வியாழன், ஜூன் 30, 2005

அன்னியன் தேவை (2)

Indians pay Rs 21,068 cr per year as bribe- The Times of India ::

ஆர். கே. லஷ்மண் சித்திரங்களில் வரும் 'common man' போன்றவர்கள் லஞ்சமாக இருபத்தோராயிரத்து அறுபத்தியெட்டு கோடிகள் கொடுத்ததாக Transparency International அறிவித்திருக்கிறது.

  • கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

  • போன வருடத்தை விட இந்த வருடம் ஊழல் அதிகரித்துள்ளதாக மூன்றில் ஒருவர் சொல்லியிருக்கிறார்கள்.

  • முதலிடம்: காவல் துறை
    2: உள்ளூர் நீதிமன்றங்கள்
    3. நில நிர்வாகம்

    (முதலிரண்டைப் பார்க்கும்போது, மக்கள் சட்டத்துக்கு ரொம்பவே பயப்படுகிறார்கள்.)

  • நீர்வள நிர்வாகம்தான் குறைந்த அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளது. (தண்ணீர் இன்னும் குழாயில் வருகிறதா?)

  • கேரளாவில்தான் லஞ்சம் மிகவும் குறைச்சல். தலை பத்தில் தமிழ்நாடு இடம்பிடித்திருக்கிறது.

  • 1. பீஹார்
    2. ஜம்மு காஷ்மீர்
    3. மத்திய பிரதேசம்
    4. கர்னாடகா,
    5. ராஜஸ்தான்,
    6. அஸ்ஸாம்,
    7. ஜார்கண்ட்,
    8. ஹரியானா
    9. தமிழ்நாடு
    ....
    11. டெல்லி
    ....
    16. மஹாராஷ்டிரா
    17. ஆந்திர பிரதேஷ்
    18. குஜராத்
    19. ஹிமாசல் பிரதேஷ்
    20. கேரளா

    அன்னியன் தேவை (1)

  • போட்டி

    குருபாலும் தனபாலும் கார் பந்தயம் வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து கி.மீ. ரேஸில் தனபால் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் செல்கிறான்.

    தனபால் 3/5 கி.மீ. கடந்தபின் மூன்று விநாடிகள் காத்திருந்த பிறகு குருபால் வண்டியை எடுக்கிறான். ஒவ்வொரு x-ஆவது கி.மீ.யையும், மணிக்கு 5/2*3-x வேகத்தில் கடக்கிறான்

    யார் ஜெயித்தார்கள்? எப்படி?

    கேட்டவர்: mindsport

    ஷரபோவாடன்

    டென்னிஸ் விளையாட சில துப்புகள்

    1. 'ஆ', 'ஊ', 'ஏ', 'ஈ', 'ஓ' என்று கத்த சண்டைக் காட்சி இயக்குநர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    2. ஒரு புள்ளிக்கும் அடுத்த புள்ளிக்குமான இடைவெளியில் ராக்கெட்டில் உள்ள சதுரங்களை எண்ணுவதற்காக சகுந்தலா தேவியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    3. ஓரமாய் உட்கார்ந்திருக்கும் நடுவர்களை அனல் கக்கி முறையிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை அணுக வேண்டும்.

    4. தலையில் துண்டு போட்டு வெயிலைத் தணிக்க, தோற்றுப் போன அரசியல்வாதிகளிடம் முக்காடிடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    5. சின்ன சின்ன விளம்பரங்களை சட்டையில் தைத்துக் கொள்ள ஆறு புள்ளி எழுத்துருவில் மறுப்புகூறை முன்வைக்கும் மென்பொருளாளர்களிடமிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    6. நான்கு பந்துகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள, நாலு தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒரே சமயத்தில் மேய்க்கும் சோனியாவிடம் அறிய வேண்டும்.

    7. போன முறை ஜெயித்த பந்தையே மீண்டும் கண்டுபிடித்துப் பெற, இரும்புக் கோடரியை நதியிடமிருந்து திரும்பப் பெற்றவனிடம் கேட்க வேண்டும்.

    8. நெட்டில் பட்டு திருடிய பாயிண்டுக்கு 'சாரி' கேட்க, ஜார்ஜ் புஷ்ஷிடம் அறிய வேண்டும்.

    9. ஒரு செட் தோற்றாலும், மீண்டு வந்து வெல்வதற்கு தமிழ்ப்பட ஹீரோயிஸக் கதைகளைக் கண்ணுற வேண்டும்.

    10. காலில் கோடி டாலருக்கு காலணி அணிந்தாலும், பந்தில் மட்டுமே குறியாக இருப்பதை, பங்குவிலை எவ்வளவு ஏறினாலும் அசராமல் அடுத்த தொழில்நுட்பத்தை நோக்கும் கூகிளிடம் நோக்க வேண்டும்.

    போன வருட ஷரபோவா பதிவு.

    பிடித்த 10 படங்கள்

    ரீடிஃப் - சுஜாதா ::

  • மதர் இந்தியா
  • லகான்
  • சலாம் பாம்பே
  • சிதம்பரம்
  • முதல் மரியாதை
  • பதேர் பாஞ்சாலி
  • நாயகன்
  • முள்ளும் மலரும்
  • 36, சௌரிங்இ லேன்
  • கரீஜ்

    தியோடார் பாஸ்கரன், ரவி கே சந்திரன், பி. சி. ஸ்ரீராம், அடூர் கோபாலகிருஷ்ணன், மோஹன்லால், ராம் கோபால் வர்மா, சாபு சிரில், அமோல் பலேகர், கிரீஷ் காஸரவள்ளி போன்ற பிறரின் பட்டியலையும் பார்த்துவிட்டு, உங்க 'தலை பத்தை' சொல்லலாம். (வழி: teakada: Sujatha's 10 Best Indian Movies)

  • புதன், ஜூன் 29, 2005

    கோவில் 1 கடத்தல் 2 காசு ?

    BBC NEWS | South Asia | 'Held captive by the Tamil Tigers' ::

    கோயம்பத்தூர் அருகே பதீஸ்வரர் கோவில் பேரூரில் இருக்கிறது. ஈழப் பதீஸ்வரர் கோவில் லண்டனில் இருக்கிறது.

    கோவில் என்றாலே நரியை பரியாக்கிய மாணிக்கவாசகர் முதல் இன்றைய முத்தையா ஸ்தபதி வரை ஏதாவது விவகாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

    (கழுகு விகடன்: "இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கோயில் வேலைகளை யாருக்குக் கொடுப்பது என்று முடிவெடுக்க வேண்டியது ஸ்தபதியின் வேலைதான். பல கோடி ரூபாய் கான்ட்ராக்ட் தொடர்பான விஷயம் அது. இந்தப் பதவியில் இருப்பவர்கள் நினைத்தால், பினாமி பெயர்களில் கான்ட்ராக்ட்களை எடுத்துக்கொண்டு கொழிக்கலாம்.")

    சுனாமி நிதி தருவதற்காக இலங்கைப் பக்கம் சென்ற ராசிங்கம் ஜெயதேவனை விடுதலைப் புலிகள் பிணைக்கைதியாக வைத்திருந்திருக்கிறார்கள்.

    எல்.டி.டி.ஈ. இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

    விவேகானந்தனும் ஜெயதேவனுடன் கூட சென்றிருக்கிறார். லண்டன் வாழ் தமிழர்களிடம் சுனாமி நிதி திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்காக இருவரும் புலிகளைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்.

    சிவயோகம் டிரஸ்ட்டுக்கு லண்டன் வெம்ப்ளி கோவிலை எழுதி கொடுப்பதற்காக 42 நாள் கழித்து விவேகானந்தன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். திரைப்படத்தில் பிணைக்கைதியை பிடித்து வைத்திருப்பது போல், கையெழுத்தாவதற்காக, மேலும் இருபது நாள்களுக்கு ஜெயதேவன் சிறையில் இருந்திருக்கிறார்.

    கோவிலை அடிப்படையாகக் கொண்டு பணம் திரட்டுவதே இந்தக் கடத்தலின் நோக்கமாக ஜெயதேவன் நினைக்கிறார். கோவிலை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இங்கிலாந்தின் இன்ன பிற தமிழ் அமைப்புகளையும் அடைவதே குறிக்கோளாக இருந்திருக்கும் என சொல்லியுள்ளார்.

    விடுதலைப் புலிகளுக்கு பணம் போவதாக சொல்வதை சிவயோகம் ட்ரஸ்ட்டை நடத்தும் என். சீவரத்தினம் மறுத்திருக்கிறார். தான் புலிகளின் ஆதரவாளராக இருந்தபோதும் நிதி விநியோகத்தை வெளிப்படையாக நடத்துவாக சொல்லியிருக்கிறார். திரட்டப்படும் நிதி அனைத்தும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் மட்டுமே செல்வதாக குறிப்பிடுகிறார்.

    ஆளுங்கட்சியின் தலையீட்டினாலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் கோவில் மீண்டும் பழைய நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

    எவ்வளவு பணம் கைமாறியது, 2001-இல் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்த கடத்தலில் சம்பந்தமிருக்கிறதா, ஜெயதேவனை பிணைக்கைதியாக வைத்தது யார் என்பதை ஸ்காட்லாண்ட் யார்ட் விசாரிக்காவிட்டாலும், உள்ளூர் போலீஸ் விசாரித்து வருகிறது.

    அன்னியன் தேவை

    வி.விவேகா : Junior Vikatan.com :: மதுரை பஸ் ஸ்டாண்டு...

    பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு ஆள் வந்தான். அவன் கையில் ஒரு துணிப்பை. சுற்றுமுற்றும் பார்த்தபடி என்னிடம் பேச ஆரம்பித்தான். நானும் அவனை ஒருவித சந்தேகத்துடன் கவனித்தேன். அவனிடமிருந்த பையை பிரித்து என்னிடம் காட்டினான். அதில் புத்தம் புதிய புடவைகள்.

    "நான் ஒரு ஜவுளிக்கடையில வேலை பார்க்குறேன். ஜவுளி பார்சல்களை லாரிகளில் இருந்து இறக்கி வெச்சதால கூலியா கிடைச்சது. இந்த மூணு புடவைகளையும் எடுத்துக்கங்க! இருநூறு ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்" என்று திடீர் வியாபாரம் பேசினான். அந்தப் புடவைகளின் மதிப்பு நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். என்னதான் இலவசமாகக் கிடைத்தாலும், இவ்வளவு விலை குறைச்சலாக யாரும் விற்க மாட்டார்கள்! 'எங்கேயாவது திருடின புடவையாக இருக்கும்' என்று நினைத்து, 'வேண்டாம்பா' என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

    இருந்தாலும் விடாப்பிடியாக என்னைத் துரத்திய அந்த ஆள், ஐம்பது ரூபாய்க்கு இறங்கி வந்துவிட்டான். அப்போதும் நான் மசியவில்லை. ஒருகட்டத்தில், "நீங்க சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன். அது சரிதான்! திருட்டுப் புடவைங்கதான் சார். ஆனா, புது புடவை. என்னால தினமும் தண்ணிப் போடாம இருக்க முடியாது. அதுக்காகத்தான் திருடினேன். காசுக்காக விக்கிறேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தான். நான் அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

    ஆனால், எனக்கு பின்னால் வந்த ஒரு நபர், அதே புடவைகளை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்று விட்டார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டு, அந்த ஆள், அருகில் இருந்த ஒயின்ஷாப் பக்கம் ஒதுங்கியதை பார்த்தேன். இந்தமாதிரி திருடர்களை நாம் புறக்கணிக்காதவரையில் அவர்கள் திருட்டுத் தொழிலை எந்நாளும் விடமாட்டார்கள். பொருள் வந்தவிதத்தைப் பார்க்காமல், திருடர்களை ஊக்குவிக்கும் இந்தமாதிரியான நபர்களும் திருடர்கள்தான் என்பதை உணர்வார்களா?

    இவரா... இவருடனா... இப்படியா

    விடை கொடு எங்கள் நாடே:

    List of Displaced Numbers


    இந்திரா காந்தியை சூனியக்காரி என்று சொன்னது டூ மச் நிக்ஸன் சார்:

    Richard Nixon - Wax Museum


    படத்தில் என் கூட நிற்பவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்:

    Correctly say who it is... U R a true civil rights champ  - Wax Museum



    கும்புடறேன் சாமீயோவ்:

    Pope (Not the Benedict) John Paul - Indian Style  - Wax Museum



    ஆசை தோசை அப்பளம் வடை:

    Nenapputhaan

    செவ்வாய், ஜூன் 28, 2005

    போபால் நோ-பால்

    To ‘protect’ Hindu girls, BJP govt orders 2 colleges to swap buildings - Indian Express :: ROHIT BHAN :

    மத்திய பிரதேசத்தில் ஐம்பது வருடமாக இயங்கி வரும் கல்லூரிகளை இடம் மாற்ற பா.ஜ.க அரசாணை இட்டிருக்கிறது.

    எம்.எல்.பி (மஹாராணி லஷ்மிபாய்) கல்லூரி

  • பெண்கள் மட்டுமே பயில்கிறார்கள்.
  • பெருவாரியான முஸ்லீம் குடியிருப்பின் நடுவே அமைந்திருக்கிறது.
  • மாணாக்கரிகளில் ஐம்பது சதவீதம் இஸ்லாமியர்கள்; ஐம்பது சதவீதம் இந்துக்கள்.


    ஹமீதியா கலைக் கல்லூரி
  • ஆண், பெண், இருபாலாரும் பயில்கிறார்கள்.
  • எம்.எல்.பி கல்லூரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.


    முகாந்தரம்
  • எம்.எல்.பி கல்லூரியின் ஹிந்து பெண்கள் மதம் மாற்றப்படுகிறார்கள்.


    கருத்துக்கள்
  • 'பல முஸ்லீம் பெண்களுக்கு ஊருக்கு வெளியே இருக்கும் கல்லூரிக்கு போக முடியாமல் படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிவரும் நிலை வரும்' என்கிறார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஃபர்ஹத்.

  • 'மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத கையாலாகாத அரசுதான் இத்தகைய ஆணைகளைப் பிறப்பிக்கும்' என்கிறார் சமூக சேவகர் அப்துல் ஜப்பார்.

  • காங்கிரஸை ஆதரிக்கும் தேசிய மாணவர் அமைப்பும் (National Students Union of India) இந்த உத்தரவை எதிர்க்கிறது. 'ஏற்கனவே பேஷன் ஷோக்களை தடை செய்தவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இது' என்கிறார் NSUI-இன் அகிலேஷ் ஜெயின்.

  • கலைக் கல்லூரியான ஹமீதியாவில் அறிவியல் சோதனைக் கூடங்கள் கிடையாது. ஜூன் முப்பதுக்குள் பரிசோதனைக் கூடங்களை அமைத்து முடிக்க வேண்டும்.

  • எ.பி.சி.



    எ.பி.சி. - எனக்குப் பிடித்த சித்திரம்
    (அல்லது)
    எனக்குப் பிடித்த Caர்டூன்
    (அல்லது)
    எடுத்து(ப் போட முடியாத அளவு) பிசி
    (அல்லது)
    எங்கிருந்தோ B.C.

    76, 76.1, 76.125, 76.1251...

    Chandramukhi celebrates 75 Days

    திங்கள், ஜூன் 27, 2005

    சரியா? தவறா?

    வாசகர் டிஷ்யூம் - JuniorVikatan.com :: சமீபத்தில் ஆந்திர மாநில பேருந்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். பஸ் வேலூருக்குள் நுழைந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று தள்ளி ஜன்னலோர இருக்கையில் இருந்த பயணி, ரோட்டில் எச்சில் துப்பினார். பஸ்ஸுக்கு பின்னால், மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒரு நபர் மீது எச்சில் பட்டுவிட்டது.

    சட்டென்று வேகமெடுத்த பைக் நபர், ஒவர்டேக் செய்து, பஸ்ஸை நிறுத்த வைத்தார். சடசடவென பஸ்ஸுக்குள் ஏறியவர், தன்மீது எச்சில் துப்பிய பயணியை சரியாக அடையாளம் கண்டு அவரை நெருங்கினார். அதேவேகத்தில் அந்தப் பயணி மீது "த்தூ... த்தூ..."வென சரமாரியாக எச்சிலை துப்பிவிட்டு, வந்தவழியே இறங்கிவிட்டார்.

    ஒரு கன்னத்தில் அடித்தாலும் நமக்குத் தெரியும்; பதிலுக்கு பதில் கொடுத்தால் உலகமே கண்ணில்லாதவர்கள் ஆகிப் போவதும் அறிவோம்; சமீபத்திய 'அன்னியன்' எச்சில் துப்பலையும் படித்திருப்போம்.

    இந்த சமயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருப்பீர்கள்?

    அறிந்தும் அரிந்தும்

    Test reveals gender early in pregnancy - The Boston Globe:

    முன்பெல்லாம் பத்து மாதம் சுமந்து பெற்ற பின்புதான் கள்ளிப்பால் புகட்ட முடிந்தது. சிறிது காலம் முன்புதான், நான்கு அல்லது ஐந்து மாதங்களில் கண்டுபிடித்து, கருக்கலைத்தார்கள்.

    நவீன மருத்துவம் ஐந்தே வாரங்களில் வயிற்றில் என்ன பால் என்று சொல்கிறது.

    275 அமெரிக்க டாலர்கள் செலவு செய்தால், ஆண்பாலா, பெண்பாலா என்று உடனடியாக அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆண் மகவு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஆணாக இருந்தால், இரண்டு பேரை சமாளிக்க முடியுமா என்று யோசித்து முடிவெடுக்கலாம்.

    இந்தியாவில் தற்போது ஆயிரம் பையன்களுக்கு 762 பெண்கள் பிறக்கிறார்கள். பன்னிரெண்டாயிரம் ரூபாய் மெனக்கிட்டால் பேறுச்செலவு மற்றும் மனக்கிலேசம் இல்லாமல் ஆண் குழந்தையை கண்டெடுத்து, இந்த விகிதாசாரத்தைக் குறைக்கலாம்.

    சாண் பிள்ளையானாலும் குழந்தை தன்னுடையதுதானா என்னும் சந்தேகம் அப்பாக்களுக்கு இருப்பதை வைத்த் வடிவேலுவும் செந்திலும் நகைச்சு வைப்பதை பார்த்திருப்போம். இனி அந்த சந்தேகத்துக்கும் இடம் வைக்காமல் 'எளிய முறையில் துரித விடை'களும் தெரிந்து கொள்ளலாம்.

    தொலைந்த பத்து (1)

    1. அன்னியன்
    2. துணுக்குச் செய்தி
    3. மஜா பூஜா
    4. உஷார்
    5. உஷ்
    6. சிதையா நெஞ்சு கொள்
    7. ப. மு. ப. மே.
    8. கணினிமயமாக்கல்
    9. உதயம்: ப ம கட்சி
    10. ஸென் கதை

    வெள்ளி, ஜூன் 24, 2005

    ஒரு நாள் ஒரு கனவு

    இசை: இளையராஜா


    எண்பதுகளில் இளையராஜா யாருக்கு இசையமைத்தாலும் ஹிட்டாகும். ஆனாலும், கோவைத்தம்பி, ஃபாசில் என்றால் சிறப்பான கவனிப்பு தென்படும். 'உயிரே உயிரின் உயிரே', 'சின்ன சின்ன ரோஜாப்பூவே', 'பூப்பூக்கும் மாசம் தைமாசம்' என்று TDK-வில் 90 நிரம்பிவிடும்.

    இதையே வாலி கம்போஸிங்கின் போதும் கோடிட்டுப் பேசுகிறார். அவர்களின் இயல்பான உரையாடலும் இருக்கிறது. இந்த மாதிரி சிறப்பு 'Making of' எல்லா ஒலிப் பேழைகளிலும் இடம் பிடிக்கவேண்டும்.

    ஏற்கனவே 'கல்யாண அகதிகள்' படத்திற்கு கே. பாலச்சந்தரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைக் கொடுத்தார். வி எஸ் நரசிம்மன், பாலச்சந்தர் மற்றும் பாடலாசிரியர் (யார்?) எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் வெளிவந்த நிகழ்ச்சிகளின் தலைப்பைக் கொண்டு பாடல் எழுதுவதையும் மெட்டுப் போடுவதையும் பதிவாக்கியிருந்தார்கள்.

    ஃபாசிலும் இளையராஜாவும் மீண்டும் அசத்தியிருக்கிறார்கள்.


    1. கஜுராஹோ - ஷ்ரேயா கோஸல், ஹரிஹரன் - 3.5/4

    பிடித்த பாடகி; பிடித்த பாடகர்; பிடித்த இசையமைப்பாளரும் சிரத்தையாக டூயட் போடுகிறார். அவிழ்த்துப் போட்டு கிளர்ச்சியை மட்டும் கிளப்பி விடாமல் நினைவில் நிற்கும்படி காட்சியமைக்கும் இயக்குநர். ஸ்ரீகாந்த்தும் சோனியா அகர்வாலும் 'கனா கண்டேன்' போல் ஏமாற்றாமல் பட்டை கிளப்பும் பாடல்.


    2. என்ன பாட்டு வேண்டும் - சோனு நிகம் - 2/4

    இளையராஜாவின் அட்வைஸ் பாடல். (ஏவிஎம் சரவணன்: படத்தில் ஐந்து பாடல்கள்தான். ஆனால் கேசட்டில் ஆறு பாட்டுகள் இருக்கும். 'இளையராஜா டைட்டில் சாங் பாடினால் படம் நன்றாக ஓடும்' என்று ஒரு சென்ட்டிமெண்ட் இருந்தது. வாலி 'அம்மன் கோவில் கிழக்காலே' என்று ஒரு பக்திப் பாட்டு எழுதித் தந்தார். ராஜா பாடினார். அதுதான் கேசட்டில் ஒரு பாட்டு எக்ஸ்ட்ராவாக வந்தது.)

    'புரியாத பாட்டை விட்டு
    புரிகின்ற பாட்டைக் கேள்'



    3. காற்றில் வரும் கீதம் - ஷ்ரேயா கோஸல், பவதாரிணி ஹரிஹரன், சாதனா சர்கம், இளையராஜா - 3.5/4

    இன்றைய தூள் பாடல்.

    'வருந்தும் உயிருக்கு
    அரு மருந்தாகும்
    இசை
    அருந்தும் முகம் மலரும்
    அரும்பாகும்'



    4. கொஞ்சம் திற - சோனு நிகம், ஷ்ரேயா கோஸல் - 2/4

    இந்தப் பாடலுக்கு சோனு நிகம் தேவையா :-(


    5. காற்றில் வரும் - இளையராஜா

    வாலி: 'ஸ்ரீமுகுந்தா கேசவா... நான் உன் புகழைப் பேசவா...' எப்படியிருக்கும்?
    ராஜா: நல்லாருக்கு. ஆனால், பாட்டில் வந்து 'பேசவா' என்றிருக்கிறது
    வாலி: பாடவா என்றிருக்கணும்கிறியா? கேசவா என்றவுடனே இயைபுத் தொடை பேசவா என்று போட்டுட்டேன். பாடவா என்று போட்டா 'கேசவா'வை 'ஆடவா' என்றுதானே போடணும்.
    ராஜா: அது நல்லாருக்காது
    வாலி: இன்னும் ஒரேயொரு தடவைப் போட்டுக் காட்டேன்.
    ராஜா: ஒரு தடவை என்னண்ணா... ஆறுவாட்டி பாடலாம்.
    வாலி: ...
    ராஜா: ஆஹா... நீங்களே நல்லா பாடறீங்க
    வாலி: நான் பாடி யார் கேக்கறது? நீதான் கேக்கணும்


    6. இளமைக்கு - சோனு நிகம் - 1.5/4

    ரஜினி, விஜய், அஜீத் பாதையில், நாயகனின் எழுச்சிப் பாடல். திரைப்படத்தில் இடம்பெறும் சமயத்தில் தம்மடிக்கவோ, பாப்கார்ன் வாங்கவோ, வலைப்பதிவுக்கு விமர்சனக்குறிப்புகள் எடுக்கவோ பயன்படும் நேரம்.


    7. காற்றில் வரும் - ஷ்ரேயா கோஸல், பவதாரிணி

    8. பொண்ணுகிட்ட மாப்பிள்ள - டிப்பு, மஞ்சரி - 3/4

    குடும்பம், நண்பர்கள் எல்லாரும் இணைந்த குரல்களாய் கலாட்டா பாடல். நடுவே கொஞ்சம் ரம்மியமான பார்வை பரிமாறல். மீண்டும் குழுவோடு கும்மாளம்.


    ஜூலி கணபதிக்குப் பிறகு ஏமாற்றாத (ஆனாலும் 101% திருப்தி கொடுக்காத) இளையராஜா படப் பாடல்கள். (oru naal oru kanavu)

    வியாழன், ஜூன் 23, 2005

    அமுதசுரபி - ஜூன் 05

    வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி:: கரு: பெண்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமை, புதிய சிந்தனை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும். 2005 ஜூன் முதல் 2006 ஏப்ரல் வரை மாதம்தோறும் ஒரு சிறுகதை, முத்திரைக் கதையாகத் தேர்வுபெற்று அமுதசுரபியில் வெளியாகும். கதைகளை அந்தந்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கதைகள், அமுதசுரபியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கதைக்கும் ரூ.1,000 பரிசு வழங்கப்படும்.

    மாதம்தோறும் சிறந்த ஒரு கவிதை தேர்வாகும். கவிதை, எந்தக் கருப்பொருளிலும் இருக்கலாம். முப்பது வரிகளுக்குள் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கவிதைக்கு ரூ. 500 பரிசு வழங்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.



    ஒருத்தி படுத்தும் பாடு

    முந்தைய தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் உள்ள படைப்பாளிகளிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முன்னவர் பலர், பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகம் எனச் சென்று முறையான கல்வி பெற்றதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் நிறைய வாசித்தனர். இன்றைய படைப்பாளிகளோ, முறையான கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெறுகிறார்கள். ஆனால், இவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் முறையான கல்வி பெற்ற - பெறாத படைப்பாளிகள் இடையிலான ஊடாட்டங்கள் பல. அவற்றுள் சிலவற்றை முறையான கல்வி கற்ற முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் இங்கு இலேசாகத் தொட்டுக்காட்டுகிறார்.


    பண்டிதர், பண்டிதர் அல்லாதார் எனப் படைப்பிலக்கியவாதிகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம். முறையாகக் கல்வி கற்றவர்களைப் பண்டிதர்கள் என்று சொல்லலாம். கல்விக் கூடங்களில் முறையாகப் பயிலாதவர்களைப் பண்டிதர் அல்லாதார் வரிசையில் சேர்க்கலாம். முனைவர் மு.வரதராசன், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி இவர்களெல்லாரும் பண்டிதப் படைப்பாளிகள். கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்றோர் பண்டிதர் அல்லாத படைப்பாளிகள்.

    பண்டிதர் அல்லாத படைப்பாளிகள் முறையாகக் கல்வி கற்கவில்லையே தவிர மற்றபடி மெத்தப் படித்தவர்களே. தனிப்பட்ட முறையில் அவர்கள் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்துத்தள்ளியிருப்பார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் எப்படி எழுத்தாளர் ஆக இயலும்?

    ஜெயகாந்தன் முறையாகக் கல்வி கற்றதில்லை. ஆனால் பழைய இலக்கியங்கள் பலவற்றையும் வரிவரியாகப் படித்தவர். பாரதி விழாவொன்றில் பேசும்போது 'மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!' என்ற பாரதி வாசகம் பற்றி ஜெயகாந்தன் சொன்னார்: 'மாதர்களை நாமா இழிவு செய்கிறோம்? தேவையற்ற ஆடம்பர உடைகள் மூலமும் அணிமணிகள் மூலமும் மாதர்களே அல்லவா அவர்களை இழிவு செய்துகொள்கிறார்கள்? ஆகையால்தான் மகாகவி சொன்னார், மாதர் - தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று!' இப்படி ரா.அ. பத்மநாபன், சீனி விஸ்வநாதன் போல ஆய்வு நோக்கில் கருத்துச் சொல்ல வேண்டுமானால் பாரதி இலக்கியத்தை எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. ஜெயகாந்தன், முறையாகக் கல்வி கற்ற பண்டிதர் அல்லா விட்டாலும் இளமைக் காலங்களில் முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நட்புறவில் ஏராளமான பழைய இலக்கியங்களைத் தனிப்பட்ட முறையில் பயின்றதுதான் அவரது எழுத்தின் இலக்கியச் செழுமைக்குக் காரணம். (இதைப் புதுமைப்பித்தனையும் அழகிரி சாமியையும் ஜானகிராமனையும் கூடப் படிக்காமல் இன்று எழுத வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.)

    புதுவைப் பல்கலை முன்னாள் துணை வேந்தரான அமரர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன் அழைப்பை ஏற்று, முறையாகக் கல்வி கற்காவிட்டாலும் புதுவைப் பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் கி.ராஜ நாராயணன். தமக்கு ஆங்கில இலக்கிய அறிவு சுத்தமாகக் கிடையாது என்பது போல் சொல்லிக்கொள்வார். ஆனால் அவரிடம் உரையாடும் போது ஆங்கில இலக்கியங்கள் குறித்து அவர் பேசும் பேச்சு பிரமிக்க வைக்கும்.

    உயர்கல்வி கற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன சிலர் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எழுத்தாளர்கள் போல் தோற்றம் காட்ட முயன்றதுண்டு. (பழைய தீபாவளி மலர்களில் அப்படிப்பட்ட சிலரது மிகச் சராசரியான படைப்புகளை நாம் பார்க்க முடியும்.) நல்ல எழுத்தாளர்களாக இருந்த மிகச் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உண்டு. வி.எஸ். சுப்பையா ஐ.ஏ.எஸ். எழுதிய, அஞ்சல் ஊழியரைக் கதா நாயகனாகக் கொண்ட 'இரட்டை வாழ்க்கை' என்ற நாவல் எளிமையான நடையில் எழுதப்பட்ட ஒரு நல்ல படைப்பு. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ. இறையன்பு, நல்ல கட்டுரை யாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். (சிறந்த கட்டுரையாளரான பேராசிரியை வெ.இன்சுவையின் சகோதரர்.) எஸ்.வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்., சிறந்த பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதிய படைப்பாளி. அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு "பிரயாணம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதற்கான நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி உள்பட, பலர் பங்கேற்றார்கள்.

    ஜெயகாந்தன் "இலக்கணத்தை மீறலாம். இலக்கணம் அறிந்து ஒரு தேவை கருதி மீற வேண்டும். அப்படித் தேவை நேர்ந்தால் நான் மீறுவேன். அறியாமையால் இலக்கணத்தை மீறுவது சரியல்ல' என்று கருத்துச் சொன்னார். பிறகு சில மாதங்கள் கழித்து ஆனந்த விகடனில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்ற தொடரை அவர் தொடங்கினார். "இலக்கணப்படி ஓர் உலகம் என்று தான் இருக்க வேண்டும். ஆனால் என் கதாநாயகன் ஹென்றியின் தனித்த உலகம் என்பதைப் புலப்படுத்தவே ஒரு உலகம் என இலக்கணத்தை மீறி எழுதுகிறேன்' என்று அவர் விளக்கமளித்தார்.

    நா.பா.வுக்கு கல்வியை முறையாக மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தீராத வேட்கை இருந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரி மாலை வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐம்பது வயதுக்கு மேல் முத்து கண்ணப்பரிடம் சேர்ந்து முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வையும் முடித்தார். ஆனால் பிஎச்.டி. பட்டம் வரவிருந்த தருணத்தில் அதைப் பெற இயலாமலே காலமானார்.

    கல்வியாளர்கள் சிறந்த படைப்பிலக்கிய கர்த்தாக்களாக இருக்கமாட்டார்கள் என்பதாக தமிழ் எழுத்தாளர்களிடையே முன்பு பரவலாக ஒரு கருத்து இருந்தது. பிரமிள் கூட இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார். இ.பா. போன்றவர்கள் வந்த பிறகுதான் இத்தகைய கருத்து மாறத் தொடங்கியது. 'தமிழின் பழைய இலக்கியங்களைப் படித்தால் சிறந்த படைப்பிலக்கியவாதி ஆவதை அது தடுத்துவிடும்' என்பது போன்ற அபத்தமான கருத்துகள் கூடச் சில சிறு பத்திரிகைகளில் எழுதப் பட்டது உண்டு.

    சச்சின்

    மூன்று பொங்கல் படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    ரஜினியின் ஐ.எஸ்.ஓ. 9000 முத்திரையுடன் சந்திரமுகி வெற்றி.

    ரஜினி திரைக்கதை எழுதினால் 'பாபா'. கமல் எழுதினால் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. நடிகர்கள் திரைக்கதை அமைத்தால் அறுவை. கமலின் சில படங்கள் மனதை வருடும். சிரிப்புக்காக வருபவை மனதில் தங்கும். மசாலா கூட 'கிஸ்ஸை பாருங்கப்பா' என்று பேச வைக்கும். கமல் ரசிகர்களே 'Take a break... Kamal' சொல்ல வைக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வி.

    விஜய்யும் மூன்று விதமான படங்களில் நடிக்கிறார். கதாநாயகிகளை நம்பி எடுக்கும் படங்கள் முதல் வகை. அதிரடி சண்டைக் காட்சிகளை மசாலா தூவி கொடுக்கும் படங்கள். கடைசியாக ஷாஜஹான், யூத் போன்ற காதல் படங்கள்.

    கத்திரிக்காயைக் கண்டாலே எனக்கு ஆகாது. கத்திரி பிட்லாவை நன்கு வதக்கி காய் தெரியாவிட்டாலும், உட்பொருளில் கத்தரிக்காய் இடம்பெற்றிருக்கிறது என்றால் பகிஷ்கரிப்பேன். ஒரு காலத்தில் விஜய் படம் என்றாலே aversion. மோகினி, சங்கவி, நாயகிகளை அரையாடையில் திரையில் நீச்சலடித்ததால் சில வெற்றிகளை அடைந்தார். விஜய் ரசிகர் அல்லாத என்னைப் போன்றோரைக் கூட 'பூவே உனக்காக', 'மின்சார கண்ணா' போன்ற மென்மையான இயக்குநர் காவியங்களின் மூலம் கவனிக்க வைத்தார்.

    சச்சின் மற்றுமொரு இதமான படம். திருப்பாச்சி, மதுரவின் சத்தம் இல்லாமல், தன்னுடைய பன்ச் வசனங்களை தானே கிண்டலடித்துக் கொள்ளும் பதிவு. கல்லூரிப் பெண்கள் அடிக்கடி சொல்லும் 'So silly', 'Shut up' போன்ற பிரயோகங்களை அதே மாதிரி உபயோகிக்கிறார்கள்.

    நடுத்தர வர்க்கத்திற்கு மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்னும் பயம் உண்டு. படம் நெடுக தேவையற்ற போலித்தனங்கள் சாடப்படுகிறது.

    ஜோதிகாவின் அதீத சுட்டித்தனத்தாலும் சூர்யாவின் மீதான வாலி எதிர்பார்ப்புகளினாலும் மும்தாஜின் நடிப்பினாலும் 'குஷி' கொட்டாவியாக இருந்தது. காய்கறிக்காரன் கூடக் கொஞ்சம் கொசுறு போட்டுக் கொடுப்பது போல் பாய்ஸ் நாயகியும் கொஞ்சமே கொஞ்சம் செயற்கை காண்பிக்கிறார். ஆனால், கல்லூரிப் பெண்களிடையே இவ்வித செயற்கைத்தனம் இயல்பு. உதட்டளவில் ஹாய் சொல்வது, நவீன இலக்கியத்திற்காக மேஜிகல் ரியலிஸம் எழுதும் படைப்பாளி போல் நாகரீகத்திற்காக உவப்பில்லாத ஆடைகளை அணிவது, தனிமையில் சுதந்திரத்தை ரசிப்பது என்று பதின்மர்களை படம் பிடித்திருக்கிறார்கள்.

    இளைய தளபதி இயல்பாக வந்து போகிறார். இரண்டே சண்டைக் காட்சிகள். காலேஜ் கோமாளித்தனங்கள். சச்சினாக விஜய் வருடத்துக்கு ஒரு முறையாவது நடிக்க வேண்டும்.

    புதன், ஜூன் 22, 2005

    குமுதம் ஹெல்த்

    எதற்குமே அனுசரித்துப் போகாதவர்கள் மனநோயாளிகளா?

    ப்ரியா ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கம்பெனி எடுக்கும் பல முடிவுகளை இவரிடம் இறுதியாக ஆலோசித்து எடுக்கும் அளவிற்கு திறமைசாலி. கை நிறைய சம்பளம். வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். எல்லா திறமைகள் இருந்தும் இவரது குடும்பத்தார் முதல் கம்பெனி வாட்ச்மேன் வரை முகம் சுளிக்க வைக்கும் ஒரு குறைபாடும் இவரிடம் உண்டு. எந்த சூழ்நிலையிலும் யாரையும் எதையும் எதற்காகவும் அனுசரித்துப் போகவே மாட்டார். தான் சொன்னால் சொன்னதுதான். அதில் மாற்றமே இல்லை என்பதில் கொஞ்சம் அதிகப்படியான பிடிவாதமாக இருந்தார். அதனால் பல வழிகளில் இவர்மேல் பலருக்கு வெறுப்பு.

    எல்லோரும் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டார். எதையும் அனுசரித்துப் போகாததால் (Adjustment disorder) இவருக்குள் எழுந்த உள்மனப் போராட்டம் இவரை நடைப்பிணமாக்கிவிட்டது.

    சில சமயம் விரக்தியாகப் பேசுவார். சில சமயம் எரிந்து விழுவார். யாருடனும் ஒட்டாமல் தனிமையில் இருந்தார். குறிப்பாக ஆண்களை அனுசரித்துப் போகவே கூடாது என்பது அவரது ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

    இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை மனதளவில் முடக்கிப் போட்டுவிட்டது. விளைவு, அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாமல், கை கால் பலம் இழந்து, கன்னம் ஒட்டிப்போய் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலைக்கு வந்துவிட்டார். அதன் பிறகுதான் வேறு வழியில்லாமல் மனநல மருத்துவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

    இவருக்குள் இருக்கும் அனுசரித்துப் போக முடியாத மனநிலை தான் இவரது மனநலக் கேட்டிற்குக் காரணம் என்று மருத்துவர் கூறிவிட்டார்.

    நமக்கு வரும் பல மனநோய்களுக்கு நம்முடைய உள்மனம் தான் காரணம். உள்மனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப சிலர் உணர்வுபூர்வமாக கொதிப்படைந்து பேசுவதும், தாறுமாறான எண்ணங்களைக் கொள்வதும்தான் மனநலக்கேடுகள் வர மிக முக்கியக் காரணங்களாக அமைகின்றன. உள்மனத்தில் ஏற்படும் குறைபாடு மேல் மனக்கோளாறாக மாறும்போது உடலிலும் பலவித நோய்கள் வெளிப்படும் என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை.

    அச்சப்படுவது, வெட்கப்படுவது, எரிச்சல் அடைவது, எதிலும் அனுசரித்துப் போகாத போக்கைக் கடைப்பிடிப்பது, ஆதங்கப்பட்டுப் பேசுவது என்று சின்னச்சின்ன உணர்வுகள் உள்மனத்தின் வேலையாக நம்மை ஆட்டிப் படைப்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.

    காரணங்களும் அறிகுறிகளும் :-

  • சிலருக்கு புதிய சூழ்நிலையில், புதிய வேலையில் சேர்ந்தால் அனுசரித்துப் போக முடியாமல் போகும். ஆனால் நாளாவட்டத்தில் அதை அவர்கள் சரி செய்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு புதிதாக யார் வந்தாலும் அனுசரித்துப் போக மனம் வராது.

  • தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்காத பட்சத்தில் அவர்களை எதிராளியாக நினைக்கத் தொடங்கிவிடுவர்.

  • தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்ற மனோநிலை அடிக்கடி எழும்.

  • தன் பரம்பரை பற்றி தற்பெருமை அதிகம் பேசுவார்கள். இந்த சென்னை மாநகரமே தன் மூதாதையர் நிர்மாணித்ததுதான் என்ற ரீதியில் கூட அவர்கள் பேச்சு எழும்.

  • திருமணமான பெண்கள், மாமியாருக்கு அடங்கி நடப்பதுபோல் தெரிவார்கள். ஆனால் ஏறுக்குமாறாக எதையாவது செய்து வைப்பார்கள். கணவருக்கும் சமுதாயத்திற்கும் பயந்து தன்னுடைய அனுசரித்துப் போக முடியாத நிலையை - வெளிப்படுத்த முடியாத நிலையில் இப்படி நடந்து கொள்வார்கள்.

  • சிலருக்குக் குறைவாக இருக்கும். சிலருக்கு மிதமிஞ்சி இருக்கும். இதில் ஆபத்து என்னவென்றால், மிதமிஞ்சி இருப்பவர்கள் வெளியில் காட்டமாட்டார்கள். அதனால்தான் அவர்களின் உள்மனம் அவர்களை தேவையற்ற எண்ணம் கொள்ளச் செய்து மனக்கேடுகளை உருவாக்கி விடுகின்றது.

    அனுசரித்துப் போகாதது ஒரு பெரிய பிரச்னையா? இதைப் போய் எப்படி மனநோய் லிஸ்ட்டில் சேர்க்க முடியும் என்று கேள்வி எழுப்புவர்கள் இருக்கிறார்கள். அப்படி கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவுதான் ப்ரியா போன்றவர்கள் மனநலம் கெட்டு சிகிச்சை வரை வந்து போக வேண்டியதாகிவிட்டது. அனுசரித்துப் போக முடியாத மனநிலை கொண்டவர்களுக்கு, அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர, கீழே சொல்லப்பட்டுள்ள யோசனைகள் உதவக்கூடும்.

    1. நடத்தை சிகிச்சை:

    அனுசரித்துப் போக முடியாத மனநிலைக்கு உட்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் காரணங்களை ஒரு தாளில் குறித்துக் கொள்ளுங்கள். யார் யாருடன் எந்தந்த காரணங்களுக்காக நம்மால் அனுசரித்துப் போக முடியவில்லை என்று எழுதிப் பாருங்கள். திரும்பப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே சில விஷயங்கள் சிரிப்பைத் தரலாம். சில விஷயங்கள் உங்கள் மேலேயே கோபத்தை ஏற்படுத்தும். நாம் அதில் கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாமே என்று உங்கள் மனமே சொல்லும். இவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, மறுநாள் அவர்களிடம் அனுசரித்துப் போக முயற்சி செய்யுங்கள். நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போனால், அவர்கள் அதைவிட இருமடங்கு உங்களுடன் அனுசரித்துப் போவார்கள்.

    2. மனதையும் உடலையும் தளர்வுபடுத்துங்கள்:

    உங்கள் உடலும் மனமும் ஸ்டிப்பாக இருப்பதால்தான் உங்களுக்கு இந்த மனநிலை. அதனால் ஓர் அமைதியான தனி இடத்தில் படுத்துக்கொண்டு கைகால்களை அவற்றின் போக்கில் விட்டு உடம்பைத் தளர்த்தும் பயிற்சியில் ஈடுபடுங்கள். அதே போல் மனதையும் தளர்ச்சிகொள்ள, எந்த துன்பம் தரும் எண்ணத்தையும் இந்த சமயம் நினைக்காதீர்கள்.

    3. உடற்பயிற்சி, யோகா, தியானம்:

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் முடிந்தளவு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்திற்கு இது உதவும். யோகா, தியானம் மனத்தை ஒரு முகப்படுத்தும்.

    4. நல்ல தூக்கம்:

    தூங்கி எழுந்த பின் உங்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் நீங்கள் நல்ல மூடில் இருப்பீர்கள். கண் எரிச்சல், மனத்திற்குள் ஒரு வித பயம், பதற்றம் இருந்தால் நீங்கள் சரியாகத் தூங்கவில்லை. நல்ல மனநிலையில் இல்லை என்று பொருள். எனவே குறைந்தது 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் வேண்டும். அதற்காக நல்ல நூல்களைப் படிப்பது, தூக்கம் வரும் வரை இசை கேட்பது நல்லது.

    5. புகை, மது கூடவே கூடாது:

    பிறருடன் அனுசரித்துப் போக முடியாதவர்கள், துணைக்கு நாடுவது புகையையும் மதுவையும்தான். இது இம்மனநிலையை மேலும் மோசமடைய வைக்கும். அதனால் புகை, மது கூடவே கூடாது.

    6. போட்டி மனம் வேண்டாம் :

    தேவையில்லாமல் பிறருடன் போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. போட்டி மனம் தான் உங்களை பலவீனப்படுத்தி, மற்றவர்களுடன் அனுசரித்துப் போகவிடாமல் செய்யும்.

    7. சமூக உறவைப் பலப்படுத்துங்கள்:

    தோழமையுள்ள நல்ல சமூக உறவை மற்றவர்களுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக முயன்றாலே இம்மனநிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களைத் தவிர்த்து விடலாம்.

  • அடையாளம்

    பிபிசியைப் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ் நாடு என்றவுடன் நினைவுக்கு வந்த பத்து வார்த்தைகள்

    1. சேலை
    2. வேட்டி
    3. சினிமா
    4. கோவில்
    5. வாழை இலை
    6. திண்ணை
    7. தாலி
    8. பஸ்
    9. குடிசை (ஃப்ளாட்?)
    10. தினமணி (தி ஹிந்து?)

    அச்சன் அலகு

    66.3 மில்லியன் - அமெரிக்காவில் அப்பாக்களின் எண்ணிக்கை.

    26.5 மில்லியன் - பதினெட்டை எட்டாத குழந்தையை உடையவர்களின் எண்ணிக்கை.

    393,000 - துணையின்றி தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள் (1970-இல்)

    2.3 மில்லியன் - துணையின்றி தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள் (2003-இல்)

    98,000 - வீட்டிலிருந்து கொண்டு (பதினைந்து வயதுக்குள்ளான) குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் தந்தையர்கள்.

    செவ்வாய், ஜூன் 21, 2005

    மறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்

    எதற்காக இந்த அசட்டு அடைக்குறிப்பு

    அடைக்குறிப்புகளை எழுதிய பொருளை மெருகேற்ற அல்லது அதன் பொருளை உணர்த்த உபயோகம் செய்யலாம்.

    ஆனால் பலர் அதை தவறான முறையில் பின்குறிப்பு போல் உபயோகம் செய்கின்றனர். குறிப்பாக வெகுகாலமாக இணையத்தில் உள்ளவர்களே எழுதுகிறார்கள். இது ஒரு தவறான பழக்கமாகும்.

    உங்கள் எழுத்தை மேம்படுத்த நினைத்தால் அடைகுறிப்பை குப்பை போல் உபயோகம் செய்வதை நிறுத்துங்கள்.

    உதாரணம் ..

    முளையை கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றேன் (ஆமாம் பெருசா மூளை இருக்குன்னு நினைப்பா)

    நான் இந்த வார எழுத போவது என்னவென்றால் (இவன் எழுதலைனு யாரு அழுதா)

    இப்படி பல உண்டு.

    நீங்கள் பின்குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம். உங்களை யாரும் இந்த ஒரு கட்டுரையை வைத்து மதிப்பீடு செய்யமாட்டார்கள். உங்களின் எழுத்தை பலவற்றை படித்து பின்னர் இந்த ஆள் இப்படி என்று மதிப்பீடு செய்யலாம்? அதை இது போன்ற அசட்டு அடைகுறிப்பால் மாற்ற முயலாதீர்கள்.

    சின்னா

    கேகே, அனுராதா ஸ்ரீராம்


    பெண்: காலங்காத்தால
    இம்சை பண்ணாதே

    ஆண்: கலங்க கலங்க
    உன் கதி கலங்க

    பெண்: வேணாம் வேணாம்
    விடுடா

    ஆண்: அப்ப
    மதியம் நேரம்
    கரெக்டா

    பெண்: வேணாம் வேணாம்
    விடுடா

    ஆண்: அப்ப
    சாயுங்காலம்
    கரெக்டா

    வேணாம் வேணாம்
    மத்த நேரம் வேணாம்
    ராத்திரி
    எதுக்கு இருக்கு?

    காலையிலே குளிச்சு
    கோலம் போடணும்
    நீ புள்ளி
    வைக்கும் நேரத்தில
    இம்சை பண்ணாத

    புள்ளி வைக்கும்போது
    நீ முன்னழகில
    என்னை
    புல்லரிக்க வச்சு நீ
    இம்சை பண்ணாத

    வாங்கி வெச்ச
    பாலெடுத்து
    காபி போடணும்
    பால்
    பொங்கி வரும் நேரத்தில
    இம்சை பண்ணாத

    பாலைக் காய்ச்சும்போது
    நீ பின்னழகில
    என்னை
    சுண்ட சுண்டக் காட்டி
    இம்சை பண்ணாத
    ஆட்டி வச்ச மாவெடுத்து
    தோசை ஊத்தும் நேரத்தில்
    உனக்கிந்த குறும்பெதுக்கு?


    வட்ட வட்ட தோசைகள
    சுடும்போதில
    என்ன வட்டம்போட வைக்குதடி
    இன் இடுப்பு



    ஊற வச்ச துணிக்கு
    சோப்புப் போடணும்
    நீ
    சோப்பு போடும் நேரத்தில்
    இம்சை பண்ணாத

    இடுப்பில சேலைய
    தூக்கி செருகி
    துணி கும்முகின்ற
    அசைவுகளில்
    இம்சை பண்ணாத

    உலை வைக்கணும்
    நீ
    மார்கெட்டுக்குப் போகும் போது
    இம்சை பண்ணாத

    மார்க்கெட்டுக்கு
    கிளம்பற நேரம் பார்த்து
    நீ முந்தானையை சரி பண்ணி
    இம்சை பண்ணாத

    எத்தனையோ
    எத்தனையோ
    வேலை இருக்கு
    ஆம்பளைக்கு
    ஒரு வேலைதான் இருக்கு

    ஒரு வேலை மட்டும்தான்
    என்று சொன்னாலும்
    அடீ
    அதுக்குள்ள பலப்பல
    வேலை இருக்கு


    (இந்தப் பாடல் வரிகளில் ஒரேயொரு தவறு மட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுவிட்டு திருத்துங்கள். கேட்காமலும் திருத்தலாம்?!)

    திங்கள், ஜூன் 20, 2005

    துக்ளக்

    Q&A - Jinnah Comment rebuke by Advani - Thuglaq Cartoion

    Jinnah Comment rebuke by Advani - Thuglaq Cartoon


    நன்றி: Yahoo! Groups : Thuglak

    கருணாநிதி

    'மெட்டி ஒலி' பாராட்டு விழா :: மெட்டி ஒலியை பார்த்தேன் என்று இங்கு எல்லோரும் சொன்னார்கள். மெட்டி ஒலி ஒளிபரப்பாகும் நேரம் எனக்கு ஒத்துக் கொள்ளாத நேரம். அந்த நேரத்தில்தான் அரசியல், இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பேன்.

    ஆனாலும் மெட்டி ஒலி ஒளி பரப்பான 810 நாட்களில் 400 நாட்களாவது நான் கண்டு ரசித்திருக்கிறேன். பாதியளவு இந்த தொடரை பார்த்து ரசித்ததிலேயே மெட்டி ஒலி பாராட்ட தகுதி வாய்ந்த தொடர்தான் என்பேன்.

    இங்கே மனோரமா பேசும் போது, பழைய கால நிகழ்ச்சிகளை தொடர்ந்து பேசி, என்னையும் அந்தக் காலத்துக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் சேர்ந்து நடித்த உதயசூரியன் கட்சி பிரசார நாடகத்தில் காங்கிரஸ் காரனாக நடிக்கும் என்னை தி.மு.க. வுக்கு அவர்தான் அழைத்து வருவதாக குறிப்பிட்டார். இதைப் பார்த்த சிலர், நாடகம் என்று கருதாமல் மனோரமாதான் என்னை தி.மு.க.வுக்கு அழைத்து வந்ததாக கருதக்கூடும். அப்படி நடந்திருந்தால் எனக்கு எவ்வளவோ தொல்லைகள் விட்டுப் போயிருக்கும்.

    மெட்டி ஒலியில் ஒரே நிலையில் (ஷாட்டில்) காட்சிகள் படமாக்கப்பட்டது சாதனை என்றார்கள். டி.வி.யில் இதுதான் முதல் முறை என்றார்கள். நான் வசனம் எழுதிய ராஜா ராணி படத்தில் 850 அடி நீள காட்சியை ஒரே ஷாட்டில் நடிகர் சிவாஜி கணேசன் வசனம் பேசி நடித்திருக்கிறார்.

    இதற்கு முன்பாக அம்மையப்பன் படத்திற்கு டைரக்டர் பீம்சிங் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதுபோல வசனம் எழுதியிருந்தேன். வேறொரு நடிகர் அதைப் பேசுவதாக இருந்தது, முடியாமல் போனதால் அதை சிவாஜிக்கு கொடுத்திருக் கிறார்கள். சிவாஜி உடனே, கலைஞர் இன்னொரு நடிகருக்கு எழுதிய வசனத்தை நான் பேச மாட் டேன்' என்று கூறி விட்டார். உடனே நான் அப்போதே எழுதிக் கொடுத்த வசனத்தைத்தான் ஒரே ஷாட்டில் சிவாஜி பேசி நடித்தார். இப்படியாக அன்றைக்கு சிவாஜியின் கோபத்தை தணித்தேன்.

    இப்போது மெட்டி ஒலியில் நடித்த பெரியவர் பற்றி நாடு முழுக்க பேசப்படுகிறது. மாமியார் கேரக்டர் பற்றியும் பேசுகிறார்கள். வீடு கெடுவதற்கு மாமியாரும், நாடு கெடுவ தற்கு சாமியாரும் காரணம். நான் எல்லா மாமியாரையும், சாமியாரையும் சொல்லவில்லை.

    இந்த தொடரில் கெட்ட மாமியாராக இருந்து ஒரு சோக நிகழ்ச்சியின் மூலம் திருந்துகிற நல்ல மாமியாராகி விடுகிறார். இந்த தொடர் முழுவதும் ஒரு குடும்ப கதை. பாரதத்தில் வருகிற பல சிறுகதைகளை ஒன்றாக பார்த்தது போன்ற உணர்வு வருகிறது. 5 பெண்கள் பற்றிய கதை. பாரதத்திலும் 5 பேர் தான் வருகிறார்கள்.

    மெட்டி ஒலி வரவேற்பு பலகையில் 12 உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயும் 12 பேர் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பன்னிரெண்டை யாரும் அலட்சியம் செய்யாதீர்கள்.

    கலைஞரின் பேச்சு வழக்கம் போல் ரசிக்கத்தக்கதாகவும் விஷயங்கள் நிறைந்ததாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருந்தது. 'எச்சில் வசனம்' என்று சிவாஜி தூக்கியெறிந்ததை சவாலாக எடுத்துக் கொண்டு, ராவோடு ராவாக புதிய வசனம் எழுதிக் கொடுத்தது; பெரும்பாலான உரையை 'குறிப்பு'களைப் பார்க்காமலேயே உரையாற்றியது; அந்தக்காலத்தில் எழுதியதை இன்றும் நினைவு கூர்ந்தது; இந்த வயதிலும் மொழி பிழறாமல் அசத்தலாக உச்சரித்தது;

    மேற்கத்திய உலகைப் போல் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் நேரடி விவாதம் வைத்தால், தேர்தல்களில் அதிமுக ஜெயிக்கவே முடியாது!
    -பாலாஜி

    நம்பமுடியவில்லை!

    Shaalini (Vijay TV Salanam, Kanaa Kanden)ஜூனியர் விகடன்: கடந்த 15-ம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் நடிகை ஷாலினி.

    'கும்பகோணம் கோபாலு' என்ற படத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாக 'மயூரி' என்ற பெயரில் அறிமுகமானவர்தான் இந்த ஷாலினி. அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஷாலினி கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வலியப் போய் சான்ஸ் கேட்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தார்.

    மலையாளத்தின் பக்கம் தனது கவனத்தை திருப்பியவர், மம்மூட்டி, மோகன்லால் போன்றோருடன் சினிமாக்களில் தலை காட்டினார். 'ஸ்த்ரீ' என்ற டி.வி. சீரியலில் நடித்து கேரளாவில் படுபிரபலமானார். அதன்பிறகு தமிழுக்கு வந்தவர் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சலனம்' சீரியலில் நடித்தார். அதன்பிறகு 'விசில்', '7ஜி ரெயின்போ காலனி', 'கனா கண்டேன்' என வரிசையாகப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

    வெள்ளி, ஜூன் 17, 2005

    தந்தையர் தினம்

    நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகிப் போனது. ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்தார். இந்த வருடத்து 'ஃபாதர்ஸ் டே'-வன்றுதான் கார்ல் மார்க்ஸுக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது.

    அமெரிக்காவில் எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். அப்பாக்களுக்கும் வருடத்தில் ஒரு நாளைக் கொடுத்து மகிழ்விக்கிறார்கள். ஜூன் 19 ஞாயிறு 'தந்தையர் தினம்'.

    அப்பாவுக்கு பரிசு தருவது முக்கிய நிகழ்வு. உடுக்க ஆடை, புதிய எலெக்ட்ரானிக் பொம்மை, செல்பேசி, கோல்ஃப் உபகரணங்கள் என்று விதவிதமாக கொடுக்கிறார்கள். தொலைபேசி குசலம் விசாரிக்கிறார்கள். 'பிராணனை வாங்காமல் உன் பாட்டை பார்த்துக் கொண்டாலே போதும்' என்று எனக்குத் தெரிந்த அப்பாக்கள் சொல்லியிருப்பார்கள்.

    பெற்றோராக ஆகும்வரை அப்பாவின் அருமை தெரிவதில்லை. தந்தையாக ஆனாலும், தாயின் அருமை விளங்கும் என்று சொல்வதற்கில்லை.

    குழந்தையைப் பர்த்துக் கொள்வது என்பது அறுபத்தி ஆறாவது கலை. (மனைவியை சமாளிப்பது #அறுபத்தி ஐந்து.)

    வேளா வேளைக்கு குழந்தைக்கு உணவு தர வேண்டும். ஆனால், சாப்பிட படுத்தும். ஒழுங்காக சாப்பிடா விட்டால் அதற்கு தூக்கம் வராது. சரியாகத் தூங்கா விட்டால், கொஞ்ச நஞ்சம் சாப்பிடதையும் வாந்தி எடுக்கும். ஆடை மாற்ற வேண்டும். வழுக்காமல், கண்ணில் ஜான்ஸன்ஸ் சோப் நுழையாமல் குளிப்பாட்ட வேண்டும். நான் சாப்பிடும்போதுதான் அதற்கு ரெண்டுக்கு வரும். மிளகு ரசத்தின் வாசனையை டயாப்பர் தூக்கியடிக்க, சுத்தம் செய்ய வேண்டும். கெக்க பிக்க என்று ஆடை போட்டு ஆடும் எம்டிவியை நிறுத்தி, கெக்கபிக்க என்று தொப்பையை ஆட்டும் டெலிடபீஸ் முதல் பார்னி வரை பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் மாற்றமில்லாமல் ஓட்டிய ரீலையே சுற்றும் டிவி சீரியல் போல் கைக்குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்ச்சிகள் பழைய கஞ்சியையேக் கொடுக்கும்.

    குழந்தையை ஒரு நாள் மேய்த்து முடிப்பது பெரிய விஷயம். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட அலுவலகத்துக்கு சென்றிருப்பதே சொர்க்கம் என்று சொல்லும்.

    அதை விட பெரிய விஷயம், மாலையில் வீட்டிற்குள் நுழையும் மனைவியை மேய்ப்பது. 'என்னடா... வீட்டை ரணகளமாக்கி இருக்கிறாயே' என்று கலிங்கப் போரில் மனம் வெறுத்த அசோகனாய் நம்மை லுக் விடுவார்கள். அவற்றைத் தவிர்க்க பொம்மைகளை ஒழுங்குபடுத்தி, சாப்பிட மறுத்த மீதிகளை குப்பையில் தள்ளி, பாத்திரங்களை டிஷ் வாஷரில் அடுக்கி, குழந்தைக்குப் புத்தாடை மாற்றி, கொஞ்சமாய் சமையலை துவக்கி, நறுமண மெழுகுவர்த்தியை ஏற்றி, கார் வரும் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்து முத்தம் கொடுத்து வரவேற்றால் விழியோரப் புன்னகை கிடைக்கும்.

    தந்தையர் தினத்துக்குப் பரிசுகளை விட மதியத் தூக்கம் வரப்பிரசாதம். இரவு முழுக்க நிம்மதியான உறக்கம் கிடைத்தாலும் ஒகேதான்.

    புதிய அப்பாக்களுக்கும் தினசரி வேலைக்குப் போய் தப்பித்துக் கொள்ளும் தந்தையர்களுக்கும் அவ்வப்பொழுது தாயுமானவர்களுக்கும் 7ஜி ரெயின்போ அட்வைஸ் அப்பாவை நினைப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    -பாஸ்டன் பாலாஜி

    அப்பா கதைகள் | சென்ற வருடப் பதிவு

    வாசிகா

    விகடன் புக் கிளப் :

    எம் தமிழர் செய்த படம் - சு.தியடோர் பாஸ்கரன் :: 'மக்களின் கேளிக்கைச் சாதனமாக, ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டிய சினிமா, சமூகத்தை ஆக்கிரமிக்கும் அசுர சக்தியாக மாறி, நம் அன்றாட வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது' என்று தமிழ்த் திரைப்பட வரலாற்றின் அரசியலை நாடிபிடிக்கிற நூல். தமிழ் சினிமாவின் தோற்றம், அதன் தொழில்நுட்ப வளர்ச்சி, பாட்டு, இடைவேளை, சினிமா மொழி, சென்சார் பிரச்னைகள், விவரணப் படங்கள் என்று சினிமாவின் சகல அம்சங்களையும் அக்கறையோடு அணுகுகிறார் தியடோர் பாஸ்கரன்.

    தென்னிந்தியாவின் மௌனப் படங்கள் பற்றிய முதல் கட்டுரையிலேயே நூலாசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது. தமிழ் சினிமா வின் பலம், பல வீனம் பற்றி அறிந்துகொள்ள உதவும் முயற்சி.

    (உயிர்மை. ரூ.100/-)



    பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் - சுப.வீரபாண்டியன் :: 'அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க' என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள்தான், பெரியாரின் கொள்கை. அந்த அடிப்படையில் திராவிடநாடு திராவிடருக்கே என்று முதலிலும், தமிழ்நாடு தமிழருக்கே என்று பிறகும் அவர் குரல் கொடுத்தார்' என்று தந்தை பெரியாரைத் தமிழ்த் தேசியத் தந்தையாக அடையாளப் படுத்தும் நூல்.

    தமிழ்த் தேசியத்தின் எதிரியாகப் பெரியாரைக் காட்டும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லும் முயற்சியில், ஆதாரங்களை அடுக்குகிறார் நூலாசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிடர் கழகம் தொடங்கி, மக்களின் சுயமரியாதைக்காகப் போராடிய பெரியாரைத் தமிழ்த் தேசிய வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

    (தமிழ் முழக்கம். ரூ.100/-)


    தலித்திய அரசியல் - ராஜ்கவுதமன் :: 'இங்கே ஒரு சாதிக்கு உள்ளேதான் சகலமும் என்றாகிவிட்டது. புண்ணியம், ஒழுக்கம், பாராட்டு எல்லாமே ஒரு சாதிக்குள்ளே தான் சாத்தியம். மற்றபடி ஒரு சாதி மற்ற சாதியுடன் பகைதான் பாராட்டுகிறது' என்று நமது சமூகத்தின் யதார்த்ததைக் கண்முன் நிறுத்துகிற ஆய்வு நூல்.

    இந்தியாவில் சாதி யின் பூர்விகம், அசுர பலம், தீண்டாமைத் தீவிரம், அதிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய இழிவிலிருந்து வெளிவர எடுத்த முயற்சிகள், அதற்காக உழைத்த தலைவர்கள் என வரலாற்றுத் தகவல்களும், ஆதாரங்களுக்கான மேற்கோள்களும் ராஜ் கௌதமனின் உழைப்பைக் காட்டுகின்றன.

    (பரிசல். ரூ.25/-)

    Anniyan Watch

    1. தமிழ் விமர்சனம்: தேக்கட

    2. சிஃபி

    3. இந்தியா க்ளிட்ஸ்

    வியாழன், ஜூன் 16, 2005

    என்னைப் பெரிய ஆளாக்காதீங்க

    நடிகர் விஜய் :: நிருபர் ஒருவர், "நீங்கள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திச்சு ஒரு 'கவர்' கொடுத்தீங்க! அது என்ன விவகாரம்?" என்று கேட்க.. "அது எங்க சொந்த விஷயம்" என்றார் ரொம்ப யோசித்து.

    "அதற்காக பத்திரிகையாளர்களிடம் கூட விளக்கம் சொல்லக்கூடாதா?" என்று திரும்பக் கேட்டார் நிருபர். சற்று நேரம் எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்த விஜய் இறுதியில் மீண்டும் "அதுதான் எங்க சொந்த விஷயம்னு சொல்றோமே!" என்றார் சற்று டென்ஷனுடன். இதையடுத்து எழுப்பப்பட்ட பல கேள்விகளும் விஜய்க்கு டென்ஷன் ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துவிட்டன.

  • "விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார். அதற்கு உங்களின் ஆதரவு இருக்கா..?"
  • "சுனாமி பாதித்த பகுதியில் அந்நிய மொழி நடிகர் ஒருவர்தானே வந்து உதவிகள் செய்தார்? நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    'பிரஸ் மீட்' முடிந்ததும் இடக்கு மடக்கு கேள்வி கேட்ட ஒரு நிருபரை நெருங்கி, 'என்ன கேள்வி கேட்கறீங்க. யோசிச்சுக் கேளுங்க. மாட்டிவிடப் பார்க்கறீங்களா?' என்று ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நிருபரின் நெஞ்சில் பதித்து எச்சரித்துவிட்டே நகர்ந்தார்.

  • புதன், ஜூன் 15, 2005

    துக்ளக் சித்திரங்கள்

    Clinton chats with Kalaijnar Karunanidhi - Thuglaq
    Mayavathi gives Ultimatum to Sonia - Thuglaq

    Kalaijnar Discussion on Tamil Nadu Bye election - Thuglaq
    TN Congress Situation Discussion by Ambika Soni - Thuglaq

    Vai Ko campaigns in bye-election TN  - Thuglaq
    Bhuta Singh's Laloo statement with karunanidhi & Anbazhagan - Thuglaq

    Cigar Smoking Dr Anbumani - Evils
    Manmohan lamenting Kofi Annan about Veto power in UN - Thuglaq

    Anniyan Censored

    Anniyan on Location - Thiagaraja Festivalsify.com: வரும் 17ம் தேதி வெளியாகவுள்ள அந்நியன் படத்துக்குத் தமிழக சென்ஸார் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. இதுவரை வந்த ஷங்கர் படங்களிலேயே இந்தப் படத்துக்குத்தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்ஸார் சர்டிபிகேட் கொடுக்கப் பட்டிருக்கிறது. "படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள்,"நல்ல மெஸேஜ் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்" என்று ஷங்கரிடம் சொன்னார்களாம். "இதையே பெரிய கிஃப்டாக நினைத்தேன்" என்கிறார் ஷங்கர்.

    Anniyan Shankar with Kunnakudi Vaidhyanathanthatstamil: படம் ரூ. 35 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம். போட்ட காசை விட ரூ. 10 கோடியை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த வருடம் பெரும் பொருட்செலவில் தயாரான தேவதாஸ் படத்திற்கு ரூ.35 கோடி செலவானதாம். இதற்கு அடுத்து அதிக பொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 525 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது.

    (சந்திரமுகி ரூ. 30 கோடி அளவுக்கு பிசினஸ் ஆனது. 600 பிரிண்ட் போடப்பட்டது.)

    செவ்வாய், ஜூன் 14, 2005

    குங்குமம் கேள்விகள்

    ராஜ்குமார், காரப்பாடி

    பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி?

    க தியாகராசன், குடந்தை

    நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?

    அ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம்

    பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...?

    எஸ் அபுதுல்லா அஹமது, நாகூர்

    தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்

    சிலந்தியின் பதில்கள் சிலாக்கியமில்லை. தங்கள் பதில்களை வரவேற்கிறேன் :-)

    காங்கிரஸ்

    kalki:: மதச்சார்பற்ற நடுநிலை கூட்டணியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வாக்காளர்களுக்கு முன்னிலைப்படுத்தியது; தேர்தல் பிரசாரத்தில் திட்டமிட்டுச் சீராக ஈடுபட்டது; அகௌரவமான விமர்சனங்களுக்கு மோசமான பதிலடிகள் தராமல், கௌரவமாக அவற்றை எதிர்கொண்டது, என்று சோனியா காந்தி தமது நேரத்தையும், சக்தியையும், சிந்தனையையும் வஞ்சனையின்றி காங்கிரஸுக்காகச் செலவிட்டார். தேர்தலில் ஜெயித்த பின்னர், பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, எதிர்கட்சிகளின் வாயை அடைத்தார்!

    மக்கள் தமது கட்சிக்கு வாக்களித்தாலும், அந்நிய தேசத்தைச் சேர்ந்த தம்மைப் பிரதமராக ஏற்கத் தயங்குவார்கள் என்ற நல்லறிவு சோனியாவுக்கு இருந்திருக்கலாம். அல்லது எதிர்கட்சிகள் தமது அன்னியத் தன்மையைச் சுட்டிக்காட்ட வழியின்றிச் செய்து விட வேண்டும் என்கிற அரசியல் நோக்கு இருந்திருக்கலாம்...

    இந்நிலையில் காங்கிரஸ் கீதத்தில் சில அபஸ்வரங்கள் நாராசமாக ஒலிக்கின்றன:

    முதலாவது: செயற்குழு உறுப்பினர்கள், நியமன முறையில் சோனியாவால் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பது.

    சோனியா காந்தியே காங்கிரஸின் நியமனத் தலைவர்தான். வேறு போட்டி நியமனங்களே இல்லாமல் தலைவியாகியிருக்கிறார். குடும்பப் பின்னணி - அந்தஸ்து காரணமாகத் தலைமையை எய்தியவர், அப்பொறுப்புக்கான தமது தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உண்மையே. அவ்வாறு வளர்த்துக் கொண்ட பிறகாவது கட்சி செயற்/பொது குழுக்கள், இதர செயல் பொறுப்புகளுக்கு முறையான தேர்தல் நடத்த அவர் தீவிரமாக முனைய வேண்டும். ஆனால் உட்கட்சி ஜனநாயகத்தை உடைப்பிலே போட்டுவிட்டு 'நியமனத்' தலைவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சோனியா.

    இரண்டாவது அபஸ்வரம்: "போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் பேரிலான குற்றச்சாட்டுக்கு சாட்சியங்கள் பலமாக இல்லை" என்று நீதிமன்றம் சி.பி.ஐயைக் கண்டனம் செய்து சகோதரர்களை விடுவிக்க, அதை காங்கிரஸ் தனது வெற்றியாகக் கருதி கூப்பாடு போடுவது; குற்றம் சாட்டிய இதர கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவது...! கூட்டணி ஆதரவுக் கட்சியான சி.பி.ஐ.எம், வழக்கு ஜோடனையின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி அரசு தரப்பை மேல்முறையீடு செய்யக் கோரியுள்ளது.

    மூன்றாவது அபஸ்வரம்: ஜமயத் - இ - உலெய்மா - இ - ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் சோனியா காந்தி ஆற்றிய உரை. "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகள் இந்தியாவின் இமேஜையே கெடுத்துவிட்டன" என்று பேசியவர், பா.ஜ.க கூட்டணியைப் போலன்றி தமது கூட்டணி இஸ்லாமியர்களுக்காகப் பாடுபடுகிறது என்று பேசியிருக்கிறார். "'பொடா' நீக்கப்பட்டதே இஸ்லாமியர்களுக்கு அதனால் விளைந்து வந்த அநீதியைக் கருதிதான்" என்றும் கூறியிருக்கிறார்! போதும் போதாததற்கு, "நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நாங்கள் செயல்படாமலிருக்கலாம்... ஆனால் இன்னும் முயற்சி செய்வோம்" என்று வேறு வாக்களித்திருக்கிறார்! இவை மிக அபாயகரமான வாக்கியங்கள்.

    மதச்சார்பற்ற கூட்டணி என்கிற பலத்தில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி கண்டிருக்கிறது. ஜமயத் மாநாட்டில் அரசியல் ஆதாயம் தேடுவதும், பா.ஜ.கவைச் சாடுவதும் எவ்வாறு மதச் சார்பின்மையாகும்?

    பொடாவை நீக்கியது சிறுபான்மையினரின் நலன் கருதித்தான். எனில், தற்போது அமலில் உள்ள பாதுகாப்புச் சட்டம் யார் நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கிறது?

    திங்கள், ஜூன் 13, 2005

    ஜாக்ஸன் துரை



    போகிற போக்கில் சில எண்ணங்கள்:
    1. அன்று ஒஜே சிம்ஸன்; இன்று ஜாக்ஸன்.
    2. பணம், புகழ் எல்லாம் வந்தாலும், வாழ்க்கையில் 'தேடல்' இருந்து கொண்டேதான் இருக்கிறது.
    3. புகழ்பெற்றவர்களை -- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இயலாத காரியம்.
    4. அமெரிக்காவில் நக்கீரனும் நெற்றிக்கண்ணும் மிஸ்ஸிங்.
    5. எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்க, ஊடகங்களும் (நானும்தான் :-), இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் தந்து எழுதுகிறார்கள்.
    6. இதன் பிறகும் குழந்தைகள் 'நெவர்லாண்'டுக்கு அனுப்பப் படலாம்.
    7. உண்மை என்ன என்பதை வாக்குமூலம் கொடுத்தாலும், பணம் குற்றஞ்சாட்டியவரைக் கூட சரிய வைக்கும்.
    8. ஊருக்கு பெரிய மனிதன், கையைப் பிடித்து இழுத்தால், அனைவரும் வேடிக்கை பார்ப்பார்கள்; கண்டிக்க மாட்டார்கள்.

    துவக்கு

    நெடுமாறன்: தென்றல் படத்தின் மூலம் தமிழ்க் குடமுழுக்கு விழாவைக் காட்டிய ஒரே காரணத்திற்காக இயக்குனர் தங்கர்பச்சான் சொல்ல முடியாத அளவுக்கு அவமானங்களுக்கும் புறக்கணிபிற்கும் ஆளாகியுள்ளார். இளம் இயக்குனர் புகழேந்தி ஈழத்தமிழர் அகதிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்த 'காற்றுகென்ன வேலி' என்னும் படத்தை திரையிடுவதற்கே அவர் உச்சநீதி மன்றம் வரை சென்று போராட வேண்டியிருந்தது. தமிழன் என்ற உணர்வோடு உள்ள இயக்குனர்கள் வ.செ.குகநாதன், சீமான், வேலுபிரபாகரன். வெ.சேகர் போன்றவர்களை ஒதுக்கித்தள்ளும் முயற்சி நடைபெறுகிறது.



    தளிர்ப்பு - காசி. ஆனந்தன்
    இலையுதிர்க் காலம்.
    மரம் மொட்டையாக நின்றது.
    புல் மேய்ந்த மாடுகள் மரத்தை
    இரக்கத்தோடு நோக்கின.
    'உன் இலைகள்
    விழுந்துக்கொண்டிருக்கின்றன.
    உன்னைப் பார்த்தால்
    அழவேண்டும் போல்
    இருக்கிறது..' என்று ஒரு மாடு
    தழுதழுத்த குரலில் கூறியது.
    மரம் சொன்னது-
    'நான் அதைப்பற்றிக்
    கவலைப்படவில்லை. புதிய
    தளிர்களுக்காக அவை
    விழத்தான் வேண்டும்.'
    நிமிர்ந்தே நின்றது மரம்.
    அது சொன்னது.
    'விழுவதெற்கெல்லாம்
    அழுவதற்கில்லை.'


    தெளிவு - த. பழமலய்
    திருவாட்டியோ
    'குதிரை, குதிரைதான்
    கழுதை, கழுதைதான்' என்பவர்.
    நன் மக்களுக்கோ நான்
    ஊறிய இடம்
    உப்புக்கிணறாம்.
    முன்னறி தெய்வங்களின் ஆறுதல்
    'பொசுப்பு இவ்வளவுதான்.'
    சுற்றப்பட்டோர் ஏமாற்றம்:
    'கரைசேர்ந்துட்டான்!'
    மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
    சொல்லவும் செய்கிறார்கள்.
    ஒன்றைப் பாருங்களேன்:
    'நானா இருந்தா இப்படி
    நடந்து போயிக்கிட்டு இருக்க மாட்டேன்.
    கார் வச்சிக்கலாம் நீங்க!'
    'எல்லாம் இருக்கட்டும்
    ஒங்கள பத்தி
    நீங்க என்ன நெனக்கிறீங்க?'
    அதான் கொளப்புறாங்களே!
    தெளியவா-?
    விடமாட்டார்கள்!

    நன்றி: yahoo groups | thuvakku ilakiya amaippu

    வெள்ளி, ஜூன் 10, 2005

    உடுப்பதற்கு ஆடை கூட இல்லாதவர்கள்

    Dinakaran::

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் நடிகைகள் ஜஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்ற பட்டியலை தரும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு பீகார் அரசு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் தாமதம் செய்தது. குறிப்பிட்ட தேதிக்குள் தந்தே ஆக வேண்டும் என்று அரசு கெடுபிடி செய்தது. எனவே அவசரம் அவசரமாக அரசுக்கு மாவட்ட நிர்வாகங்கள் பட்டியல் அனுப்பியது. அதைப் படித்துப் பார்த்த போது வறுமையில் வாடுவோர் பட்டியலில் ஐஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி, மாதுரி தீட்சித், ரவீணா டாண்டன் ஆகியோர் பெயர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    முசாபர்பூர் மாவட்டத்தில் இந்த கணக்கு கொடுத்து இருந்தனர். இந்த கணக்கெடுப்புப்பணியை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிக்க சோம்பல்பட்டு மாணவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் வீடு வீடாக செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடி விளையாட்டாக நடிகைகளின் பெயர்களை எழுதி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிட்டனர். இப்போது இந்தப் பட்டியலை சரிபார்த்து தவறுகள் களையப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    அக்கப்போர்

    "அட, புள்ளிவிவரப் புலியே... விஜயகாந்த் கட்சியில கொ.ப.செ-வா சேரப் போறியா, என்ன?"
    - அனு... அக்கா... ஆன்ட்டி...

    "மெயிலும் மெயிலும் கொள்ளையடித்தால், வைரஸ் என்று அர்த்தம்
    ப்ளாகில் பின்னூட்டம் நிறைஞ்சு வழிஞ்சால் சர்ச்சை என்று அர்த்தம்
    ப்ளாகில் பின்னூட்டமே வராவிட்டால் சரிச்சையானவர் என்று அர்த்தம்"
    - தொலைபேசியில் கேட்டது

    "ஒரு வாரத்துக்கு பத்து அனானிமஸ் வலைப்பதிவு வந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை; வியாதி!"
    - அரட்டையில் பார்த்தது

    பழைய புத்தக வியாபாரி

    தெருவாசகம் - யுகபாரதி::

    தெருவோர நூலகன்; படிக்கத்
    தெரியாத வாசகன் தேர்ந்த
    வறுமைக்கு அறிவை விற்கும்
    வாத்தியார் என்பேன் இவனை
    படித்தவர் வேலை இன்றி
    பாவமாய்த் திரிய; இவனோ
    படிப்போரை கொண்டு வாழும்
    பாமரப் பள்ளிக் கூடம்

    வேதநூல்; வீட்டுக் குறிப்பு;
    வேதியல்; கலையை பேசும்
    ஆதிநூல்; அறத்தை காக்கும்
    அகராதி; இத்தனை பிரிவில்
    எந்த நூல் உயர்வு? இல்லை
    எந்த நூல் தாழ்வு? இவனின்
    சிந்தைக்கு தெரிந்ததெல்லாம்
    சில நிமிட பேரம்; முடிவில்

    கிழிந்த நூல் தைக்கும் ஆசை
    கிழிபட்ட நாளை; யாரோ
    இழந்ததை எடுத்து விற்கும்
    இவனொரு காகித மேய்ப்பன்
    படித்தென்ன கிழித்தாய் சொல்க
    பழிபேசி திரியும் நம்மில்
    படிக்கவே கிழிந்த நூலை
    பரப்புவான் கிழிசல் மூட

    வைத்தகண் வாங்கா வண்ணம்
    வாசிக்கும் பழக்கம் கொண்டால்
    புத்தகப் புழுவே என்று
    புகழ்வோம்; ஆனால் இவனோ
    புழுமேயும் புத்தகத்தை
    புழுதியான உட்கருத்தை
    கழுவாத வயிற்றுக்காக
    கடைவிரிப்பான் கூவிக்கூவி

    உள்ளிருக்கும் மகிமை யாது?
    ஒருக்காலும் உணர்ந்தானில்லை
    செல்லரித்த அழுக்கு நூலாய்
    செலவழிவான் சகாய விலைக்கு
    புதியநூல் வாங்கி அதிலே
    பூக்கின்ற வாசம் நுகர்வோர்
    விதியதன் நெடியை இவன்மேல்
    வீசுதல் அறியக் கடவீர்.


    Thx: Anandha Vikadan

    புதன், ஜூன் 08, 2005

    விஜயகாந்த் அரசியல்

    kumudam:: ஸ்டார் டி.வி.க்கு அவங்க (ஜெயலலிதா) பேட்டி கொடுத்தாங்க. பழைய வாழ்க்கை பற்றிய பேட்டி அது. என் மனைவி பிரேமலதா மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேட்ட கேள்விகளும், அம்மாவின் அற்புதமான பதில்களும் அவ்வளவு உண்மையாக இருக்கும். பார்த்தவர்கள் எல்லோரும் உருகிப்போன பேட்டி அது. அம்மாவின் மிகச் சிறந்த பேட்டி.

    எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவர் அமைதியாக தலைவரின் தலைமாட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அவரைப் படுத்திய பாடு, அவர் பட்ட அவமானங்கள் எல்லாத்தையும் ஜீரணித்துக்கொண்டு அவர் தாங்கி நின்ற விதம், இன்னிக்கு அவர் காலூன்றி நிற்பதற்கான அச்சாரமாகத் தோன்றுகிறது.

    ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விடுங்கள், இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவை. சிறு கஷ்டத்திற்கும் அழுது துடிக்கிற பெண்களுக்கு மத்தியில் அவரின் தனித்த கலங்காத தன்மை தன்னிகரில்லாத உதாரணம்.

    இதுதான் முடிவு என்றால் முடிவு, லாபமா, நஷ்டமா முடிஞ்ச பின்னாடிதான் பரிசீலிப்பார். இதை நம்ம ஆளுங்க ஆணவம், அகம்பாவம்னு சொல்வாங்க. உண்மையில் அதற்குப் பெயர் தன்னம்பிக்கை.

    மத்த தலைவர்கள் வருவாங்க. போவாங்க. அவங்களுக்கான தனிப்பட்ட அடையாளங்கள் கிடையாது.

    அவங்களோட பெரிய புகழுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அவங்களோட வள்ளல் தன்மை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கொடுத்துப் பழகிய முதல்வர் அம்மா தவிர யாராவது இருக்காங்களா?

    இன்றைக்கு எத்தனையோ துயரப்பட்ட பெண்கள் முன்னுக்கு வரலாம் என்பதற்கு அம்மாதான் உதாரணம். ரோல்மாடல்.

    அம்மா பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருந்தால், இந்நேரம் எல்லோரும் புலம்பித் தீர்த்து இருப்பாங்க. அவங்களை முதுகில் குத்தியவர்கள் அதிகம். அதை இன்றைக்கு வரைக்கும் பேட்டியில் சொல்லிக்கிட்டதில்லை. தன்னந்தனியாக மீண்டு வந்து, சிரித்த முகமாக எல்லாத்தையும் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    அம்மாவோட மூன்று விஷயங்கள்தான் அவங்களோட வெற்றி. துணிச்சல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

    செவ்வாய், ஜூன் 07, 2005

    புத்தகக் குறி (மீமீ)

    புத்தகம் சொல்ல மீனாக்ஸ் அழைத்திருக்கிறார்.

    எனது புத்தகங்கள்: இதுவரை புரட்டியது ஆயிரம் இருக்கும். பெற்றோர்கள் வாசகராகவும் நான் கடைக்குட்டியாகவும் இருப்பதால் சிறிய வயதிலேயே புத்தகங்கள் நல்ல துணையானது. விக்கிரமாதித்தன், அலிபாபா, மதனகாமராஜன், ஈசாப், திருவிளையாடற் புராணம், பக்த விஜயம், திருத்தொண்டர் புராணம் என்று ஆன்மீகமும் ராஜா-ராணிகளும் நீதிகளும் கலந்து கட்டி அடித்த காலம்.

    கொஞ்ச காலம் கழித்து விகடனின் பொன் விழாவோடு கலாதர், மு. மேத்தா என்று தொடர்கதைகளில் நாட்டம் பிறந்தது. அந்தக் கால விகடன், இதயம் பேசுகிறது, போன்றவற்றில் வெளிவந்திருந்த தொடர்கள் எல்லாம் கத்தரிக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்டு வரிசைக்கிரமமாக பரணில் இருக்கும். லஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி என்று அலுக்க ஆரம்பித்த சமயம் தமிழ்வாணன் பரணை விட்டு இறங்கினார்.

    சீன் (சான்) நதிக்கரையில் என்று ஆரம்பித்து ஜெனீவா, கத்தரிக்காய் எல்லாம் பரிச்சயமானார்கள். பாக்கெட் நாவல் குட்டி போட்டு க்ரைம், சுபா, புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர்-தான் எல்லாமே என்றாகிப் போனது.

    தினமணிக் கதிரில் சில்லு எழுதி தேவ்லோகப் பிரஜையாக இருந்த கணிப்பொறியை அறிமுகம் செய்தார் சுஜாதா. ஏற்கனவே அரசல் புரசலாக அசத்தியவர் மொத்த வியாபரமாக மனதில் வியாபித்தார்.

    நான்காண்டுகளாய் பிலானி வாசத்தில் ஸ்டீவன் கோவ், ஃபிலிஃப் கொட்லர், ஆண்ட்ரூ டானென்பாம், பெர்ட் ஷ்மிட் என்று கலந்து கட்டியாக குருக்கள் மாறிப் போனார்கள். குமுதத்தில் கூட கோப்மேயர் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த சுய முன்னேற்ற வெறி கொண்ட காலம். அனைத்து சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஹெரால்ட் ராபின்சன், கென் ஃபாலெட் என்று மெழுகுவர்த்தி கரைத்த காலம்.

    வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் ஸ்ட்ருஸ்ட்ருப், லிப்மான், பூஷ், ரம்பா என்று அட்டை டு அட்டை உருட்டி தட்டி நோட்ஸ் எடுத்து வைத்துக் கொண்ட காலம் இன்றளவும் தொடர்கிறது. இப்பொழுது குறிப்பு எடுத்தால் வலைக்குறிப்பாவது மட்டுமே வித்தியாசம்.

    அமெரிக்காவில் தனிமை - கதையல்லாத புத்தகங்களின் மேல் நாட்டம் ஏற்படுத்தியது. வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறிய பிறகு சுவைக்கும் சரித்திரம், நகைச்சுவை, இசை, கலை என்று ரசனை மாறியது.

    நான்காண்டுகள் முன்பு சொக்கனின் அழைப்பில் ராயர் காபி கிளபில் ஒண்டிக் கொண்டேன். முருகன், வெங்கடேஷ், பாரா, எல்லே ராம் என்று பெருசுகள் சொல்ல சொல்ல கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காலங்கள். மீண்டும் தமிழ். அப்புறம் இலக்கியம். கடைசியாக இலக்கணம் என்று தமிழ்ப் பக்கம் திரும்பிய நேரம்.

    அமெரிக்காவின் அதிவேகச் சுழலில் ஆட்பட்டதன் விளைவோ அல்லது குடும்பத்து வேலைகள் அழைப்பின் காரணமாகவோ - புத்தகங்கள் படிப்பது தொடர்வண்டிப் பயணங்களில் மட்டுமே என்று ஆகிப் போயிருக்கிறது. வாரயிறுதிகளில் நண்பர்கள், சினிமா, தூக்கம், தொலைக்காட்சி, தொலைபேசி, தமிழ்மணம் என்று தொழில்நுட்பத்திற்கும் லௌகீகங்களுக்கும் சந்தோஷமாக செல்வழிக்கும் காலம் இது.

    நிறையப் புத்தகங்களைப் புரட்டுகிறேன். முன்னுரையும் முதல் சாப்டருடனும் நின்று போய் இருக்கும் புத்தகங்கள் நிறைய இருக்கிறது. நூலகத்தில் இருந்து ஆசையாக எடுத்துக் கொண்டு வந்து பத்து பக்கங்களுக்குப் பிறகு அபராதம் கட்டி திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

    கடைசியாக வாங்கிய புத்தகம்: மண்ணாங்கட்டி :: சிட்டி (நிவேதிதா)
    கடைசியாகப் படித்த புத்தகம்: அண்ணா :: என் சொக்கன் (கிழக்கு)

    சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்: (இது கொஞ்சம் பெரிய பட்டியல் என்பதால் ஜூட்)


    தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் புத்தக அலமாரி வரை செல்ல கண் மறுக்கும். அந்த மாதிரி கூகிள், புக்-ஷெல்ஃப் உதவியின்றி என்னைப் பெரிதும் பாதிக்கும் படைப்புகள்:

    1. கனவுத் தொழிற்சாலை - சுஜாதா
    2. கிறுக்கல்கள் - ரா பார்த்திபன்
    3. குருதிப்புனல் - இந்திரா பர்த்தசாரதி
    4. வெயிலைக் கொண்டு வாருங்கள் - எஸ் ராமகிருஷ்ணன்
    5. அலகிலா விளையாட்டு - பா ராகவன்


    நூலகத்தில் முன்பதிவு செய்த புத்தகங்கள்:

    1. Freakonomics : A Rogue Economist Explores the Hidden Side of Everything by Steven D. Levitt, Stephen J. Dubner

    2. Blink : The Power of Thinking Without Thinking -- by Malcolm Gladwell

    3. Dictionary Days -- by Ilan Stavans

    4. The End of Poverty : Economic Possibilities for Our Time -- by Jeffrey Sachs

    5. All the President's Men -- by Carl Bernstein, Bob Woodward


    தமிழில் ஏன் இப்படி இன்னும் வருவதில்லை என்று ஏங்கும் ஆங்கிலப் புத்தகங்கள்:

    1. Fooled by Randomness: The Hidden Role of Chance in Life and in the Markets by Nassim Nicholas Taleb

    2. All the Dave Barry You Could Ever Want by Dave Barry

    3. Passing Time in the Loo by Stevens W. Anderson

    4. The Daily Show with Jon Stewart Presents America (The Book): A Citizen's Guide to Democracy Inaction

    5. The Age of Paradox by Charles Handy



    நான் குறிக்கப்போகும் ஐந்து வலைப்பதிவாளர்கள்:

    கறுப்பி
    காஞ்சி பிலிம்ஸ்
    ராம் சி
    பிபி
    மாது காண்பதுவே


    இவர்கள் தவிர புத்தகக்கடையில் புழுவானவர்களும் குதியுங்களேன்!

    ரோஜா

    காதல் ரோஜாவே
    எங்கே
    நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி
    கண்ணே

    கண்ணுக்குள் நீதான்
    கண்ணீரில் நீதான்
    கண்மூடிப் பார்த்தால்
    நெஞ்சுக்குள் நீதான்

    என்னானதோ
    ஏதானதோ
    சொல்


    தென்றல் என்னைத் தீண்டினால்
    சேலை தீண்டும் ஞாபகம்

    சின்னப் பூக்கள் பார்க்கையில்
    தேகம் பார்த்த ஞாபகம்

    வெள்ளியோடை பேசினால்
    சொன்ன வார்த்தை ஞாபகம்

    மேகமிரண்டு சேர்கையில்
    மோகம் கொண்ட ஞாபகம்

    வாயில்லாமல் போனால்
    வார்த்தையில்லை பெண்ணே
    நீயில்லாமல் போனால்
    வாழ்க்கையில்லை கண்ணே

    முள்ளோடுதான் முத்தங்களா?
    சொல்!



    வீசுகின்ற தென்றலே
    வேளையில்லை
    நின்று போ

    பேசுகின்ற வெண்ணிலா
    பெண்மையில்லை
    ஓய்ந்து போ

    பூ வளர்த்த தோட்டமே
    கூந்தலில்லை
    தீர்ந்து போ

    பூமி பார்க்கும் வானமே
    புள்ளியாகத் தேய்ந்து போ

    பாவையில்லை
    பாவை
    தேவையென்ன தேவை
    ஜீவன் போன பின்பே
    சேவையென்ன சேவை?

    திங்கள், ஜூன் 06, 2005

    விந்தியா

    விவரணப்படம் தேவை

    தமிழோவியத்தில் ரஜினி ராம்கி ஜோதிகாவின் டாகுமெண்டரி குறித்து எழுதியுள்ளார்.

    சன் டிவியில் 'நட்சத்திரம்', கேடிவியில் சில நிகழ்ச்சிகள், 'நடித்ததில் பிடித்தது' என பல நிகழ்ச்சிகள் சாதாரணமாகவே இருக்கிறது. புகழ்பெற்ற நடிகரின் புகழ்பெற்ற படங்கள், அதிகம் அறிமுகமாகாதவர் என்றாலும் சிறப்பான காட்சிகள் அல்லது பெரிய இயக்குநர்களின் படத்தில் தோன்றிய காட்சிகள் என்றே நிரப்பிச் செல்கிறார்கள்.

    சமீபத்தில் 'வயசுப் பசங்க" படம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    'கண்ணம்மா' படத்தில் வில்லத்தனமான நடிப்பு. 'சங்கம'மில் வெகுளியான அறிமுகம். அப்பாவிக் களை சொட்டும் புதுமுக நாயகி. நடனமே தெரியாமல் அட்ஜஸ்ட் செய்த பாவங்கள்.

    நடுவே 'சார்லி சாப்ளின்', 'என் புருஷன் குழந்தை மாதிரி' படங்களில் குணச்சித்திர வேடம். கடைசியாக 'யெஸ் மேடம்' போன்ற படங்களில் கவர்ச்சி ஆட்ட சாயம்.

    இவரை எடுத்துக் கொண்டு விவரணப் படம் கொடுத்தால் எவ்வளவு அலசல்களை முன்வைக்கலாம்?

    - தமிழ் சினிமா நாயகிகளின் நிலைகள்
    - மேனேஜர்க்களின் கட்டுப்பாடுகள்
    - பெற்றோர் கூடவே கவனிப்பதின் பலன்கள்
    - முதல் கோணல் முற்றும் கோணல்?
    - ஒரு படத்தில் இரண்டாம் மனைவியாக நடித்ததால் தொடர்ந்து முத்திரை குத்தப்பட்டவர்கள்
    - இரண்டாம் நிலை ஹீரோக்களுடன் நடிப்பதால் மதிப்பிழத்தல்
    - ஊடகத் தொடர்பாளர்களுடன் நட்பு பாராட்டலின் அவசியங்கள்

    இது போன்ற பல்முகங்களை பல சந்திப்புகளின் மூலம் கொடுக்க முடிபவர்களைத்தான் டாக்குமெண்டரிகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மேற்கோள் படி

    சமீபத்திய புதுமைப் பெண்கள் நிகழ்ச்சியில் ரேவதி பேசியது:

    'இந்த நிகழ்ச்சி ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு என்றவுடன் நமக்கு உடனடியாக தோன்றுவது ஒன்றுதான். பெரியாரின் பிறந்த இடம் என்பதுதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அவரின் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவரோட புக்ஸ் நிறைய படித்திருக்கிறேன்.'

    ரசனை

    Tamil Sify ::

  • முற்றத்திலிருந்து...
    வாகன இரைச்சலுக்கு நடுவிலும், காதைக் கிழிக்கும் ஒலிப்பான்களின் இடையிலும் எங்கிருந்தோ கேட்கிறது குயிலோசை.

  • இன்னொரு யுகசந்தி
    ஓவியக்கலை என்பது கல்லை ஆயுதமாக மனிதன் பயன்படுத்திய காலத்திலேயே தொடங்கி விட்டது.

  • மோனகுரு சந்நிதியில்
    பொன்னி நதி தன்னுடைய பல்வேறு கிளைநதிகளுடன் பாய்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளப்படுத்திய தஞ்சாவூர் மாவட்டத்தில், சோழப் பேரரசர்களும், அவர் களுடைய குறுநில மன்னர்களும் கட்டிய திருக்கோயில்கள் அனேகம்

  • சேற்றூர் காட்சிகளும் சில மனிதர்களும்
    கிராமங்களில் இப்போது உழைக்கும் மக்களின் வீடுகளிலும் பரவலாக தொலைக்காட்சிப் பெட்டி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டதை நாமறிவோம்

  • அறங்கள் தளிர்க்கும் அந்த நாள் வருமா? - முனைவர் இரா. செல்வக்கணபதி
    நம் தாய்த்தமிழ் செம்மொழி என்ற பெருமிதத்தை எட்டிப் பிடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்

  • பின்பக்க ஜன்னலும்... மூன்றாவது கண்ணும்... - திரைச்சீலை ஓவியர் ஜீவா
    பிரெஞ்சு இயக்குனர் த்ரூஃபோ சொல்வது போல் இரண்டு வகை இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

  • புட்டா கவிதை
    ஸ்ரீசக்ரம்

  • பட்டணம் போனேன் பாட்டெழுத
    பாடலை படித்த வீரபத்ரன் என்மீது மிகுந்த பிரியம் காட்டினார்.

  • ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
    ஜெ.சைதன்யா அவர்கள் மீன்குஞ்சு நீரில் பிறப்பதுபோல இலக்கியத்திலேயே பிறந்தார் என்று கூறலாம்

  • ரசிகமணி கடிதங்கள்
    இன்று காலை முற்றத்திýருந்துகொண்டு நண்பர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்

  • மிதக்கும் காடு - தென்பாண்டியன்

  • கரி உரி போர்த்திய கண்ணுதற் கடவுள் - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
    தாருகா வனத்து இருடிகள் ஆணவமலம் மிக்குற்று மீமாம்சை வழிநின்று ஆபிஜார வேள்வி புரிந்தனர்.

  • கி.ரா. கடிதங்கள்
    சுயம்புவுக்கு நலமாக இருக்கிறோம் நாங்கள்.

  • இரண்டுகால் பூச்சியும் ஆறுகால் அவளும்...
    விடுமுறை நாட்களின் மதிய நேரங்களுக்காக அந்த மரத்தடி நிழலை மானசீகமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தாள் அவள்.

  • காற்றில் வாழும் கதைசொல்லி - கிருபானந்த வாரியார்
    காற்றில் ஒலியலைகள் அடுக்கடுக்காகப் பதிவாகின்றன.

  • வெள்ளி, ஜூன் 03, 2005

    கிடாராட்டம்

    பிட்ஸ், பிலானியில் வருடாவருடம் 'ஒயாஸிஸ்' (OASIS) என்னும் கலைவிழா நடக்கும்.

    தார் பாலைவனத்தில் ஒட்டகம் கால் வைத்தால் பிலானியில் வாய் எட்டிப் பார்க்கும். 'ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை' என்று சென்னைப் பதின்மர்கள் புலம்பினால், வருடம் முழுக்கவே அதே நிலையில் ஆழ்ந்திருக்கப் பழகியவர்கள். கானல் போல் பல கல்லூரிகளும் வந்து குவிய ஒரு வாரம் பட்டாம்பூச்சிக்கள் நடக்க, கண்ணாமூச்சிகள் பறக்கும்.

    கலை விழாவுக்குத் தேவையான 'ஒரே ஒரு நிமிடம்' (JAM), வினாடி வினாக்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு. அவற்றின் நடுவே 'மாக்டேவ்ஸ்' என்னும் கூத்து பிடித்துப் போனது.

    எனக்குப் பிடித்த பாடல் ரேடியோவில் ஒலித்தால் கூடவே முணுமுணுப்பது, 'போட்டு வைத்த காதல் திட்டம்' நடுநடுவே வரும் மெல்லிய ராக் இசைக்கு ஏற்றவாறு, கையில் இல்லாத கிடாரைக் கொண்டு மீட்டுவது, 'காற்றில் எந்தன் கீதம்' ஆரம்பத்தில் வரும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று வாய் மட்டும் திறந்து கண் மூடி லயிப்பது, 'தத்தித்தோம்...' என்று அழகனாய் தையல் மிஷினை பியானோவாக்குவது என்று அவ்வப்போது செய்து வந்ததை மேடையில் செய்து காட்டி பரிசு வாங்கும் போட்டி.

    அதே போல் அமெரிக்காவிலும் 'காற்றில் கிடார்' வாசிப்பவர்களுக்கான போட்டி நடைபெறுகிறது: The official US Air Guitar Championships

    நாளை (சனிக்கிழமை) Harpers Ferry சென்றால் கண்டு களிக்கலாம்.

    விதவிதமான ஆடைக்கோலங்கள்; படுத்து, வளைந்து, உருண்டு, நெளிந்து, விழுந்து வாசிக்கும் கோலங்கள்; எல்லாமே காற்றில் செய்து; ரசிகர்களின் கரகோஷத்திற்கு சலாம் போட்டு அகலுவது வரை கோமாளித்தனமான பொய் ரியாலிடி.

    சந்திரமுகிக்கு தேவைப்படாத தணிக்கை

    ஞாநி - ஓ பக்கங்கள் : விகடன் :: பொதுவாக உலகெங்கும் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது என்பதற்கு, 'ஜோ போலே சோ நிஹால்' படத் துக்கு எழுந்துள்ள எதிர்ப்பே சாட்சி! படத்தை எதிர்க்கும் சீக்கிய வன்முறையாளர்கள் டெல்லி தியேட்டர்களில் குண்டு வெடித்ததில், 50 பேருக்குக் காயம். ஒருவர் மரணம்.

    படத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன? தலைப்பு, சீக்கியர்கள் மத ரீதியில் முழக்கமிடும் 'ஜோ போலே சோ நிஹால் சத் ஸ்ரீ அகால்' (கடவுள் பெயரைச் சொல்பவர் ஆசீர்வதிக்கப் பட்டவர்) என்னும் கோஷத்தின் ஒரு பகுதி என்பது. படம் பக்திப்பட மல்ல. சன்னி தியோல் சீக்கிய போலீஸ்காரனாக நடிக்கும் அசட்டு காமெடி.

    இந்தப் படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பையடுத்து, சீக்கியக் கோயில்களை நிர்வகிக்கும் சிரோமணி குருத்வார பிரபந்தக் கமிட்டி, இனிமேல் சினிமாவில் சீக்கியர்கள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்று விதிகளை அறிவித்திருக்கிறது. சீக்கியப் பாத்திரங்களில் இனி சீக்கியர் அல்லாதவர்கள் நடிக்கவே கூடாதாம்! சீக்கியராகப் புனித முழுக்குப் பெற்றவர் மட்டுமே நடிக்கலாம். சீக்கியப் பாத்திரம் எதுவும் மது குடிப்பதாகவோ, குற்றங்கள் செய்யும் வில்லனாகவோ காட்டப்படக் கூடாது. தணிக்கைக் குழுவிலும் ஐந்து சீக்கியர்களை நியமித்து, எந்தப் படத்தில் சீக்கிய வேடமோ, வாழ்க்கை முறையோ வந்தாலும், அதை அந்தக் குழு அங்கீகரித்த பிறகே படத்தை அனுமதிக்க வேண்டும்.

    சகிப்புத்தன்மை, அன்பு இவற்றைத்தான் மதங்கள் போதிக்கின்றன என்று எல்லா மதவாதிகளும் நம்மை நம்பச் சொல்கிறார்கள். ஆனால், எங்கோ பிரான்சில், காலணியில் இந்து சாமிப் படங்களைப் போட்டால், இங்கே கலவரம் வெடிக் கிறது. இராக் சிறையில் குர்-ஆன் புத்தகங்களைக் கழிவறையில் போட்டதாகக் கேள்விப்பட்டதும், வேறு தேசத்தில் கலவரம் எழுந்து பல பேர் செத்துப் போகிறார்கள். மராத்திய வீரன் சிவாஜி, பிரிட்டிஷ் அடிவருடியாக இருந்தான் என்று ஆங்கிலத்தில் ஒருவர் புத்தகம் எழுதினால், புனேவில் இருக்கும் ஆவணக் காப்பகத்தை சிவசேனை சூறையாடுகிறது.

    அதாவது, முதல் 'இழிவை'ச் செய்தவர்களின் தரத்துக்கு நாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று இவர்களும் நிரூபிக்கிறார்கள்.

    சட்டங்கள் கடுமையாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். அது முழு உண்மையல்ல என்பதற்கு, சினிமா தணிக்கைச் சட்டமே சாட்சி. தணிக்கை விதிகளை நூறு சதவிகிதம் பின்பற்றினால், வருடத்துக்குப் பத்துப் படம் கூட ரிலீஸாகாது!

    பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, நானும் சில சகாக்களும் ஒரு படத்துக்குச் சான்றிதழே தர முடியாது என்று சொல்லிவிட்டோம். வில்லன் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கிராஃபிக்ஸ் மூலம் ஒரு மண்டபத்தில் பேய் பிசாசுகள் நடமாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்தப் பக்கமே மக்கள் வராமல் தடுத்து விடுகிறான். மண்டபத்தைச் சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்து கிறான். க்ளைமாக்ஸில் அம்மனின் வேல் வந்து பாய்ந்து, வில்லனின் கம்ப்யூட்டர் சாதனங்களை எல்லாம் வெடிக்கச் செய்து அழித்துவிடுகிறது. வில்லனும் செத்துப் போகிறான். தணிக்கை விதிகளில் இரண்டு சொற்றொடர்கள் உள்ளன. ஒன்று, scientific temper (அறிவியல் கண்ணோட்டம்). இன்னொன்று, obscurantist tendencies (மூடத்தனமான, பிற்போக்கான கருத்துகள்). படம் அறிவியல் பார்வைக்கு எதிராக மூடத்தனத்தை வளர்ப்பதால் அனுமதி மறுத்தோம். மறுபரிசீலனைக் குழுவுக்குப் போய், படம் சில வெட்டுகள் பெற்றது. அடுத்த அப்பீலில் எந்த வெட்டும் இல்லை என்றாகி விட்டது. கடைசியில் படம் 'தாய்க்குலத்தின் பேராதரவுடன்' 150 நாள் ஓடி வசூலைக் குவித்தது.

    வியாழன், ஜூன் 02, 2005

    சுட்டும் சுட்டி

    சுட்டாமல் சுட்டு சுட்டித் தொடர் எழுதும் சுலப ஃபார்முலா:

    1. பொருத்தமான புத்தகத்தை எடுத்துக் கொள்ளவும்.
    2. சம்பந்தப்பட்ட சாப்டரைத் திறக்கவும்.
    3. கணினியில் டைப் செய்யவும் (அல்லது எழுத்துணரி செய்தால், வேலை மிச்சம்).
    4. முதல் பாராவை மூணாவதுக்குப் போடவும்.
    5. மூணாவது பாராவை ஏழாவதுக்குப் போடவும்.
    6. ஏழாவது பாராவை முதலாவதாகப் போட்டுவிடவும்.
    7. If in current chapter sachin's age is < 15, replace all "சச்சின்" with "சுட்டி சச்சின்".
    8. ஆங்காங்கே சச்சினின் சமீபத்திய சாதனைகளைப்பற்றி ஒன்றிரண்டு வரிகள் நுழைக்கவும்.
    9. உருக்கமான வசனங்களோ, வர்ணனைகளோ சேர்க்கலாம், தப்பில்லை.
    10. கடைசியாக, சச்சினைப்பற்றி யாராவது பெரிய மனிதர் சொன்ன ஒரு வரியைப் போடவும், அல்லது சச்சினே தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்ட வரியையும் போடலாம்.
    11. ஓவியர் பாண்டியனை அழைத்து, சச்சினின் இளவயது பொம்மை ஒன்றைக் கொடுத்து, ஓவியம் வரைய சொல்லவும்.
    12. இஷ்யூவுக்கான சாப்டர் ரெடி!



    சிகரம் தொட்ட சச்சின் :: வள்ளி (நன்றி - சுட்டி விகடன்)

    லக்ஷ்மிபாய் என்ற பாட்டி சச்சினையும் அந்த வீட்டுச் சுட்டிகளையும் பராமரித்து வந்தார். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போய் விடுவார்கள். பாட்டிதான் சச்சினுக்கு வளர்ப்புத்தாய், விளையாட்டுத்தோழி எல்லாமே! இரண்டரை வயதிலேயே சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் பற்றிக் கொண்டது. வீட்டுவேலை செய்துகொண்டிருக்கும் லக்ஷ்மிபாயைப் பந்துவீச அழைப்பார் குட்டி சச்சின். துணி துவைக்கப் பயன்படும் மரக்கட்டைதான் சச்சினின் முதல் பேட்! பாட்டி பிளாஸ்டிக் பந்தை வீச, அதை அழகாக அடித்து விட்டுச் சிரிப்பார் சச்சின்.

    "லக்ஷ்மிபாய் தாதிதான் என் முதல் கிரிக்கெட் கோச். கிரிக்கெட் பற்றித் தெரியாமலேயே எனக்கு அருமையாகப் பயிற்சி அளித்தவர் அவர். மறக்க முடியாத நபர்களில் முக்கியமானவர்." இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டிகளின்போது சச்சின் சொன்னது இது.

    லக்ஷ்மிபாய் தாதியும் சச்சினின் மழலைக் குறும்புகளை நினைவு வைத்திருந்து அடிக்கடி சொல்வார். "அவன் எல்லோருக்குமே செல்லம். சரியாக நடக்கக்கூடத் தெரியாது அவனுக்கு. அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருப்பான். ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். வேகமான, துடிப்பான பிள்ளை. அவனுடைய சுருள்முடியையும், கொழுகொழு கன்னங்களையும் பார்க்கிறவர்கள் சச்சினைக் கொஞ்சாமல் போக மாட்டார்கள். அந்தக் குட்டிப்பையன் இன்று உலகம் மதிக்கும் விளையாட்டுக்காரனாக உருவாகி இருக்கிறான். அதைப் பார்ப்பதே எனக்குப் பெரிய பரிசு!" - இப்படி சச்சின் பற்றிப் பேசி மகிழ்வார் லக்ஷ்மிபாய்.

    சச்சினின் அண்ணன் அஜித் டெண்டுல்கர். சச்சினை விட 11 வயது பெரியவர். பள்ளி, கல்லூரி மற்றும் கிளப்களுக்காக கிரிக்கெட் ஆடியவர். (இவர் சச்சினைப்பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூலே எழுதியிருக்கிறார். 1996-ல் அது வெளிவந்தது.) சச்சினுக்கு அறிமுகமான முதல் கிரிக்கெட் பேட் அஜித்துடையதுதான். ஒரு குட்டிப் பையனால் தூக்கமுடியாத அளவு கனமாக இருந்தது அந்த பேட். அதைத் தூக்குவதற்கே சச்சின் சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார்! விரைவிலேயே அதைப் பயன்படுத்தி விளையாடவும் தொடங்கிவிட்டார். அதனால்தானோ என்னவோ, இப்போதும் எடை அதிகமான பேட்டையே பயன்படுத்தி வருகிறார் சச்சின். கனமான பேட்டைக் கொண்டுதான், பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுகிறார்.

    அஜித், இன்னொரு அண்ணன் நிதின், அக்கா சவீதா ஆகிய மூவரும்தான் சச்சினின் கிரிக்கெட் ஆர்வம் மென்மேலும் வளரக் காரணம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் கிரிக்கெட் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். அதிலும் அஜித் போட்டிகளுக்கு ஆடத் தொடங்கிய பிறகு வீட்டில் கிரிக்கெட் மழையே பொழிவார். தன் அணி சந்தித்த ஒவ்வொரு பந்தையும் வர்ணிப்பார். அண்ணன்களும், அக்காவும் பேசுவதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பார் சச்சின். இதனால் நாளுக்குநாள் சச்சினுக்குள் கிரிக்கெட் தீபம், பற்றி எரிந்தது. இதற்கிடையே சிறிதுகாலம் சச்சினின் ஆர்வம் டென்னிஸ் பக்கம் திரும்பியது.

    சச்சின் மொழி

    "உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை எதுவும் கிடையாது. இந்திய அணிக்குப் பயன்படும் வகையில் நன்றாக ஆடவேண்டும் என்பதே என் விருப்பம்..."



    சச்சின் - ஒர் புயலின் பூர்வ கதை : சொக்கன் ::

    சச்சின் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது இரண்டரை வயதில். லக்ஷ்மிபாய் வீட்டு வேலைகளில் தீவீரமாய் மூழ்கியிருக்கும்போது, துணி துவைக்கிற கட்டையைக் கையிலெடுத்துக்கொண்டு அவரைப் பந்துவீசுமாறு தொந்தரவு செய்வானாம். நீளமான சுருள்முடியும், புசுபுசுக் கன்னங்களுமாய்ச் சிரிக்கிற மழலையை மறுக்க யாருக்கு மனம் வரும் ? சிறு பிளாஸ்டிக் பந்தை அவர் வீச, அதை அவரிடமே திருப்பியடிப்பதில் சச்சினுக்கு அளவில்லாத சந்தோஷம். இப்படி வீட்டுக்குள், மாடியில் துணி உலர்த்தும்போது என்று அவர்கள் இருவரும் பல களங்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள்.

    லக்ஷ்மிபாய்க்கு இப்போது வயது எழுபதுக்கும் மேல், குழந்தை சச்சினைப்பற்றி பேசும்போதெல்லாம் அவரது கண்களில் ஆசை தெறிக்கிறது, 'கடைக்குட்டி என்பதால் சச்சின் எல்லோருக்கும் செல்லம், அவன் எது செய்தாலும் யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை', சிரிப்போடு சொல்கிற அவர், சச்சினை 'நடக்கத் தெரியாத பிள்ளை' என்று குறும்பாய் வர்ணிக்கிறார், 'எப்போதும், எங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் அவனுக்கு, ஒரு இடத்தில் சும்மா நிற்பதுகூட பிடிக்காது, எல்லாவற்றிலும் வேகம், துள்ளல், கலகலப்பு, பெரிதாய்ச் சத்தம் போடுவது, சின்னச்சின்ன கலாட்டாக்கள் செய்வது என்று எல்லோராலும் கவனிக்கப்பட்ட பிள்ளை அவன்'

    சச்சினின் குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் அப்போதிருந்த ஒரே தொடர்பு அஜீத் டெண்டுல்கர்தான். சச்சினைவிட பதினோரு வயது பெரியவரான அவர், நல்ல கிரிக்கெட் வீரர் - தனது கல்லூரி அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார். ஆகவே அவரது பேட் வீட்டில் இருந்தது, அதுதான் சச்சின் தொட்டுணர்ந்த முதல் கிரிக்கெட் மட்டை! அப்போது அந்த பேட் கிட்டத்தட்ட சச்சினின் உயரத்துக்கு இருந்தது. ஒரு சிறுவனால் சாதாரணமாய்த் தூக்கமுடியாதபடி கனம், ஆனாலும் சச்சின் விடவில்லை. தான் ஏந்திக்கொண்டிருப்பது நிஜமான கிரிக்கெட் பேட் என்கிற எண்ணம் தருகிற சிலிர்ப்பே அவனுக்குப் பெரிய உந்துசக்தியாயிருந்தது. ஆகவே மெல்லமெல்ல அந்த கனமான மட்டைக்குப் பழகிக்கொண்டு, அவனால் அதைச் சுலபமாய் கையாளமுடிந்தது. இந்த தொட்டில் பழக்கமே இன்றுவரை சச்சினுடைய பேட் மற்றவர்களைவிட அதிக கனமாயிருப்பதற்குக் காரணம்!

    அந்த வயதில் சச்சினைக் கவர்ந்த இன்னொரு விளையாட்டு, டென்னிஸ். குறிப்பாய் ஜான் மெக்கன்ரோவின் பெரிய ரசிகனாயிருந்தான் சச்சின். மெக்கன்ரோ விளையாடுகிற போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் தனது ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்று அவன் போடுகிற சப்தத்தில் வீடே அதிரும். அவனோடு உட்கார்ந்து மேட்ச் பார்க்கிறவர்கள் மெக்கென்ரோவை ஆதரிக்காவிட்டால் போச், மேலும் கலாட்டாக்கள் தொடரும்.

    மெக்கென்ரோவைப் பார்த்துப்பார்த்து ஆசைகொண்ட சச்சின் அவரைப்போலவே விளையாடுகிற ஆசையோடு டென்னிஸ் ராக்கெட்டைக் கையிலெடுத்துக்கொண்டான், அதோடு நிற்கவில்லை. மெக்கென்ரோவின் குறிப்பிடத்தக்க அடையாளம், தலையிலும், இரண்டு கைகளின் மணிக்கட்டிலும் அவர் அணிந்திருக்கிற வியர்வைப் பட்டைகள் - வீட்டில் அடம்பிடித்து அதையெல்லாமும் வாங்கி அணிந்துகொண்டு, தன் லட்சிய நாயகனைப்போலவே கர்வத்தோடு நடைபயின்ற சச்சினை, அவனது நண்பர்கள் 'மேக்' என்று செல்லமாய் அழைக்க ஆரம்பித்தார்கள்.

    டென்னிஸில் ஆர்வமிருந்தாலும், ஏனோ சச்சினை அந்த ஆட்டம் ரொம்பவும் வசீகரிக்கவில்லை. சீக்கிரமே சாஹித்ய சஹ்வாஸ் கிரிக்கெட் அணியில் சேர்ந்துகொண்டான் அவன்.

    அரசியல் அண்ணாசாமி

    appusami.com - சாவி ::

    காலை பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு மாலையில் கூடும் அந்தப் பார்க் பெஞ்சு மாநாட்டில் விஷயங்களை அலசிவிட்டுப் போனால்தான் அங்கே கூடும் 'பென்ஷன்'களுக்கெல்லாம் தூக்கம் வரும்.

    ''அண்ணாசாமி ஸார், வாங்க வாங்க. நீங்க இல்லாமல் கான்பரன்ஸே 'டல்' அடிக்கிறது. ஏன் லேட்?''

    ''இதென்ன கேள்வி? ஆபீஸ் விட்டதும் சர்க்கார் பஸ்ஸைன்னா பிடிச்சு வந்து சேரணும்? லேட்டாகாமல் என்ன செய்யும்?'' என்று ஏதாவது குறை கூறிக்கொண்டே வந்து சேருவார் 'அரசியல்' அண்ணாசாமி.

    அவர் வந்ததுமே கான்ஃபரன்ஸ் களை கட்டிவிடும்.

    அண்ணாசாமி வரும்போதே சற்றுக் கடுகடுப்பாகத்தான் வருவார். உலகப் பிரச்னைகளையெல்லாம் எப்படித் தீர்த்துவைப்பது என்ற கவலை அவர் முகத்தில் பிரதிபலிக்கும். பெஞ்சு மீது அமர்ந்து ஒரு சிட்டிகையைத் தட்டி இழுத்துவிட வேண்டியதுதான். நகரசபை நிர்வாகத்திலிருந்து ஐ.நா.சபை நடவடிக்கை வரை எல்லா விஷயங்களையும் மட்டைக்கு இரண்டு கீற்றாக வெளுத்து வாங்கிவிட்டுச் செல்வார்.

    ''திருச்சியிலே பார்த்தீங்களா? குழாய் தண்ணிக்குக் 'கியூ'விலே நிக்கறாங்களாம். பக்கத்திலே காவேரