பார் கால் வைக்க வேண்டும்' என்று பள்ளிச் சிறுவர்களிடம் இனிமேல் வலியுறுத்தப் போவதாக சொன்னார்.


    நிஜ நிகழ்வுகள்: Webulagam : IOC's southern oil pipeline dedicated to Nation! | Chennai-Madurai Petrol pipeline dedicated to nation




    | |

    Wake-up Annoyances

    காலங்காத்தால இம்சை பண்ணாதே

    எதற்காக காலையில் எழுந்து கொள்கிறேன். தமிழ்மண நட்சத்திர வாரம் மலையேறியது. அதிகாலையில் சேவலை எழுப்பி தினம் கூவென்று சொல்கிறேன் என்று பாட்டு பாடும் காதல் கல்யாண அகவையும் கிடையாது.

    அதற்காக சில அதிர் கடிகாரங்கள்:

    1. பறக்கும்! அலாரம் பறக்கும்: சுத்தி சுத்தி பறப்பதை தாவிப் பிடித்தவுடன் நீங்கள் எழுந்து கொண்டு விட்டீர்கள் என்று தன்னை நிறுத்திக் கொள்ளும். 'றெக்கை கட்டி பறக்குதடீ அண்ணாமலை சைக்கிள்' பாடலுடன் பறக்க விட ஆரம்பித்து, 'சுத்தி சுத்தி அடிப்பேன்' என்று முடிப்பது இதன் ஸ்பெஷாலிடி.




    2. நானொரு பின்னு... அலாரம் பின்னு: நாளுக்கொரு ஆணியாக நீட்டிக் கொள்ள, முப்பது ஆணிக்கோவைகளில் ஏதாவதொன்று தினமும் நெம்பி நிற்க, நின்றதைக் கண்டுபிடித்து, தினப் போராட்டத்தைத் துவங்க அழைக்கிறது.




    3. கூடையில் முட்டை; கடிகாரத்தில் கோட்டை: எத்தனை முட்டை இட்டிருக்கிறது என்று தேடிப் பிடித்து, அனைத்தையும் அடுக்கும் வரை கொக்கரக்கோ தொடரும்.



    4. டாவின்சி கோட் பிரியர்: புதிர்களை விடுவிப்பதை விருப்பமானவர்களுக்கான அதிர் விழிப்பான். தூக்கக் கலக்கத்துடன் அசின் படத்தை சரியாகப் பொருத்தும்வரை அலாரம் அடிக்கும்.



    5. கண்ணாமூச்சி ரே ரே: தரையில் உருண்டோடி மறைந்து கொள்ளும். அதிர்வுகளை நிறுத்துவதற்கு எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று கண்டிபிடிக்க வேண்டும். 'சிச்சிச்சிச்சீ... என்ன பழக்கம் இது' போன்ற வேண்டிய பாடல்களை ஒலிக்க விடலாம் என்பது சிறப்பம்சம்.




    நன்றி: Uber-Review » Blog Archive » Top Ten Most Annoying Alarm Clocks


    | |

    சனி, ஜூன் 24, 2006

    Thanks to Thamizhmanam

    மீண்டும் பலருக்கு என்னுடைய வலைப்பதிவை சென்றடைய வைத்த தமிழ்மணத்திற்கு நன்றி.

    அடிகளின் (அதாங்க ஹிட்ஸ்) இந்த வார கணக்கு-வழக்கு:




    நட்சத்திர வாரப் பதிவுகள்: மின் நூல்


    பேட்டி

  • தமிழோவியம் மீனா

  • கில்லி ஐகாரஸ் பிரகாஷ்

  • திசைகள் அருணா ஸ்ரீனிவாசன்

  • பெயரிலி இரமணீதரன்

  • எழுத்தாளர் என் சொக்கன்


    இலக்கியம்

  • லா ச ராமாமிர்தம்

  • 'சிட்டி' பெ. கோ. சுந்தரராஜன் :: நரசய்யா


    நையாண்டி

  • சூடா இருக்கீங்களா?

  • அருந்ததி ராய்

  • ஆஷும் அஸ்தியும்


    நட்சத்திர மனிதர்

  • சுப்பிரமணிய சாமி

  • ஷேக் சின்ன மௌலானா

  • சிட்டி


    புத்தகம்

  • கேள்விகளின் நாயகர்

  • கறுக்கும் மறுதாணி ::கனிமொழி

  • தலித்திய விமர்சனக் கட்டுரைகள்: ராஜ் கௌதமன்

  • குமுதம் ரிப்போர்ட்டர் :: மாயவலை - அல் ஜர்காவி : பா ராகவன்

  • சுவடுகள் :: திருப்பூர் கிருஷ்ணன்



    திரை

  • காயத்ரி ஜோஷி

  • ஜெயா சீல்



    அனுபவம்

  • அனைவருக்கும் என் வணக்கம்

  • மணத்திற்குப் பின் சுயமைதுனம்

  • கனடா மாண்ட்ரியால் & க்யூபெக் சிட்டி

  • தமிழ்மண விற்பனை - அலசல்

  • கீதம் சங்கீதம் வேதம்


    வலையகம்

  • ஈ-தமிழ்

  • ஸ்னாப் ஜட்ஜ்

  • தி ஹிந்து

  • சேவை அமைப்புகளும் ஆறு உதிர்மொழிகளும்

  • ஒரு விளையாட்டு; இன்னொரு சோதனை; கலவை

  • மா சிவகுமார் வலைப்பதிவு


    நன்றி: தமிழ்மணம்.காம்




    | |

  • True Star - Maa Sivakumar

    இந்த வாரம் நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தாலும், பரவலான பதிவுகளாகப் போட்டுக் கலக்கிக் கொண்டிருப்பவர் மா சிவகுமார்.

    அவருடைய பதிவுகளைப் படிக்க:

  • எது ஆடம்பரம்?

  • உடல் பருமனைக் குறைக்க

  • பொதுவுடமை சமூகம் சாத்தியமா

  • எங்கே போகிறோம் (கம்யூனிசம்)

  • பொதுவுடமை அல்லது உடோபியா

  • கம்யூனிசம் - என் பார்வையில் :: சந்தையும் சுயநலமும்

  • தாலிடோமைடு (Thalidomide)

  • மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள்

  • பெண்களை "விற்கிறார்கள்"

  • இந்தியாவின் மதச்சார்பின்மை

  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

  • எழுத்து :: வலைப்பூ எழுத்தாளர்களின் அந்த முதிர்ச்சி, உழைப்பு, வளத்தை நான் பார்ப்பது டிபிஆர் ஜோசப், ரோஸா வசந்த், கைப்புள்ள, முத்து தமிழினி ஆகியோரின் பதிவுகளில். பத்ரியின் ஆய்வு செய்து எழுதப்படும் பதிவுகளிலும், கவிதாவின் சமூகப் பார்வைகளும், டோண்டு ராகவனின் அனுபவப் பாடங்களும் கவர்ந்து இழுத்தாலும் வலைப் பதிவு என்ற நிலையைத் தாண்டி விடவில்லை அவை.

  • பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா

  • வாழ்க்கை

    செம வேகம்... படிச்சுட்டு வாங்க :-D)




    | |

  • Chitti - Lifesketch

    'சிட்டி' பெ. கோ. சுந்தரராஜன்
    பிறப்பு: ஏப்ரல் 20, 1910
    மறைவு: ஜூன் 24, 2006

    வாழ்க்கை

  • திரைப்பட விமர்சகர்

  • பட்டதாரி ஆசிரியர்

  • அகில இந்திய ரேடியோ வானொலி இதழ்ப் பொறுப்பாசிரியர்

  • அ.இ.ரேடியோ முதுநிலை நிருபர்

  • வானொலி பணி நிறைவு: 1968

  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர்.

  • 1875இல் "ஆதியூர் அவதானி" - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர் (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் வெளியானது)


    விருதுகள்
  • ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்

  • பிரபல மணிக்கொடி எழுத்தாளர்

  • 1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'ரோல் ஆஃப் ஹானர்' விருது வழங்கப் பெற்றவர்.

  • 'தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்' - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு 'இலக்கியச் சிந்தனை' விருது பெற்றவர்.


    நூல்கள்

  • அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)

  • சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)

  • கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)

  • தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)

  • நடந்தாய் வாழி காவேரி (தி ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய பயணநூல்)


    தமிழ் மொழிபெயர்ப்புகள்

  • கே ஏ நீலகண்ட சாஸ்திரி
  • Verrier Elwin
  • Lester Brown
  • JS Pruthi
    ஆகியோர் நூல்கள்


    ஆங்கிலப் படைப்புகள்

  • தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
  • தி பரமாச்சார்யா



    | |

  • Chitti Anjali - Narasayya

    சிட்டி என்னும் சிரிப்பாளி - நரசய்யா

    ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்க்ளிலேயே எழுதியிருக்கிறார்.

    தன்னை 'சர்க்கஸில் வரும் கோமாளி' என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.

    சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.

    "இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்" (கலாமோஹினி :: 1943)


    ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, 'நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது' என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.

    அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.

    சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனியில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது "பாசிடிவ் அவுட்லுக்" என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், "இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்" என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!

    (டிசம்பர் 2004)


    | |

    Chitti PG Sundarrajan - Memoir

    சிரிக்க வைக்கிறார் சிட்டி - திருப்பூர் கிருஷ்ணன்

    விஷமம், நையாண்டி, கிண்டல், கேலி, நகைச்சுவை ஆகிய எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துகிற மாதிரி தமிழில் ஒரே சொல் உண்டா? உண்டு.

    அந்த சொல்தான் 'சிட்டி!' தி.ஜா.வின் நெருங்கிய நண்பராயிருந்த எழுத்தாளர் சிட்டி பி.ஜி. சுந்தரராஜன்.

    வெறும் 94 வயது ம்ட்டுமே ஆன குறும்புக்கார இளைஞர்! அவருடன் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு மினி பேட்டி:

    கே: நீங்கள் எழுதிய முதல் படைப்பு என்ன? எந்த வயதில் எழுதினீர்கள்?

    ப: என் ஐந்து வயதிலேயே அதை எழுதி விட்டேன். அதன் சிறப்பு காரணமாக, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு, இன்றுகூட ஏராளமான தமிழர்கள் அந்தப் படைப்பை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அனா, ஆவன்னா ஆகிய உயிரெழுத்துகள் தான் அந்தப் படைப்பு!

    கே: முதல் கதையை எழுதியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

    ப: ஒருவேளை என் கதைக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டால், பரிசை எந்த வாக்கியங்களால் நிராகரிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!


    இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார் சிட்டி. சிடுமூஞ்சிச் சிகாமணிகள் முகத்தில் கூட, ஒரு சின்னப் புன்னகைக் கீற்றையாவது மலரச் செய்கிற சாமர்த்தியம் அவருக்கு உண்டு.

    சிட்டி, தி.ஜா.வின் 'அம்மா வந்தாள்' நாவல் பற்றி என்னிடம் ஒரு கமெண்ட் அடித்தார். அதன் கதாநாயகியான அலங்காரத்தம்மாள் கள்ளக் காதலனுடன் உறவாடுபவள். அவள் தன் பாவத்தைத் தொலைக்க, கடைசியில் தன்னந்தனியே காசிக்குப் போக நினைப்பதாய் நாவல் முடியும்.

    'காசிக்குப் போகும்போது தன் கள்ளக் காதலனையும் கூட்டிக் கொண்டு போவதாகத்தான் அவர் நாவலை முடித்திருக்க வேண்டும். அலங்காரத்தம்மாளுக்கு அந்த அளவுக்குக் கொழுப்பு ஜாஸ்தி!' என்றார் சிட்டி. இதை தி.ஜா.விடம் சொன்னேன். அவர் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.



    சிட்டியின் தனி சிறப்பு, பேசும்போதே சடாரென்று அழகழகான ஆனால் விஷமம் நிறைந்த குட்டிக் கதைகளை உண்டு பண்ணிச் சொல்வது. கும்பகோணத்திலிருந்து ஓர் எழுத்தாளர் வந்தார். சிட்டியைப் பார்க்க விரும்பினார். அழைத்துச் சென்றேன்.

    சிட்டி என்னிடம் 'உனக்கு ராமாயணம் தெரியுமோ?' என்று ஆரம்பித்தார். எனக்கு ஜாக்கிரதை அதிகம். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று தயக்கத்தோடு சொல்லி வைத்தேன். சிட்டி தன் ராமாயணத்தை ஆரம்பித்தார்.

    "ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் காட்டில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென லட்சுமணன் "அண்ணா, நான் ஏன் உன்னுடன் வர வேண்டும்? உன்னைத்தானே அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார்? நீ மனைவியோடு வந்திருக்கிறாய். நான் ஊர்மிளையை விட்டு வந்துவிட்டேன். சே!" என்று சலித்துக் கொண்டு திரும்பி நடந்தான்.

    சீதை "பிராணநாதா! நான் இதுவரை படித்த எந்த ராமாயணத்திலும் இது போன்ற சம்பவம் வந்ததில்லையே!" என்றாள்.

    "கொஞ்சம் பொறு. புரியும்" என்றார் ராமர். சற்று நேரம் சென்றது. லட்சுமணன் ஓடோடி வந்தான்.

    "அண்ணா, நான் ஏன் அப்படிப் பேசினேன் என்று எனக்கே தெரியவில்லையே! நானே விரும்பித்தானே உன்னுடன் வந்தேன். உன்னைப் பிரிந்து என்னால் எப்படி இருக்க முடியும்!" என மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உடன் நடந்தான்.

    ராமன் சீதையிடம் "புரிந்ததா?" என்று கேட்டார்.

    "புரியவில்லையே!" என்றாள் சீதை.

    "நாம் இதுவரை நடந்து வந்த பூமி கலியுகத்தில் கும்பகோணம் என்று ஷேத்திரமாகப் போகிறது. அது தன் சுபாவத்தை இப்போதே காட்ட ஆரம்பித்து விட்டது!" என்றார் ராமர்!"

    (வந்த் எழுத்தாளர் வெகு நேரம் சிரித்து அவர் கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. இந்தக் கதையில் கும்பகோணம் என்ற ஊர், வரும் எழுத்தாளரைப் பொறுத்து திருநெல்வேலி, மதுரை என்று வித்விதமாகப் பெயர் மாற்றம் கொள்ளும்!)


    சத்தியவான் சாவித்திரியை நினைவுபடுத்தும் வகையில் 'காரடையான் நோன்பு' என்று ஒரு பண்டிகை. பெண்கள் வெல்ல அடை தட்டி அந்தப் பலகாரத்திக் கடவுளுக்குப் படைப்பர்கள். பின் மங்கலச் சரடைக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். அந்த அடை சிட்டிக்குப் பிடிக்காது. அதை எதிர்த்து அவர் 'நவீன சாவித்திரி' என்று ஒரு கதை உண்டு பண்ணியிருக்கிறார்!

    கணவன் உயிரைத் தருமாறு எமனிடம் வேண்டினாள் சாவித்திரி. எமன் தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டான். வேறு வழியில்லாத அவள், ஒரு யுக்தி செய்தாள். பலகாரம் சாப்பிட்டுச் செல்லுமாறு எமனை உபசரித்து இந்த் அடையைச் செய்து போட்டாள். சாப்பிட்டான் எமன். உலகில் இப்படியும் ஒரு பலகாரமா என்று தாளாத துக்கத்தில் எமன் உயிரை விட்டுவிட்டான். அதனால் பிழைத்தான் சத்தியவான்!

    (பெண்கள் கௌத்தில் கட்டிக் கொள்ளும் சரடு ஒருபுறமிருக்க, இந்தக் கதையைக் கேட்பவர்கள் சிட்டி விடும் சரடை எண்ணிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்!)


    சிட்டி பரமாச்சாரியாளின் பக்தர். இலக்கியத்தில் பழங்கால இரட்டைப் புலவர்கள் போல், இரட்டையரில் ஒருவராக இயங்குவஹிலேயே மகிழ்ச்சி காண்பவர்.

  • கு.ப.ரா.வுடன் 'கண்ணன் என் கவி'
  • தி.ஜா.வுடன் 'நடந்தாய் வாழி காவ்ரி
  • சிவபாத சுந்தரத்துடன் நாவல், சிறுகதை வரலாறுகள்
  • பெ.சு. மணியுடன் வ.ரா. வரலாறு

    எனச் சிட்டி இணைந்து படைத்த நூல் ஒவ்வொன்றும் பெரும் சாதனை.

    பி.ஜி. உட்ஹவுஸ் தனிப்பட்ட முறையில் சிட்டிக்கு எழுதிய கடிதம் ஒன்று சிட்டியிடம் உண்டு. வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதனின் மாமியாரான எழுத்தாளர் கிருத்திகாவும் சிட்டியும் பைண்டிங் நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்ட மிக நீண்ட கடிதங்கள் இலக்கிய வரலாறாய்த் திகழ்பவை. எழுத்தாளர் நரசய்யா எழுதிய, 'சாதாரண் மனிதன்' என்ற சிட்டியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் அவர் பெருமையைப் பேசுகிறது.

    தில்லி, பாண்டிச்சேரி போன்ற சில இடங்களில் சில கூட்டங்களுகு நானும் சிட்டியும் ஒன்றாகப் போயிருக்கிறோம். அப்போது அவருடன் த்ங்கிக் கழித்த நாட்கள் நான் மலர்ச்சியுடன் சிரித்துச் சிரித்து வாழ்ந்த பொன்னானா நாட்கள். அறிவாளிகள் என்றால், நகைச்சுவை உணர்வற்று சீரியஸ் ஆகத்தான் இருப்பார்கள் என்ற பொதுவிதிக்குச் சிட்டி விதிவிலக்கு. எந்த சோக்த்தாலும் பாதிக்கப்படாத அவரது அபாரமான நகைச்சுவை உணர்வுக்கு இயற்கை தந்த் அன்புப் ப்ரிசுதா அவருடைய முதிய வயது.

    டிசம்பர் 2003
    சுவடுகள் - திருப்பூர் கிருஷ்ணன்
    வெளியீடு: திருப்பூர் குமரன் பதிப்பகம்


    அஞ்சலிக் குறிப்புகள்: பத்ரி | நா கண்ணன்



    | |

  • வெள்ளி, ஜூன் 23, 2006

    Chat Meet - Chokkan

    விகடனில் வல்லினம்... மெல்லினம்... இடையினம் என்று தற்கால கணினியாதிக்கத்தை நுட்பமாக எழுதுபவர். தினம் ஒரு கவிதை தொடங்கி விகடன் தொடர் வரை எது எடுத்துக் கொண்டாலும் சிரத்தையும் உழைப்பும் பளிச்சிடும். சொக்கனுடன் மின்னஞ்சல் பேட்டி:

    1. அயோத்தி, வீரப்பன், ஹமாஸ், ருஷ்டி என்று பிரச்சினையை புத்தகமாக்கி சுமக்கிறீர்களே... சுவாரசியமாய் இருக்கிறாய்;பயமாய் இருக்கிறது? என்பது போல் மிரட்டல் ஏதாவது?

    கதையல்லாத படைப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறவர்கள் எல்லோருக்கும், இந்தப் பிரச்னை ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்தே தீரும் என்று நினைக்கிறேன்.

    என்னைப்பொறுத்தவரை, எந்தப் பிரச்னையிலும் சார்பு நிலை எடுக்காமல் எழுதுவதில் கவனமாக இருக்கிறேன். ஆகவே, இருதரப்பு வாதங்களையும் (சில சமயங்களில் ஊகங்களையும்கூட) தெளிவாக, நேர்மையாக முன்வைத்துவிடுவதால், அயோத்திபோன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளைக்கூட, முழுமையாகவும் நடுநிலைமையோடும் பதிவு செய்வது சாத்தியமாக இருக்கிறது.

    மற்றபடி, படைப்பாளிபற்றிய முன்முடிவுகளோடு படைப்புகளை அணுகுகிறவர்கள் சிலர் எப்போதும் இருக்கிறார்கள். அதுபற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை, செய்வதற்கில்லை.

    2. இருபது, முப்பது வருடம் முன்புவரை பிரபலமான தமிழ் எழுத்தாளர் என்றால் நாவல் / சிறுகதை எழுதுபவர். இன்று இது மாறி இருக்கிறதா? உங்களை எப்படி இந்த காலச்சக்கரம் பாதித்திருக்கிறது?

    புனைவு, அபுனைவு ஆகிய இருவகைகளிலுமே எழுத்தாளரின் முக்கியத்துவம் குறைந்து, படைப்புக்கு அதிக கவனம் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

    அதாவது, இதற்குமேல் 'என்னுடைய ரீடர்ஸ்' என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒரு சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் வரமுடியும் என்று தோன்றவில்லை. படைப்பில் தரம் இல்லாவிட்டால், எத்தனை பெரிய எழுத்தாளராக இருந்தாலும் நிராகரிக்கப்பட்டுவிடுகிற சாத்தியங்கள்தான் அதிகமாகத் தெரிகின்றன. இது ஆரோக்கியமான முன்னேற்றம்தான்.

    நாவல் / சிறுகதைகளைப் பொறுத்தவரை அவற்றைக் கதைகளாகப் படித்து ரசித்துக்கொண்டிருந்த பெரும்பான்மையினர், இப்போது அதேமாதிரியான, சொல்லப்போனால் இன்னும் அதிகத் திருப்பங்களோடு கூடிய சம்பவங்கள், புனைவுக் காட்சிகளைத் தொலைக்காட்சிவழியே பார்த்துவிடுகிறார்கள். அநேகமாக எல்லாப் பிரபல இதழ்களும் புனைவு சார்ந்த படைப்புகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டதை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

    ஆகவே, சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத, மொழியழகில் கவனம் ஈர்க்கும் புனைவுப் படைப்புகளுக்குதான் இனி வரவேற்பு இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    3. ஒரு புத்தகம் எழுத எத்தனை நாள்/நேரம் ஆகிறது? வீட்டையும் வேலையையும் வாசகனையும் எப்படி மேய்க்கறீர்கள்? முழு நேர புத்தக ஆசிரியராகக் காலந்தள்ள முடியுமா?

    புத்தகம் எழுதுவதற்கான கால அளவு, முழுக்க முழுக்க, நாம் எடுத்துக்கொள்ளும் தலைப்பைப் பொறுத்ததுதான். ஒரு வாரத்தில் எழுதியதும் உண்டு, மாதக்கணக்கில் நீட்டி முழக்கியதும் உண்டு.

    நேர நிர்வாகம்மட்டும் புரிந்துவிட்டால் வீடு, வேலை, வாசகன் ஆகிய மூன்றையும் கட்டி மேய்ப்பது அப்படியொன்றும் சிரமமில்லை. காலம்காலமாக எல்லா எழுத்தாளர்களும் செய்துவருகிற காரியம்தானே ஸ்வாமி? :)

    முழு நேர எழுத்தாளராக இருப்பது சாத்தியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துணிந்து ஆற்றில் இறங்கிப் பார்க்காதவரை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை, இந்தக் கேள்வியைமட்டும், தகுதியுள்ள இன்னொருவரிடம் ரீடைரக்ட் செய்துவிடுங்கள்!

    4. புத்தகம் வெளிவந்ததின் ஆய பயன், 'the special moment' என்று எந்த தருணத்தை சொல்வீர்கள்?

    அபூர்வமாகக் கிடைக்கும் சில வாசகர் கடிதங்கள்!

    காரணம், வீடுமுழுதும் சமையலறைதவிர எல்லா இடங்களிலும் புத்தகங்களை நிரப்பிவைத்திருக்கும் நான், எந்த எழுத்தாளருக்கும் வாசகர் கடிதம் எழுதியதில்லை. காரணம், புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதே அந்த எழுத்தாளருக்குச் செய்யும் கௌரவம் என்று நினைக்கிற படுசோம்பேறி நான்.

    அப்படியிருக்கையில், என்னுடைய புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரோ ஒருவர் நேரம் செலவழித்துக் கடிதமோ, மின்னஞ்சலோ எழுதுகிறார் என்று நினைக்கையில், நிஜமாகவே மெய்சிலிர்க்கிறது.

    5. விரும்புவதை எழுதுவதற்கு நூல்கள்; வாசகனின் விருப்பத்திற்கு வளைவதற்கு பத்திரிகைத் தொடர்கள் - ஸ்டேட்மண்ட் சரியா...?

    பத்திரிகைத் தொடர்களில் எல்லாவிதமான விஷயங்களையும் எழுதமுடிவதில்லை என்பது உண்மைதான். அதோடு ஒப்பிடுகையில், நேரடிப் புத்தகங்களில் கனமான தலைப்புகளைக் கையாளமுடிகிறது.

    ஆனால், புத்தகங்களை, அவை பேசும் தலைப்புகளுக்காகவே காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பத்திரிகைத் தொடர்களின் விஷயம் அப்படியில்லை. எல்லாவிதமானவர்களுக்கும் பொருந்தும்படியாக எழுதவேண்டியிருக்கிறது, கலகலப்பான உதாரணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், துணுக்குச் செய்திகளில் கவனம் கவரவேண்டியிருக்கிறது. அதேசமயம், தகவல் ஒழுங்கு சிதறிவிடாமலும் சொல்ல வந்த விஷயம் நீர்த்துப்போய்விடாதபடியும் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

    இப்படி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தாலும், பத்திரிகைத் தொடர்களின் வீச்சு அதிகம் என்பதால், No Complaints!

    ***

    என். சொக்கன் ...
    20 06 2006




    | |

    Absolut Navya Torture

    82 குப்பிகளை ஒளிச்சு வச்சிருக்காங்க (ஆட்டத்தை ஏமாற்ற மாதிரிப் படம் கீழே உள்ளது). கொடுக்கப்பட்ட நேரத்தில் என்னால் 20-ஐ மட்டுமே சுட முடிந்தது. உங்களால் அத்தனையும் கண்டுபிடிக்க முடியுமா?

    அருமையான போதை ஏற்றும் ஆட்டம். (துப்பு காட்டியவர்)





    பாரதிராஜாவை 'கல்லுக்குள் ஈர'த்துடன் மூட்டை கட்டியது போல் 'செண்ட்டி சோகர்' சேரனையும் எப்பொழுதோ இயக்கத்தோடு நிறுத்தி வைத்திருக்க வேண்டும். இப்போது நிலைமை எல்லை மீறிவிட்டது :-)





    படத்தைப் பாருங்கள்...
    கவிதை தாருங்கள்...

    என்னோட சின்னஞ்சிறு கதை:

    சென்னைக்கு தொலைபேசி.

    'என்னம்மா எப்படி இருக்கே?'

    'சொல்லுடா... இங்கேயிருந்து என்ன வேணும்?'

    'கோபுரம் சீயக்காய் தூள் வேணுமே... போஸ்ட்டில் அனுப்புகிறாயா?'

    வாசல் கதவு தடதடத்து அதிர்ந்தது.

    'அம்மா... அப்புறம் பேசறேன்.'

    ஓடிப் போய் திறந்தேன். கைதானேன்.
    தொடர்புள்ள செய்தி: அமெரிக்க நகரில் வானுயர் கட்டிடங்களை தாக்க முயற்சி






    | |

    Chakkaa Maara

    கப்பி பய அழைத்ததற்கு நன்றி. என்னுடைய ஆறு:

    சேவை நிறுவனங்களுக்கு வருட சம்பளத்தில் ஒரு சதவிகிதமாவது மேற்கத்திய நாடுகளில் ஈந்து வருகிறார்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுவதை மாதாந்திர செலவாக செய்கிறார்கள். கத்ரீனா, நிலநடுக்கம் போன்ற அழிவுகளின் சமயம் மட்டும் அல்லாமல், எப்போதும் உதவிக் கொண்டே இருக்கும் மனம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

    1. Sneha India - How You Can Help: தற்கொலையின் விளிம்பில் இருப்பவர்களை காக்கும் அமைப்பு. தொலைபேசியில் உறுதுணை ஆலோசனை, விழிப்புணர்வு என்று கடந்த பதினேழு ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஸ்னேஹாவைத் துவக்கிய லஷ்மி விஜயகுமார், தற்போது சன் டிவியிலும் மனநலக் குறிப்புகளை 'வணக்கம் தமிழக'த்தில் சொல்லி வருகிறார். (மறை வெளியீடு: என்னுடைய சகோதரன் ஸ்னேஹாவில் தன்னார்வலராகவும் பொறுப்பாளராகவும் இயங்கி வருகிறார்.)

    2. DISHAA.ORG: பிட்ஸ், பிலானியிலும் சாந்தோம் பள்ளியிலும் இணைந்து படித்த சகாவினால் நடத்தப் படுகிறது. எளிய முறையில், மிகமிகக் குறைவான நிர்வாகச் செல்வுகளுடன் சேவை நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள்.

    3. AID - Home: நேரடியாக இவர்களின் நடவடிக்கையைக் காணும் வாயப்பு கிடைத்திருக்கிறது. தன்னார்வலர்களில் பலர் மேற்கத்திய நாடுகளில் இருந்து, உவப்புடன் கிராமப்புறங்களில் தொண்டாற்றி வருகின்றனர்.

    4. Udavum Karangal: அனைவரும் அறிந்த, நம்பிக்கையான அமைப்பு. நம்முடைய பணம் எவ்வாறு சென்றடைகிறது என்பதை தொலைபேசியில் உரையாடவும் செய்யலாம்.

    5. Save the Children: Helping Children in Poverty and Children in Crisis: நான் வேலை பார்க்கும் நிறுவனம் போல் பல நிறுவனங்களில் செஞ்சிலுவை மற்றும் சேவ் தி சில்ரன் போன்ற அமைப்புகளுக்குக் கொடுக்கும் உதவியை இரட்டிப்பாக்குமாறு matching செய்கிறார்கள்.

    6. Child Aid Foundation: குழந்தைத் தொழிலாளிகளைத் தவிர்க்க உதவுகிறார்கள். நண்பர்களில் பலர் ஆர்வமுடன் பங்கெடுக்கும் அமைப்பு.




    ஆறு மேற்கோள்கள்; மொழிபெயர்ப்பவருக்கு நன்றிகள் :-)
    1. He wrapped himself in quotations- as a beggar would enfold himself in the purple of Emperors.
      - Rudyard Kipling

    2. Never interrupt your enemy when he is making a mistake.
      - Napoleon

    3. In the part of this universe that we know there is great injustice, and often the good suffer, and often the wicked prosper, and one hardly knows which of those is the more annoying.
      - Bertrand Russell

    4. There is a luxury in self-reproach. When we blame ourselves we feel that no one else has a right to blame us.
      - Oscar Wilde

    5. Before we set our hearts too much upon anything, let us examine how happy they are, who already possess it.
      - Francois de la Rochefoucauld

    6. A witty saying proves nothing
      - Voltaire



    | |

    Tamil Movie Songs f***in rock maan!

    விவிதபாரதியில் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பினால், வானொலி வீட்டில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். காலையில் இத்தனை மணிக்கு இன்ன விளம்பரம் என்று அத்துப்படி. சில விளம்பரங்களைக் கேட்டால், பள்ளிக்கூடத்துக்கு வெகு தாமதம் என்று வயிற்றைக் கலக்கும்.

    விளம்பரதாரர் நிகழ்ச்சியில் 'உங்கள் பிரபு' என்று அட்டகாசமாய் எதிரொலியுடன் சொல்வார்கள். 'சம்சாரம் அது மின்சாரம்' படத்திற்கு 'எது பிடித்த பாடல்' என்று போட்டி வைப்பார்கள். 'வாடீ என் கப்பக்கிழங்கே' பாடலைத் தடை செய்தாலும், 'அலைகள் ஓய்வதில்லை' வெளிவந்த அன்றே 'ஆயிரம் தாமரை மொட்டுகள்' பலமுறை ஒலித்தது.

    சாயங்கால நிகழ்ச்சி ரசனையாக 'நிலாப் பாடல்கள்; சகலகலா வல்லவனில் இருந்து 'அம்மன் கோயில் கிழக்காலே..' ஒலித்த பின் அதன் தொடரும் பாடலாக சென்ற பாடலின் துவக்கத்தைப் படத்தின் தலைப்பில் கொண்ட திரைப்படத்திலிருந்து 'சின்ன மணிக் குயிலே'; நாகேஷ், முத்துராமன் என்று ஒரு நடிகரின் பாடல்கள்; ஷைலஜா, சசிரேகா என்று ஒரு பாடகரின் தொகுப்பு; மெட்ராஸ், காசி என்று ஊர்களின் அணிவரிசை; இயக்குநர்களின் முத்திரைப் பாடல்கள்; ஒத்த சூழ்நிலை (அனைத்துப் பாடல்களும் ரேடியோ பதிவாக அல்லது மேடைக் கச்சேரியாக அல்லது எடக்கு மடக்கு எசப் பாட்டாக); ஒவ்வொரு நாளும், இன்று என்ன pattern என்று கண்டுபிடிப்பதே சுகம்.

    அடுத்த நாள் பரீட்சை இருந்தாலும் பாடல் ஒலிக்காவிட்டால் பாடம் ஓடாது. 'இவனுக்கு இளையராஜா இசையமைத்தால்தான் சயின்ஸ் ஒப்பிக்கப் போறான்' என்று கோபம் தெறித்தாலும், வானொலியை யாரும் நிறுத்தியதில்லை. தேனிசையாக மும்மதப் பாடலுடன் தொடங்கி, 'புத்தம்புதுசு' என்று புதுப்பட விளம்பரத்துடன் முடியும் விவிதபாரதியுடன் வாலிபம்.

    பாடலைப் பல முறை கேட்டு மட்டுமே இருப்பதால், காட்சியை வெள்ளித் திரையிலோ தூர்தர்சனிலோ பார்க்கும்போது சில சமயம் ஏமாற்றமும் பல சமயம் கற்பனைக்கேற்ற திருப்தியும் கிடைக்கும். பாடலே கேட்டிராமல் முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்த்த அனுபவம் நிறைய உண்டு. அதன் பின் மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்பது இன்னொரு ரகம்.

    ராஜாவின் பாடல் என்றால் கண்ணை மூடிக் கொண்டு காஸெட் வாங்கச் சொல்லுவேன். மாதத்திற்கு மூன்று/நான்கு இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள் வெளிவரும். கோவைத் தம்பி, ஆர் சுந்தர்ராஜன், விஜயகாந்த், ஆர்வி உதயகுமார், கங்கை அமரன் என்றால் ராஜா ஸ்பெஷலாக போட்டிருப்பார் என்பது நம்பிக்கை. சந்திரபோஸும் சங்கர்-கணேஷும் எப்பொழுதாவது ஓரிரு பாடல்களை முணுமுணுக்க வைப்பார்கள்.

    படித்த தெர்மோடைனமிக்ஸ் விதிகள் மறந்தாலும் தெம்மாங்குப் பாடல்களின் மெட்டும் வரிகளும் எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

    என்றென்றும் அன்புடன் பாலா தான் அடிக்கடி இந்த மாதிரி பல்லவியும் சரணமும் நடத்துவார். பாடல் நடுவே வரும் சரணங்கள் இங்கே. படமும் பல்லவியும்???

    எல்லாமே மிகவும் விருப்பமான பாடல்கள். சோகம் ததும்பும் துக்கப்பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும், அழுது வடியாமல் இருக்க ஓரிரண்டு குத்துப் பாடல்களை சேர்த்துள்ளேன். ராஜாவாக ரொம்பி வழிந்ததில் இருந்து சிலவற்றை கழித்து காதல் டூயட் ஒன்றிரண்டை கூட்டி, தற்காலம் என்று சேர்த்து பாடல் மிக்ஸ் ரெடி:


    1. பாவை வண்ணம் கோவில் ஆகும்
      ...
      மாலை வண்ணம் கைகள் ஆகும்

    2. கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா
      இல்ல முதுகு தேய்க்கவா
      ...
      சின்னக் காம்புதானே பூவை தாங்குது


    3. 'கிருதாவை வைக்கச் சொன்னியே
      வெச்சேனே...

      மீசையத்தான் எடுக்கச் சொன்னியே
      எடுத்தேனே...

      பந்தான்னு நான் நெனச்சேன்
      என்னை பாகவதராக்கிப்புட்டியே


    4. நாயரு மேயராகும் எழுத்து மாறினா
      லோயரும் அப்பருதானே எழுத்த மாத்தினா
      சின்னச்சின்னத் தலையில் நீ எழுதும் எழுத்தில
      என்னன்னமோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியலே


    5. ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே
      ...
      என்னை உன்னைக் கேட்டா வாழ்க்கைப் பயணம் போகுது?


    6. தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
      கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
      பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்
      அந்த மேகம்தன்னில் ஏது நீ சொல்வாய் கண்ணா
      ...
      ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தரநிலவோ
      நாளும் நிலவது தேயுது மறையுது
      நங்கை முகமென்று யாரதை சொன்னது


    7. முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
      முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
      நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
      மேனியெங்கும் பூ வசந்தம்


    8. வயசோட வந்ததெல்லாம் வெளங்கலியே அப்போது
      விளங்காத கேள்விக்கெல்லாம் விடை வருதே இப்போது
      கருப்புமில்லே வெளுப்புமில்லே
      கண்ணுலதானே பேதமிருக்கு


    9. கங்கை நீயென்றால் கரை இங்கு நானடா


    10. கனவிலாடும் நினைவு யாவும் இனிய பாவம்



    | |

    வியாழன், ஜூன் 22, 2006

    Chat Meet - Peyarili

    இலங்கை-ஈழம் குறித்த என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்த பெயரிலிக்கு நன்றி.


    இலங்கையை விட்டு நான் வெளியே வந்து பதினான்கு ஆண்டுகள். ஊருக்குப் போய் பத்தாண்டுகள். இந்நிலையிலே, ஈழம் குறித்த அண்மையநிகழ்வுகளின் நேரடி அனுபவம் என்னிடமில்லை. ஆக, அங்கே வாழ்ந்த கால உணர்தலும் தொடர்ந்து ஈழம் குறித்து அவதானிப்பதும் அங்கிருக்கும் நண்பர்களோடான தொடர்புமே கைவசமுள்ளவை. அதனால், இக்கேள்விகளுக்கு என்னைவிட இணையத்திலே பல ஈழ நண்பர்கள் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பதிலளிக்கலாம். இப்பதிவின் பின்னூட்டத்திலே பதில் தருவார்களென நம்புகிறேன்.

    1. தற்போதைய ஈழப் பிரச்சினை எந்தப் பாதையில் செல்கிறது?

    பொதுவிலே கண்காட்சிகளிற் கிணற்றுக்குள்ளே வண்டி ஓட்டுகின்ற பாதையிலேதானெனத் தோன்றுகின்றது. மேலும் கீழுமாக எந்நிலையிலும் சமனம் தப்பினாற் சரியுமென்ற ஆபத்தான பாதையின் கிணற்றைவிட்டு வெளிவராமல் ஓடிக்கொண்டிருக்கின்றதெனலாம். ஏதோவிதத்திலே பெயரளவிலே ஒப்பந்தமும் நடைமுறையிலே மறைமுகப்போருமான இந்தக்காலகட்டம் கடக்கப்படும். இவ்வாண்டுக்குள்ளே கடந்து ஒரு தெளிவான நிலை ஏற்படுமென்றே நினைக்கிறேன். தெளிவான நிலை என்றால், விரும்பப்படாத வெளிப்படையான போராகவே இப்போதைய காரணிகளை வைத்துப் பார்க்க எனக்குத் தோன்றுகிறது.

    2. சூடான் போன்ற படுகொலைகளும் ஈராக் போர் அநியாயங்களும் கூட இந்திய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் பரவலான கவனிப்பைப் பெற்று ஐ.நா. தீர்வை எதிர்நோக்குகிறது. ஈழத்தில் இவ்வாறு தார்மீகக் கோபமும் ஒப்பந்தத்தை நோக்கிய பயணமும் எவ்வித செயல்பாடுகளினால் நிகழக்கூடும்?

    கவனிப்பு என்பது ஒவ்வொருவரினதும் ஈடுபாட்டினைப் பொறுத்துத் தோன்றுவது. இலங்கை குறித்து ஐநாவும் உலகவூடகங்களும் அறியாதனவல்ல. முதலிலே உலக அரங்கிலே இலங்கைப்பிரச்சனை குறித்த சரியான விளக்கம் உலக மக்களிடமும் முறையான அணுகுமுறை அரசாங்கங்களிடையேயும் ஏற்பட வேண்டும். மேற்கத்தைய ஊடகங்களுக்கு இலங்கை குறித்த ஈடுபாட்டுக்கான தேவை, சூடான், ஈராக் போல இல்லை. இந்திய ஊடகங்கள் - என்னைப் பொறுத்தமட்டிலே- இலங்கைப் பிரச்சனையிலே ஒரு சார்நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றன. இச்சார்நிலைப்பாடுக்கு இந்திய அரசும் விடுதலைப்புலிகளும் ஒரு வகையிலே தூண்டுதலாக இருக்கின்றனர். இலங்கைப்பிரச்சனையின் தீர்விலே தமக்கு ஈடுபாடிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் உலக அரசுகள் பலவற்றுக்கு தம் இலாபம் கருதிய நிலைப்பாடுகள் உண்டு. நோர்வே, ஐஸ்லாந்து தவிர்ந்த மிகுதி நாடுகளின் அரசுகள் இங்கே அடக்கம். இவ்வகையான நிலைப்பாடின் விளைவே, இலங்கைப்பிரச்சனையின் இரு தரப்புகளையும் சமனாகக் கருதாமையும் நடத்தாமையுமாகும். கதிர்காமர்-எதிர்-பரராஜசிங்கம், கௌசல்யன்-எதிர்-பொன்சேகா, வங்காலை,பேசாலை,மட்டக்கிளப்பு, திருகோணமலை, அல்லைப்பிட்டி -எதிர்-கெப்பற்றிபொலாவ இப்பாதிப்புகளின்பின்னே உலக அரசுகளும் ஊடகங்களும் நடந்து கொண்ட முறைகளைப் பார்த்தீர்களானால், இப்பாரபட்சநடத்துதல் குறித்துத் தெளிவாகத் தெரியும். விடுதலைப்புலிகளுக்குத் தடைவிரித்த உலக அரசுகள் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தையிலே ஈடுபட வற்புறுத்துதலும் தமது கண்காணிப்பாளர்களைச் சேவையாற்ற வைப்பதும் அபத்தத்தின் உச்சம். இவற்றினை இவ்வரசுகள் நிச்சயமாக அறியாதனவல்ல. இலங்கை அரசுக்கு ஆயுத உதவியினையும் பொருளாதார ரீதியிலான கடனையும் ஈழச்சிக்கலின்மீதான மனிதவுரிமைக்கேடுகள் குறித்து எக்கேள்வியுமின்றித் தரும் நாடுகளிருக்கின்றன.

    இந்நிலையிலே அகில அரசுகள் கடந்து தம்மை மக்களிடையே நன்முகத்தோடு அறியச்செய்ய விடுதலைப்புலிகள் முயலவேண்டும். இதற்கு அவர்கள் தமது சிறிய தவறுகளையும் தம் ஆதரவாளர்கள் சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளையும் களைந்தெடுக்க முயலவேண்டும். இன்றைக்கு அவர்களுக்கு அவசியம் தேவையானது, தடைசெய்த ஐரோப்பிய ஒன்றியக்கண்காணிப்பாளர்களை அனுமதிக்கமாட்டோமென்ற தர்க்கம்பொருந்திய பதிலடி தரும் இராஜதந்திரமும் மிகவும் பசுத்தோல் போர்த்திய காருண்ய விளம்பரமுகமுமே. வெறும் முகத்திலடித்தாற்போன்ற பேச்சுகள் நெடுங்கால நோக்கிலே கெடுதலையே விளைவிக்கும். மேலாக, தற்போது நிகழ்ந்து வரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் நல்லனவெனிலுங்கூட, அது எமக்குள்ளே கூடிப் பழங்கதை பேசுவதாக முடிவடைந்து விடுகின்றன. அதற்கு அப்பாலும், உலகநாடுகளிலே மக்களிடம் சென்றடைய, உலகநாடுகளிலே தம் நலனைக் காத்துத்தரக்கூடிய பலம் பொருந்திய தமிழரல்லாத நண்பர்களை ஈழத்தமிழர் தரப்பு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    3. 'வாட்டர்', 'நோ மேன்ஸ் லாண்ட்', 'ஹோட்டல் ருவாண்டா' போன்ற பல திரைப்படங்கள் தற்கால கொடூரங்களை சினிமா மூலமாக எளிதில் அணுகச் செய்கிறது. இலங்கை-ஈழம் நிலை குறித்த சினிமா இருக்கிறதா? ஏன் பரவலாக படைப்பாளிகளையோ பார்வையாளர்களையோ சென்றடையவில்லை?

    In the name of Buddha ஞாபகத்துக்கு வருகின்றது. விதானகேயின் Pura Handa Kaluwara (Death on a Full Moon Day) இனையுஞ் சொல்லலாம். இன்னும் சில குறுந்திரைப்படங்களைக் கண்டிருக்கின்றேன். அப்பால்-தமிழ்.கொம் இலே கண்டவை. ஈழத்தமிழர்களின் உள்வட்டத்துள்ளே சுழலும் குடும்பம்-பாசம்-போர்-இழப்பு போன்றவை கலந்த உணர்வுமயப்பட்ட படங்கள் குறித்து வாசித்திருக்கின்றேன். தெனாலி, கண்ணுக்குள் முத்தமிட்டால், (நந்தா) போன்ற திரைப்படங்கள் தமிழகத்திலேயே வந்தாலுங்கூட, கதைமையப்படுத்தப்பட்ட புள்ளிகளையிட்டு ஈழப்பிரச்சனை கவனிப்புக்கு உள்ளாகாமற்போகிறன; அல்லது, எதிர்விளைவுகளையே ஏற்படுத்துகிறது. நேர்முகமானதல்லாத Terrorist, அமெரிக்காவிலே வரும் வாரம் தொலைக்காட்சியிலே வரவிருக்கும் "No more tears Sister" போன்ற விவரணம்சார் படங்களும் எதிர்விளைவினையே ஏற்படுத்துமென்றபோதிலுங்கூட, அவற்றினையும் காணவேவேண்டும். மூன்றாம் உலகநாடுகளின் துயரைப் படமாக்கினால், அவற்றோடு ஏதோவிதத்திலே சம்பந்தப்பட்ட முதலாமுலகநாடுகளிலே குற்றவுணர்வினைக் குறைக்கவும் விற்பனைக்கும் உதவும். ஈழம் குறித்து தெனாலி வந்த வேளையிலே, புகழேந்தி வெளியிட்ட "காற்றுக்கென்ன வேலி"யை உணர்வோடு சம்பந்தப்பட்ட தமிழகத்திலேயே தணிக்கைக்குழு அமுக்கிவிட்டது. விற்பனையை முன்னிறுத்தும் உலக அரங்கிலே என்னத்தை எதிர்பார்க்கலாம்?

    ('வாட்டர்' தற்காலக்கொடூரங்களைச் சொல்கிறதா? :-))

    4. விடுதலை இயக்கங்கள், தமிழகத் தமிழர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்த வரலாறு, 1983, இராஜீவ் என்று செறிவாக, அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் எளிதாக அறிய விரும்புபவருக்கு தாங்கள் எந்தப் புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்கள்? இவற்றை எங்கு/எப்படி பெறலாம்?

    போன ஆண்டு இரண்டு பக்கங்களையும் பார்த்துக்கொள்ளுங்களென ஒரு பட்டியல் தந்தேனே :-) தொலைந்துவிட்டதா?

    Check for any book by Dr. Stanley Tambiah, Dr. Manoharan for contemporary histroy. However their writing mainly came from Tamil point of view. (Both are dead in the last five years)

    There are number of other books. For ancient history, number of books are there. Let me check get a list soon. Gowever in the internet there are some interesting readings;

    One by one Gunaratnam (on ancient history), and ther other by one T. Sabaratnam (still continues in Sangam.org, on Pirapakaran; His writing should be read along with Dr. Sankaan Krishna's books on Sri Lanka-India and Narayanaswamy's book on PirapAkaran, as they two have anti-LTTE stand). On Sri Lankan Refugees, there is a book by a Swedish/ Norwegian lady, who did her PhD on their plaight.


    Sri Lanka: Witness to History - A Journalist's Memoirs, 1930-2004
    by Subramaniam Sivanayagam ISBN 0-9549647-0-5 : hard cover, 700 pages
    - published, 2005, by Sivayogam, 180-186, Upper Tooting Road,
    London, SW17 7EJ
    - UK£20, USA $40, Canada $50, Australia $50, Europe - euro 30
    - for contact and book inquiries: info@orupaper.com
    - you may buy this book online at: http://www.orupaper.com/witness/

    Another film to be added: THE FORSAKEN LAND (it shows in ny this weekend)

    5. இலங்கையில் சுமுகமான அமைதி திரும்ப (status quo) தமிழகத்
    தமிழர்கள் என்ன செய்யலாம்?


    தமிழகத்தமிழர்கள் என்ன செய்யலாமென்பது குறித்து என் விருப்பு வெறுப்பு கலந்து நான் கருத்துத் தெரிவிப்பின், அராஜகவாதி ஆகிவிடுவேனாதலால், இலங்கையிலே சுமுகமான அமைதி திரும்ப தமிழகத்தமிழர்கள் தமக்கும் இலங்கைக்கும் சரிப்படுமெனத் தோன்றுவதைச் செய்யலாமெனச் சொல்லிவிடுகிறேன் ;-)



    | |

    Ash or Not

    கப்பல் கவிழ்ந்த மாதிரி தலையில் கை. திரைச்சீலை போல் ஆடை. கழுத்தை இறுக்கும் கொடி. எதிர்மாறாக, நகை விளம்பர மாவிலை ஆபரணம்.

    போர்வை மெத்தை விளம்பரமோ...? சீயக்காய்த் தூள் விளம்பரமோ...? ஏதாவது ஜுவல்லரியின் புது வரிசை அறிமுகமோ...? தலைவலி? ஜன்னல் மறைப்புத் துணி? லேஸிக் சிகிச்சை... வியர்வைத் தடுப்பான்...

    எந்த விளம்பரத்தில் இந்த இரண்டு புகைப்படங்கள் பொருந்தும்?

    நண்பனுடன் வாக்குவாதம்.

    நான் இந்தப் புகைப்படத்தை பார்த்து 'இவர் ஐஷ்வர்யா ராய்'க்கு டூப் போடுகிறவர். ஐஸ்வர்யா ராய் அல்ல' என்கிறேன்.

    நண்பனோ நூறாயிரம் பென்னி பெட் கட்டுகிறான்.

    நிச்சயம் முன்னாள் உலக அழகி ஐஷ்வர்யாவேதான் என்கிறான்.

    என்னுடைய சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

    உங்களுக்காவது நிச்சயமாகத் தெரியுமா?

    கையில் மச்சம் இருக்குமாமே (அல்லது தழும்பா?) கண்ணில் படுகிறதா?

    ரொம்ப நேரம் உற்றுப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் ஆக்கிடாதீங்க...

    ஆனால், என் சந்தேகத்திற்கு விளக்கம் சொன்னால் தன்யனாவேன் சாமீ!








    | |

    Today's 'The Hindu'

    நேற்றைய 'ஹிந்து'வில் என்னைக் கவர்ந்த செய்திகள்:

  • New elite of super-rich in developing nations: "high net-worth individuals" (HNWI) - பணக்காரன் மேலும் கொழுக்கிறான்.

  • Petitions against election of 4 MLAs: நத்தம் ஆர் விஸ்வநாதன், மதுரை நன்மாறன், அதிமுக எம்.எல்.ஏ. ஆர் சின்னசாமி, மேட்டுப்பாளையம் ஓ கே சின்னராக் ஆகியோர்.

  • Toronto's interest in "Pudupettai": பார்ப்பவர்கள் பரவசமடையும் புதுப்பேட்டை.

  • BEST SELLERS: புனைவு மற்றும் கட்டுரைப் புத்தகங்களின் இந்தியாவுக்கான தலை ஆறு பட்டியல்.

  • The Future of India, Hindustani Music, Lahore: சுருக் புத்தக அறிமுகங்கள்

  • Capital matters!: டெல்லியில் ஃபனா படம் பிடித்த கதை

  • Mukesh Tyagi in Madhur Bhandarkar's "Corporate": இவருக்கு வாய்த்தது போல் எனக்கும் 'கலாபக் காதலன்' ஆர்யா போல் நடிக்க ஆசைதான்.

  • Small is beautiful: மல்டிப்ளெக்ஸ் உலகத்தின் நடுவே டெல்லியில் குட்டி திரையரங்கம் தொடங்குகிறார்கள்.

  • Delhi medico Sushil K. Chaudhry's "Thrills, Throbs and Murmurs": கதையல்ல... கேட்க கூச்சப்படும் அந்தரக மருத்துவ சமாச்சாரங்களின் விளக்கங்கள் என்கிறார்.

  • Bharat Bhushan Gupta's "India Through Ages": மொஹஞ்சதாரோ ஆரம்பித்து மோகன் பகான் வரை ஐயாயிரத்து சொச்ச ஆண்டு வரலாறு.

  • A.K. Chettiar's 'Mahatma Gandhi - A Twentieth Century Prophet': மதுரையின் காந்தி அருங்காட்சியகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏகே செட்டியாரின் ஆவணப்படம்.

  • Nutty the cameraman has turned actor with Udayabhanu Maheswaran's gangster movie "Naalai": ப்ளாக் ஃப்ரைடே, பரிநீதா என்று படம் பிடித்தவரை நடிக்க வைத்த கதை.

  • Naan Kadavul : செல்வன் பற்றிய செய்தி அல்ல; பாவனா & ஆர்யா நடிக்கும் பாலாவின் அடுத்த படம்.

  • Unfazed by the hurdles of life: தோல்வி நிலையென நினைத்தால்... தீபாவிற்கு தேவைப்படும் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க யாரை நாடுவது?



    | |

  • Year Old Mixture

    சென்ற வருடத்தில் வலை மேய்ந்ததில் எனக்குப் பிடித்ததாக பட்டதை, சேமித்து வைத்த 'ஸ்னாப் ஜட்ஜில்' இருந்து:


    1. தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள் :: என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ்

    2. And Your Point Is?: Changing Lives - புதிய தொண்டு நிறுவனம் குறித்து ரவி

    3. Living Cheap - Scott Laningham : சொவ்வறையில் எவ்வளவு பயன்களை அடைக்கலாம்? எப்போது பீலிபெய் சாகாடும் அச்சிறும்?

    4. ரஜினிகாந்த் ஓர் அசாதாரணப் பிறவி - ஏவியெம் சரவணன் :: கல்கி

    5. இன்று ஒரு ஏ ஜோக் - பூதம் கொடுத்த வரம் :-)))

    6. 'சத்யமேவ ஜெயதே' - ராஜாஜி : கல்கி

    7. முதுகில் குத்தாதீங்க :: கொந்தளிக்கிறார் கமல் : கல்கியில் கமல்ஹாசன் பேட்டி

    8. உலகளாவிய வர்ணாசிரமம் - கே.என். ராமசந்திரன்

    9. "தலித்களே... ஊரைவிட்டு வெளியேறுங்கள்!" - விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கத்துக்கு அஞ்சலி - எஸ்.உமாபதி in ஜூனியர் விகடன்

    10. மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது - சுஜாதா

    11. அழுத கண்ணீர் :: நரசய்யா - ஆனந்த விகடன் சிறுகதை



    | |

    Thamizmanam for Sale

    தமிழ்மணம் - விற்பனைக்கு
    (இந்த வாரத் தமிழோவியத்தில் வெளியான கட்டுரை)

    தமிழ்மணம் இணையத் தளமும் முழுக்க முழுக்க தமிழில் இயங்கும் வலைதிரட்டியும் acquisition target-ஆக மாறுவதற்கான அறிவிப்பை இங்கே காணலாம்: தமிழ்மணம் அறிவிப்புகள்: ஏன் ஏன் ஏன்?

    அமெரிக்காவில் 90-களின் இறுதி போல் உற்சாகம் கரைபுரளாவிட்டாலும், வெப் 2.0 என்று மிதமான ஆவலுடன் களமிறங்கும் கம்பெனிகள் பெருகி இருக்கிறது. வலைப்பதிவு, கூட்டுப் புழு சோஷியல் நெட்வொர்க்கிங், செய்தியோடை, புத்தகக் குறி, அடையாளக் குறி (tags), வாசகர் வாக்கெடுப்பின் அடிப்படையில் முக்கியமான பதிவுகள், அஜாக்ஸ் போன்ற நவீன நுட்பங்கள் என்று நாலைந்து அடிப்படைகளை விதவிதமாக மிக்ஸ் செய்து சாம்பார், ரசம், கூட்டு, கறி, பொறியல், பொடிமாஸ் என்று காப்புரிமை பெற்று வருகிறார்கள்.

    BRIC என்று நாடுகளின் முதலெழுத்தை சுருக்கமாகக் கொண்ட ப்ரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா நாட்டு நிறுவனங்களுக்கு மதிப்பு இன்னும் அதிகம். கூகிள், யாஹ¥ மற்றும் மைக்ரோசா·ப்ட் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது அமெரிக்காவில், ஆங்கிலத்தில் புதிதாக செய்திருந்தால், 'நான் முதலா... நீ முந்திக் கொள்வாயா' என்று கபளீகரம் செய்ய போட்டா போட்டி நிலவுகிறது.

    இந்த மாதிரி நிலைமை தமிழகத்தில் இன்னும் சென்றடையவில்லை. இந்த நிலையில் தமிழ்மணம் வாங்குவதால் லாபமா? நஷ்டமா?


    தமிழ்மணம்.காம் பெறுவதால் என்ன லாபங்கள்:

  • சிறிய மீன். இன்னும் பூதாகாரமாக வளரவில்லை. வளர்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

  • தமிழ்நாட்டில் (மற்றும் இந்தியாவில்) பெருமளவு இணையப் பயன்பாடு இன்னும் சென்றடையவில்லை. தாத்தா/பாட்டிகள் மின்னஞ்சலையும், இளசுகள் அரட்டையும், மத்தியமர் தொழில் நுட்பத்திற்காகவும் பயன்படுத்தினாலும், ஈ-பே, அமேசான் போன்று வலை தாதாக்கள் என்று யாரையுமே சொல்ல முடியாது. இந்த நிலையில், தமிழ்மணத்தை அடித்தளமாகக் கொண்டு, பத்து கோடித் தமிழர்களை சென்றடையும் வாய்ப்பு இருக்கிறது.

  • ஐநூறுக்குக் குறையாத வலைப்பதிவர்களிடையே பரவலான பரிச்சயத்தைக் கொண்டது.

  • தினசரி ஆயிரம் பேருக்குக் குறையாமல வந்து செல்லும் இடம். ஒரு முறைத் தேடலில் வந்து விழுபவர்கள் கூட, மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வருகை புரிகிறார்கள். Repeat audience.


    ஒரு சில பாதகங்களை நோக்கலாம்:

  • அலிபாபா.காம் போன்று பெருஞ்செலவு செய்து ஸ்வீகரிக்க தமிழ்மணம்.காம் பரவ்¢ய பயனர்களைப் பெற்றிருக்கவில்லை.

  • ·பீட் ஆன் ·பீட்ஸ் போன்ற திறமூல நுட்பங்களினால் தயாரிக்கப்பட்டதால், நிரலியை யார் வேண்டுமானாலும் நிறுவி, சேவையைக் கொடுத்து விடலாம்.

  • தமிழ்மண வலைப்பதிவர்களோ, வாசகர்களோ... அவ்வளவு ஏன்? தமிழ் மக்களே இணையம் மூலமாக பொருள் வாங்குவதை உகந்து, இயல்பாக செய்வதில்லை. எம்பி3 அல்லது படங்களை இலவசமாக வலையில் இறக்கிக் கொள்ளுதல் போன்றவை எளிதாக எட்டுவதால், சினிமா மோகத்தைக் கூட பணமாக மாற்றி, அதன் மூலம் அமேசான் போல் லாபம் ஈட்டுவது கடினமான காரியம்.


    அடுத்ததாக தமிழ்மணம்.காம் எப்படி நிர்வகிக்க வேண்டும்? யார் முதலீடு செய்ய வேண்டும்? எப்படி பங்குதாரர் ஆவது? எவ்வாறு தன்னார்வலருக்கும் உரிமையாளருக்கும் வித்தியாசங்களை அடையாளம் காண்பது...

    இந்த அலசலுக்கு சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையின் க்ரெய்க்லிஸ்ட் ஒப்புமை உதவலாம். தமிழ்மணமும் க்ரெய்க் லிஸ்ட்டும் இருவேறு தளங்களில் செயல்பட்டாலும், அடிநாதம் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

    இருவருமே தன்னார்வலர்கள் மற்றும் பயனீட்டாளர்களை நம்பியுள்ளார்கள். இருவரிடமும் எண்ணிக்கையில் வெகு குறைவானவர்களே, முழு நேர வேலையாக ஈடுபட்டுள்ளார்கள்.

  • க்ரெய்க் லிஸ்ட் லாபம் ஈட்டுகிறது; தமிழ்மணம்.காம் வரி விளம்பரங்களை வெளியிடுகிறது.
  • தமிழ்மணம்.காம் லாபம் ஈட்டவில்லை; க்ரெய்க் லிஸ்ட் வரி விளம்பரங்களை வெளியிடுகிறது.என்பதுதான் முக்கிய வித்தியாசம்.

    தமிழ்மணத்தை வாங்குவோர் இந்த லாபமற்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களாக இருக்கக் கூடாது. என்றாவது மில்லியனர் ஆகி விடுவோம் என்னும் எண்ணத்தில், மாதந்தோறும் ஐயாயிரத்து சொச்சத்தை முதலீடாக எண்ணுபவர்களாக இருந்தால், வெகு சீக்கிரமே தமிழ்மணம் தன்னுடைய மணத்தை இழந்து விடலாம்.


    எனினும் தமிழ்மணத்தை தட்டி கொட்டி, உருச்சிதையாமல் மாற்ற விரும்பினால் என்ன செய்யலாம்?

  • சினிமா, இலக்கியம், அரசியல் என்று கன்னல்களை உருவாக்கலாம். இவற்றில் விளம்பரம் கொடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கலாம். மேம்படுத்தப்பட்ட கன்னலில், செய்திகள், வலைப்பதிவுகள், ·ப்ளிக்கர் போன்ற நிழற்படங்கள் என்று அனைத்தும் ஒருங்கேக் கிடைக்கும்.

  • சாதா பயனர், ஸ்பெஷல் பயனர் என்று இருவகைகளை உருவாக்கலாம். சாதா பயனரால் வலைப்பதிவுகளில் தேட முடியாது; பிடிஎ·ப் கோப்பாக்க முடியாது; சிறப்புப் பயனர் என்றால் தனி வண்ணத்தில் டக்கர் ஜிங்காக மிளிர்வார் போன்ற சலுகைகளைக் கொடுக்கலாம்.

  • ஆரெம்கேவி-க்கு தோழி.காம் செயல்படுவது போல், நல்லி, மூட்ஸ், ஆச்சி மசாலா பொடி என்று எல்லாருக்கும் தமிழ்மணம் சிறப்பு பாதைகளை அமைத்துக் கொடுத்து, விளம்பரதாரருக்குப் பொருத்தமான பதிவுகளை ஸ்பெஷலாகத் தொகுக்கலாம்.

  • தற்போது ப்ளாக்தேசம் இயங்குவது போல், தமிழ்மணத்தின் ·பீட் ஆன் பீட்ஸ் நிரலியை வைத்துக் கொண்டு, வங்காளம், தெலுங்கு, கன்னடம் என்று பிற மொழிகளுக்கு சேவையை நீட்டிக்கலாம். சி·பி.காம் போல் ஒற்றை சாளர அடிப்படையில், இந்தியரை தமிழ்மண வலைக்குள் வீழ்த்தலாம்.

  • அதிகம் அறிமுகமில்லாத அச்சு சேவைகளுடன் கை கோர்க்கலாம். அவர்களினால், தமிழ்மணம்.காம் ஏப்பம் விடப்படும் சாத்தியக்கூறுகளும் இதில் உண்டு.


    கடைசியாக கருத்தில் கொள்ள வேண்டியவை

  • அரச மரத்தை சுற்றிவிட்டு குழந்தைப் பெற்றுக் கொள்வது போல், 'தமிழ்மணம்' காசியின் மதிப்பை பார்த்து விட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் குழந்தை பிறக்காது. ஐந்தாண்டுகள், கருமமே கண்ணாக நேரமும் காசும் செல்வழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

  • காசி பயன்படுத்திய மை சீக்வல், ஸ்கிர்ப்டிங் போன்ற நிரலிகளில் போதுமான அளவு பட்டறிவும், அதிக அளவு ஆர்வமும் அவசியம் வேண்டும்.

  • இந்தியாவில் ஆள் போட்டு மேய்த்தல், வக்கீல்களுக்கு செலவழித்தல், முறையீடுகளுக்கு செவிமடுத்தல், நுட்பக் கோளாறுகளுக்கு துரித விடையளித்தல், பங்குதாரர்களுக்கு பதிலளித்தல், விளம்பரதாரர்களுக்கு விளக்கமளித்தல் என்று மண்டை காய்தலுக்கு உவப்புடன் ஈடுபட வேண்டும்.

  • தன்னார்வலர்களைப் பெருங்கூட்டமாக வைத்துக் கொண்டு, உள்கட்சிப் பூசல், காங்கிரஸ் கோஷ்டி போல் தொண்டர்களை விடத் தலைவர்கள் அதிகம் கொண்ட நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ள, நெருங்கியத் தொடர்புள்ள மிகச்சிலரே ஈடுபட்டிருக்க வேண்டும்.

  • மைக்ரோசா·ப்ட்டை விட்டு பில் கேட்ஸ் விலகுகிறார் என்றாலும், ஏதாவது பொறுப்பில் எங்கிருந்தாவது கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார் என்பது போல், காசியும் தமிழ்மணம்.காமுடன் பின்னிப் பிணைந்திருந்தால் நலம்.

    தமிழ்மணம் குறித்து சென்ற ஆண்டு எழுதிய பதிவு: E-Tamil : ஈ - தமிழ் - அந்தக் காலத்தில் RSS இல்லை



    | |

  • புதன், ஜூன் 21, 2006

    Chat Meet - Aruna Srinivasan

    திசைகள் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன்:

    1. வலைப்பதிவர் பத்திரிகையாளராக என்ன முயற்சிகளை எப்படி எடுக்க வேண்டும்? டிப்ஸ் கொடுங்களேன்...

    முதல் தேவை - ஆர்வம். ஆர்வம்; மேலும் ஆர்வம்; எண்ணம் முழுவதும் அதில் லயிக்கும் ஆர்வம் - passion.

    அடுத்து, அந்த ஆர்வத்தை வகைப்படுத்துவது அல்லது குறிப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது. எழுதுவது என்பதில் பலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் சந்தைக்காக / பணம் ஈட்ட அல்லது தொழிலாக எழுத ஆசையா? ஏதாவது குறிகோளுக்காக எழுத ஆசையா? மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள ஆசையா? எழுதி பெயர் / புகழ் பெற ஆசையா? .... என்று இப்படி ஏராளமாக எழுதும் ஆர்வத்தை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

    ஏன் எழுதுகிறோம்? என்பதை நமக்குள் நாமே அடையாளம் கண்டுகொள்ளப் பழக வேண்டும். என்னிடம் வரும் பல இளைஞர்கள் முதலில் கேட்பது - 'நான் நிறைய எழுதுவேன். நிறையக் கதை எழுதியுள்ளேன்; கவிதை எழுதியுள்ளேன். எப்படி பிரசுரத்துக்கு அனுப்புவது என்று சொல்லுங்களேன் என்பார்கள். இவர்கள் ஆர்வத்தில் தவறில்லை. ஆனால் இது குல்லாய்க்கு ஏற்ற தலையைத் தேடும் ரகம். இன்று பெரும்பாலும் ஊடகங்களுக்கு எழுதுவது என்பது சந்தையில் விற்பது மாதிரிதான். சந்தைக்கேற்ற சாமான் விற்பது போல் சுயேச்சை பத்திரிகையாளர்கள் ஊடகச் சந்தைக்கு பண்டம் விற்பவர்கள். ஆங்கிலத்தில், வணிக மொழியில் சொன்னால் - Vendors. விதம் விதமான vendors செய்து கொடுக்கும் பாகங்கள் ஒருங்கிணைந்து நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பத்திரிகைகள் உற்பத்தியும் இப்படிதான். இன்னொரு விதத்தில் சொன்னால், சுயேச்சை பத்திரிகையாளர் ஒரு சுயேச்சை தையற்காரர் மாதிரி. யார் யாருக்கு எப்படி வேண்டுமோ அப்படி அளவெடுத்து அவர்களுக்கு ஏற்ற விதத்தில் உடையைத் தயாரித்து கொடுக்க வேண்டும்.

    எழுத்தாளராக வேண்டுமா? இலக்கியவாதியாக வேண்டுமா அல்லது பத்திரிகையாளராக வேண்டுமா என்ற தெளிவு முதலில் வேண்டும். இவற்றுக்குள் இருக்கும் வித்தியாசம் புரிய வேண்டும்.

    பத்திரிகையாளராகதான் என்று முடிவு செய்து விட்டால், அடுத்து என்ன துறையில் (அரசியல், வணிகம், பொழுதுபோக்கு, வாழ்க்கை / சமூக நிலவரம் - (Trends), சமூக மேம்பாட்டு விஷயங்கள், போன்றவை ) உங்கள் ஆர்வம் மற்றும் திறமை என்பதையும் சுய அலசல் செய்து அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் துறையைச் சார்ந்த பத்திரிகைகளை / ஊடகங்களை கவனமாக "படியுங்கள்" - பாடம் படிப்பதுபோல. ஒரு வாசகராகவும் ஒரு படைப்பாளராகவும் இரு கோணங்களிலிருந்தும் ஒவ்வொரு செய்திக் கட்டுரையையும் / செய்தியையும் அலசுங்கள். என்ன மாதிரி செய்திகள், எந்த விதத்தில் எழுதப்படுகின்றன என்பதைக் கூர்ந்து அலசுங்கள். ஆங்கிலத்தில் Reverse Engineering என்று சொல்வதுபோல் ஒரு செய்திக் கட்டுரையை எடுத்துக் கொண்டு அதை எப்படி அதன் ஆசிரியர் கட்டமைத்திருப்பார் என்று ஆராயுங்கள்.

    இப்படி முன் ஆராய்ச்சிகள் முடிந்ததும் எந்தப் பத்திரிகைக்கு என்ன மாதிரி எழுத வேண்டும் என்று புரிந்திருக்கும். ஒரு நிகழ்வு அல்லது ஒரு செய்தி உங்களுக்கு கட்டுரை எழுத தோதானது என்று தோன்றும்போது - அடடே இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்று "அரிப்பு" ஏற்படும்போது, உடனே அதைப் பற்றி பலரிடம் பேசியோ அல்லது புத்தகங்கள் / கோப்புகள் படித்தோ பல இடங்களிலிருந்தும் தேவையான விவரங்களை சேகரிக்க முடியும் என்ற எண்ணம் வலுத்தவுடன் உடனுக்குடன் அதை ஒரு வரை திட்டமாக / குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள்.

    சிந்திக்க ஆரம்பித்த உடனேயே இப்படி பல ஐடியாக்கள் தினமும் வந்த வண்ணம் - சில சமயம் பொழிந்த வண்ணம் இருக்கும். கைக்கு எட்டும் இடங்களில் ஆங்காங்கே குட்டி நோட் புக் அல்லது தாள்கள் மற்றும் பேனாக்கள் வைத்திருங்கள்.

    அடுத்து மிக முக்கியமான வேலை. ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் வேலை செய்ய தயாராக வேண்டும். உங்களுக்குத் தோன்றும் ஐடியாவை, எப்படி வாசகர்களுக்கு ஏற்ற விதத்தில், அந்தப் பத்திரிகையின் அடிப்படை வடிவமைப்புக்கு ( Format) ஏற்ற மாதிரி உங்களால் எழுத முடியும் என்பதை ஆசிரியரிடம் விளக்கிச் சொல்லுங்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் தலைமை ஆசிரியர் தவிர ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆசிரியர் இருப்பார். எந்தப் பகுதிக்கு உங்களுடைய ஐடியா பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அந்தப் பகுதியின் ஆசிரியரை முன் அனுமதி பெற்று ( appointment) நேரில் சந்தித்து பேசுங்கள். இது ஆரம்ப கால நட்பிற்காக. பழகிவிட்டால் ஒருவருக்கொருவர் தொலைபேசியிலேயே கலந்துரையாடி, ஒப்புதல் பெற்றுக்கொண்டு வேலையை ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு ஆள் தேவைப்படும்போது உங்களையும் அவர்கள் தொடர்பு கொண்டு வேலைக் கொடுப்பார்கள்.

    இங்கே முதல் பிரசுரம் வெளியாவதுதான் சற்று கடினம். ஒன்று வெளி வந்துவிட்டால் அதன் அஸ்திவாரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக்கொண்டே போகலாம். ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் படைப்புகள் வெளி வர ஆரம்பித்ததும் ஒரு portfolio செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களை சந்தித்து உங்கள் யோசனைகளை "விற்கும்போது" உங்களுடைய முன் அனுபவம் கையில் இருந்தால் இன்னும் கூடுதல் பலம்.

    அதன் பின் வானம்தான் எல்லை.

    கடைசியில், ஆனால் கட்டாயம் தேவை - வேகம். ஊடகத்துறையில் அந்தச் சமயத்தில் நடக்கும் நடப்பு நிகழ்ச்சிகள்தாம் ( Topical news) முக்கியம். காலம் / நேரம் என்பது இங்கே விலைமதிப்பில்லாதது. கொஞ்சம் அசந்தாலும் ஆறின கஞ்சியாகிவிடும். விரைவாக முடிவெடுக்கும் / எழுதும் திறமை. குறிப்பாக நடப்பு செய்திகள் பற்றி கட்டுரை எழுதும்போது அதன் சரித்திரம், பின்ணனி போன்றவை ஓரளவு புரிந்திருக்க வேண்டும். இதற்கு சமயம் கிடைக்கும்போதெல்லாம், பின்ணனி / பின் புல விவரங்களை அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும் - இது ஒரு தொடர்ந்த கல்வி போலதான். குறித்த காலத்தில் குறித்த வேலையை பாங்காக முடித்து ஆசிரியரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பு இருந்தால் ஆசிரியர் குழுவின் நம்பிக்கையை பெறலாம். கால வரையரை ஊடகங்களில் மிக முக்கியம்.

    நேரம் என்று சொல்லும்போது உங்கள் கட்டுரையும் வாசகர்களின் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று வேகமாக நகரும் வாழ்க்கையில் பலவிதமான போட்டிகளுக்கிடையே உங்கள் கட்டுரை வாசகரின் கவனத்தை ஈர்ப்பது முக்கிய விஷயம். ஈர்க்கும் வகையில் எழுதும் விஷயம், சொல்லும் விதம் அமைய வேண்டும். முதல் வரிகள் மிக முக்கியம். இரண்டு நிமிடத்திற்கு மேல் இன்றைய வாசகர் கவனம் நிலைக்காது என்ற எண்ணத்துடன் வடிவமையுங்கள். இன்றைய பத்திரிகையாளர் தொழில், சுருங்கச் சொல்லி விளக்கும் கலை.

    பத்திரிகையில் எழுத முக்கிய தேவை, செய்தியை நுகரும் / மோப்பம் பிடிக்கும் திறமை :-) இது பழக்கத்தில் தானே வரும். எது செய்தி என்பது எப்போதுமே சர்ச்சைக்குள்ளாகும் விஷயம். இந்தத் தொழிலில் அடிக்கடி பரிமாறிக்கொள்ளப்படும் வாக்கியம் - It is no news if dog bites man; when Man bites dog, it is news. :-)

    நீங்கள் என்ன புதிதாக சொல்கிறீர்கள் என்பது முக்கியம். இந்த சமயத்தில் மாறி வரும் ஊடக நிலவரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். டிவி, மற்றும் இணையம் மூலம் பெரும்பாலான breaking news செய்திகள் வாசகர்களுக்கு கிடைத்துவிடும். இதையெல்லாம் தாண்டி அச்சு ஊடகத்தில் நீங்கள் சொல்வது வாசகர்களுக்கு புதிதாக / informative ஆக இருக்க வேண்டும்.

    இன்னொரு முக்கியமான தேவை பொறுமையும் விடாமுயற்சியும். ஆரம்ப நாட்களில் "பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்" கடிதங்கள் நிறைய வரலாம். (என்னிடம் இந்த ஆரம்பகால கடிதங்கள் இன்னும் உள்ளன. நடந்து வந்த பாதையை நினைத்து பார்க்க பின்னாளில் உதவும். :-)) இதற்கெல்லாம் மனம் தளராமல் ஆர்வம் குறையாமல் பல விதங்களில் நம் குறை நிறைகளை நாமே அவ்வப்போது சுய அலசல் செய்து கொண்டு முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும்.

    சந்தைக்கேற்ப பண்டங்கள் தயார் செய்து கொடுத்து பெயரையும் நிலை நாட்டலாம். ஒரு ஒழுங்குடன் ஒரு வாரத்தில் குறைந்தது இத்தனை கட்டுரைகள் எழுத வேண்டும் என்று ஒரு நியதியுடனும் ஒழுங்குடனும் (Discipline) திட்டமிட்டு செய்தால் சுயேச்சை பத்திரிகையாளராக சௌகரியமாக பொருள் ஈட்டவும் செய்யலாம்.


    2. திசைகள் பொறுப்பு எப்படி இருக்கிறது? திசைகள் அச்சு ஊடகமாகவும் மாற்றும் எண்ணம் உண்டா? திசைகள் மின்னிதழுக்கு தங்களின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன?

    ஆசிரியர் பொறுப்பு எனக்கு புதிதுதான். 16 வருடத்திற்கும் மேலாக கொடுக்கும் பக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது பெற்றுக்கொள்ளும் / தயாரிக்கும் பக்கம் வந்துள்ளது ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. மின்னிதழ் என்பதால் தயாரிப்பில் தொழில் நுட்ப விஷயங்கள் ஆரம்பத்தில் குழப்பின. அவையும் இப்போது ஓரளவு புரிகின்றன (என்று நினைக்கிறேன் :-)) ஆனாலும் தொழில் நுட்பம் காரணமாக இப்போதும் சில தவறுகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் இவைகளையும் தாண்டி விடுவேன் என்று நம்புகிறேன். நல்ல அனுபவம். ரசித்து செய்து கொண்டிருக்கிறேன்.


    திசைகள் அச்சு ஊடகமாக மாறுவது குறிக்கோள் அல்ல. இது ஒரு வணிக முயற்சியல்ல. வணிக விளம்பரங்கள் கூட தவிர்க்கப்படுகின்றன. சந்தா விளம்பரம் இல்லாமல் அச்சு ஊடகங்களை வெளியிடுவது சிரமமானது. நான்கு வருடங்கள் முன்பு திசைகள் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய காரணம், இணையத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க வேண்டும், நிறைய விஷயங்கள் இணையத்தில் தமிழில் கிடைக்க வேண்டும் - தமிழ் இணையத்தில் நிறைய ஆக்கங்கள் புதிதாக உருவாக வேண்டும், அறியப்பட வேண்டும், அவை பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் - என்பதுதான். இன்னொரு அச்சு ஊடகமாக இல்லாமல், இணைய ஊடகமாக, யூனிக்கோட் குறியீட்டு முறையை உபயோகித்து திசைகள் உருவெடுத்ததன் காரணமும் அதுதான். தமிழில் யூனிகோட் குறியீட்டு முறையை உபயோகித்து வெளி வந்த முதல் மின்னிதழ் திசைகள்.

    இதே நோக்கோடுதான் - தமிழ் இணையத்தில் நிறைய புழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடுதான், வலைப்பதிவுகள் பற்றி ஜூலை 2003 இதழில் ஒரு அறிமுகக் கட்டுரையைப் பிரசுரித்து, தமிழில் வலைப்பதிவுகளின் வரவை திசைகள் ஊக்குவித்தது. இன்று ஓரளவு திசைகளின் எண்ணம் நிறைவேறியுள்ளது - இணையத்தில் நிறைய யூனிக்கோடில் தமிழ் ஆக்கங்கள் உருவாகின்றன / பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. தவிர, திசைகள் பூகோள ரீதியாக எந்த ஒரு பிரதேசத்தையும் சேர்ந்தது இல்லை. தமிழ் இன்று நாடுகளைக் கடந்த ஒரு உலக மொழி. தமிழ் குரல் ஒலிக்கும் இடங்களிலிருந்தெல்லாம் தமிழுக்கு பங்களிப்பு ஏற்படச்செய்ய அச்சு ஊடகத்தைவிட ஒரு மின்னிதழில் அதிக சாத்தியம் உண்டு. அச்சு ஊடகங்களும் இன்று மின்னிதழ் பதிப்பில் வெளி வரும்போது ஒரு மின்னிதழ் அச்சு ஊடகத்திற்கு செல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை. அதைவிட, தமிழை வேறு தளங்களில் எதிர்காலத்தில் எப்படி எடுத்துச்செல்லலாம் என்பதே திசைகளின் அடுத்த கட்டத் திட்டம். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும் ஒரு தொலை நோக்கு இதழாகவே திசைகள் இருக்கும்.

    மேலும், சிறுகதைகள், கவிதைகள் என்று இலக்கியம் இங்கே ஒரு அங்கம் மட்டுமே. ஆனால் இலக்கிய இதழ் அல்ல. முக்கியமாக சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் திசைகளின் குவியம். ஒவ்வொரு மாதமும் வெளி வரும் சிறப்புப் பகுதி ஒரு உதாரணம்.


    3. தங்கள் வலைப்பதிவு பக்கம் அடிக்கடி தென்படுவதில்லையே... ஏன்?

    எக்கச்சக்கமான வேலை பளுவினால் நேரம் கிடைக்கவில்லை....... - என்று சொல்ல ஆசைதான். ஆனால் உள்ளே "உண்மை பேசு" என்று ஒரு குரல் ஒலிக்கிறதே? :-) எத்தனை வேலை இருந்தாலும் ஆர்வமிருந்தால் நேரம், தானே முளைக்கும். அந்த ஆர்வம்தான் குறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வலைப்பதிவில் எனக்கிருந்த ஆரம்பகால புதுமை மங்குகிறது ஒரு காரணமாக இருக்கலாம். பதிவு என்றில்லை அச்சு ஊடகங்களிலும் முன் போல் எழுதும் ஆர்வம் குறைகிறது. எதன் மேல் இந்தப் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறேன் :-) ஆனால் இந்த அயற்சியும் ஆர்வக்குறைச்சலும் எழுதும் துறையில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் ஒரு சுழற்சிதான். சற்றுப் பொறுங்கள். மீண்டு /ம் வருவேன் :-)

    4. அமெரிக்கா முதல் டான்ஜானியா வரை பல நாடுகளும், இந்தியா முழுக்க பல வசிப்பிடங்களிலும் வசித்தவர் நீங்கள். எந்த இடம் ரொம்ப பாதித்தது? எப்படி? மீண்டும் எங்கு செல்ல/வருகை புரிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    டான்ஜானியா !! முக்கிய காரணம் அந்த நாட்டில் வாழ்ந்திருந்தாலும் முழுக்க அறிந்திருக்கவில்லை. ( மற்ற இடங்களெல்லாம் அத்துப்படியா என்று கேட்காதீர்கள் - பதில் கிடையாது.) அங்கே இருந்தபோது குழந்தைகள் சிறியவர்களாக இருந்தார்கள். முழுக்க முழுக்க குழந்தைகள் / குடும்பம், அருகில் இருக்கும் நண்பர்கள் ( இந்தியர்கள்) என்று நான்கு வருடம் ஓடியே போய்விட்டது. பயணம் என்பது எல்லோரும் போல் Serangetti National park போன்ற பல்வேறு game parks மற்றும் இதர சுற்றுலா இடங்கள் மட்டுமே. ஒரு டுரிஸ்ட் போல்தான் வாழ்க்கை. ஆனால் இப்போது தோன்றுகிறது. இன்னும் ஆற அமர அங்கே உள்ளூர் மக்களுடன் பழகி, வித்தியாசமாக வேறு நிறையப் பயணங்கள் செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஓய்வு பெற்றவர்கள் பழைய இடங்களில் போய் வசிக்க ஏதாவது திட்டம் வரைய வேண்டும் :-)

    5. திசைகள்.காம் போன்ற மின்னிதழ்களில் கத்திரிக்கு, கிட்டத்தட்ட உரிமை இல்லாதவாறு பங்களிப்பாளர்கள் ஆக்கங்களைத் தருகிறார்களா? அல்லது 'எடிட்' செய்தால் சுணங்குவார்கள் என்பதால், கச்சிதமில்லாத படைப்புகள் சில சமயம் வெளியாகிறதா? இணைய இதழில் நிர்வாக ஆசிரியரின் நடவடிக்கைகள் எவ்வாறு அச்சிதழ்களின் ஆசிரியரோடு வேறுபடுகிறது?

    "...அல்லது 'எடிட்'
    செய்தால் சுணங்குவார்கள் என்பதால்,...." -

    திசைகளில் இதற்கு இடமேயில்லை. முன்பே கூறியபடி எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் செயல்படும் ஒரு அமைப்பில் தனி மனிதர்களின் சுணங்கல்களுக்கு இடமிருக்காது. இங்கே பத்திரிகையின் குறிக்கோள்தான் முக்கியம். தமிழில் புதிய ஆக்கங்களை /திறமைகளை ஊக்குவிப்பது திசைகளின் நோக்கம். எப்படியாவது சர்குலேஷனை அதிகரிக்க வேண்டும் என்ற எந்த விதமான அழுத்தமும் இல்லை; பிரபலங்களின் எழுத்துக்கள் இல்லாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. தரம் என்பது பெரும்பாலும் தனி மனிதரின் பார்வையைப் பொறுத்தது - subjective. திசைகளுக்கு வரும் படைப்புகளைப் படிக்கும்போது மிகச் சுமாராக இருந்தாலொழியப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறோம். புதிய எழுத்தாளர்களை இது ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். சுமாராக இருக்கும் படைப்புகளையும் சில சமயம் திசைகளுக்குத் தேவையான விதத்தில் மறுபடி எழுதித்தரவும் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன் - அப்படி கேட்டுக்கொண்டவர்கள் அன்போடு சிரமம் பார்க்காமல் மீண்டும் எழுதிக் கொடுத்ததும் உண்டு. திருத்தி எழுத வாய்ப்பே இல்லாத சில படைப்புகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அப்படி நிராகரிக்கும் முன்னர், எழுதியவர் ஆரம்ப எழுத்தாளராக இருந்தால் எப்படி எழுதலாம் என்ற யோசனையையும் முன் வைத்துள்ளேன்.

    மின்னிதழில் கத்தரிக்கு அதிகம் வேலை இல்லை - தவிர்க்கப்பட வேண்டிய வாசகங்கள் / ஆபாசங்கள் / தாக்குதல்கள் இருந்தாலொழிய. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லா ஊடகங்களையும் போல் மின்னிதழிலும் கத்தரி / censor நிச்சயம் செயல்படுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் திசைகளில் அப்படி கத்தரிக்குத் தப்பி எந்த வாசகமும் வந்ததாகத் தெரியவில்லை. மற்றபடி அளவு வரையறை இணையத்தில் இல்லாததால் நீளத்தைக் குறைக்க கத்தரி தேவையில்லை. இது மின்னிதழின் சௌகரியம் :-) மற்றபடி கச்சிதமில்லாத படைப்பு என்பது subjective :-) அச்சு ஊடகத்தில் நான் எந்த ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கவில்லை. எப்போதுமே பங்களிப்பாளராகவே (contributor) இருந்துள்ளேன். ஆனால் அடிப்படையில் இரண்டு ஊடகங்களிலும் நிர்வாக ஆசிரியர் பொறுப்பு ஒரே மாதிரிதான் என்பது என் அனுமானம்.

    என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்ததற்கு மிக்க நன்றி பாலா.

    அருணா ஸ்ரீனிவாசனின் விரிவான பதில்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!



    | |

    Abu Musab al–Zarqawi

    அல் ஜர்காவி இறந்ததை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் 'ஆஹா... ஓஹோ... பலே... பேஷ்... அமர்க்களம்.. என்ன சாதனை... வாவ்... சூப்பர்... நீட்... அது! அப்படி போடு... போட்டுத் தாக்கு... தல!! கலக்கல்... அடுத்து ஒஸாமாதான்... வெற்றி... நொறுக்கிட்டீங்க... பிச்சுட்டீங்க!!!' என்று மிதமாகப் பாராட்டும் சமயத்தில் பா. ராகவனின் 'குமுதம் ரிப்போர்ட்டர்' மாயவலை கட்டுரையில் இருந்து:


    அல் காயிதாவின் ஈராக் பிரிவு தளபதி அபூ மூசாக் அல் ஜர்காவி (Abu Musab al – zarqawi) அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்கிற செய்தியால் கடந்த வியாழக்கிழமை செய்திப் பத்திரிகைகள் சாபல்யமடைந்தன. (பலபேர் ஜர்காவியை ஜவாஹிரியுடன் போட்டுக் குழப்பிக்கொண்டு, அல் காயிதாவின் முதன்மைத் தளபதியைச் சுட்டுவிட்டார்கள் என்று அலறினார்கள்!)

    மீடியா இத்தனை உரக்கப் பேசுமளவுக்கு ஜர்காவி ஒன்றும் ரொம்பப் பெரிய ஆள் இல்லை. மிகவும் சாதாரணமான லோக்கல் ரவுடிதான். 2004ம் ஆண்டு வரை அவன் பெயர் யாருக்கும் தெரியாது. யாருக்கும் என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள் ஒசாமா பின்லேடனுக்கே தெரியாது! Tawhid என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி ஈராக்கில் குண்டுபோட்டுக்கொண்டிருந்தவன். சதாம் உசேன் கைது செய்யப்பட்டபிறகு ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ கலவரங்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தபடியால் உள்ளூரில் கொஞ்சம் பிரபலமானான்.

    ஈராக்கில் அமெரிக்கப் படையின் ஆட்சிதான் உண்மையில் நடக்கிறது என்கிறபடியால் அல் காயிதாவால் நேரடியாக அங்கே எந்தத் திருவிளையாடலையும் நிகழ்த்தமுடியாத சூழ்நிலை. ஆகவே ஜர்காவியை வாடகைக்கு எடுத்தார்கள். சொல்லிக்கொள்ளும்படி அல் காயிதாவுக்கு இப்போது ஈராக்கில் ஒரு நெட் ஒர்க் இல்லாத காரணத்தால் ஜர்காவியையும் அவனது அடியாள்களையுமே on behalf of al qaeda வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். இதனடிப்படையில்தான் ஜர்காவியை அல் காயிதாவின் ஈராக் தளபதி என்று மீடியா சொல்கிறது.

    ஆனால் ஜர்காவிக்கு அல் காயிதாவின் தொடர்பும் தரவும் கிடைத்தபிறகு நிறைய நாசவேலைகளைக் குறுகிய காலத்தில் செய்தான் என்பதை மறுக்கமுடியாது. ஜோர்டனிலும் ஈராக்கிலும் பணியாற்றிக்கொண்ட பல பெரிய அமெரிக்க அதிகாரிகளைத் தீர்த்துக்கட்டியது இவனது திருப்பணிகளில் முதன்மையானது. ஈராக்கில் மட்டும் எழுநூறு பேரைப் படுகொலை செய்ததில் ஜர்காவியின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.

    நவம்பர் 2005ல் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் குண்டு வெடித்துப் பலபேர் இறந்த சம்பவம் நினைவிருக்கிறதா? அது ஜர்காவியின் காரியம்தான். ஜோர்டன் நீதிமன்றம் ஜர்காவிக்கு பதினைந்து வருட சிறைத்தண்டனை எல்லாம் விதித்து உள்ளே தள்ளியது. தப்பித்து எப்படி வெளியே வந்தான் என்பதை அவனே ஒரு வாழ்க்கை வரலாறு எழுதியிருந்தால்தான் தெரிந்துகொண்டிருக்க முடியும்!

    ஆகவே.....?!




    | |

    China is democratic: Arundhati Roy

    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அருந்ததி ராயை சந்தித்த நிருபர்களிடம் பரபரப்பான துணுக்கை அருந்ததி ராய் பகிர்ந்து கொண்டார்.

    'சீனா சுதந்திர நாடு. அங்கு உள்ளே இருப்பவர்கள் தங்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்பதை அறிந்தே இருக்கிறார்கள். கூகிள் கூட வித்தியாசமாக அரசுக்கு விருப்பமான முடிவுகளை மட்டுமே தருகிறது என்பதை அரசல் புரசலாக அறிவார்கள். அமெரிக்காவிலும் தொலைக்காட்சி இருக்கிறது; சீனாவிலும் ரூபர்ட் முர்டாக் கால் பதித்துள்ளார். இதுவே சீனா முழுக்க முழுக்க மக்களை தளைகளில் இருந்து விடுவித்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.'

    அங்கிருந்த தமிழ் வலைப்பதிவர், 'அருந்ததி... நீங்கள் 1984-இல்

    "I would hate to be thought of as an intellectual"
    என்று இந்தியா டுடே நேர்காணலில் சொல்லியிருந்தீர்களே? இப்போது இந்த மாதிரி புத்துணர்ச்சி சிந்தனையை வித்திடுவதன் மூலம் தங்களை அறிவுஜீவியாக்கி விடுவார்களே!?' என்று வினவினார்.

    'அது நான் விரும்பாமல் கிடைக்கிற பட்டம். நாம் விரும்பும் விலையை நேரடியாக கார் விற்பவனிடம் சொன்னால், பேரம் படியாது. அதே போல்தான் இந்த 'முற்போக்குவாதி' பட்டமும். நான் உங்களிடம் சென்று 'என்னை இப்படி அழை' என்று சொன்னால், நாமகரணம் இடமாட்டீர்கள். ஆனால், 'எனக்கு இப்படி சொல்வது பிடிக்கவில்லை' என்று சொல்லிப் பாருங்கள்... உளறினாலும் கூட நிச்சயம் பீடத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.' என்றார்.

    தொடர்ந்து, 'பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடைபெறப் போகிறது. அவர்கள் என்ன பொருள்முதல்வாதத்தையா பின்பற்றினார்கள்? ஜனநாயகம் தழைக்கிறது என்று சொன்னாலும் டொரொண்டோவிற்கோ, பாரிசுக்கோ, ஜப்பானுக்கோ இது கிடைக்கவில்லை. சைனாவிற்குத்தான் கொடுத்தார்கள்! இது போதுமே?' என்று முடித்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடி பொருத்திய லிமூஸினில் ஏறி இரவு விருந்துக்கு விரைந்து விட்டார்.


    தொடர்புள்ள சுட்டிகள் & உதவிய பேட்டி: AlterNet: Arundhati Roy: Back In the U.S.A. | Guardian Unlimited | Guardian daily comment | The western view of the rise of India and China is a self-affirming fiction | வஜ்ரா... தமிழ் வலைப் பதிவு: அருந்ததி ராய் | India not democratic: Arundhati Roy




    | |

    Only for Hot MEN / WOMEN (age 18 above only)

    நேற்றைக்கு சூடான பதிவு எழுதியாச்சு. இன்றும் சூடா இருக்கீங்களா? சூட்டைத் தணிக்கணுமா... வேறெங்கும் செல்ல வேண்டாம். கூகிள் படத் தேடலை முடுக்க வேண்டாம். இங்கே வந்தால் போதும்.

    தணிஞ்சுரும்.

    ஆனா, அக்கம்பக்கம் பாருங்க. பாஸ் இருக்காரா? இப்ப வேணாம். வேற யாராவது எசகுபிசகா பார்த்துருவாங்களா? வேணவே வேணாம்...

    தமிழ்மணத்தில் இந்த மாதிரி பதிவு இடலாமா என்று தெரியவில்லை.

    தேன்கூட்டில் புகைப்படத்தை அப்படியேப் போட்ருவாங்க... அங்கேயே படிப்பவர்கள் இதனால் சூடாகலாம். இறைவர் மேல பாரத்தைப் போட்டுட்டு நான் இதை இடுகிறேன்.

    நேற்று போல் இன்றும் உள்ளர்த்தத்தை மட்டும் கவனித்து பேரின்பத்தைத் தொடவும்.

    பாருங்க...

    பாருங்க....



    .



     






    நன்றி: சும்மா



    | |

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு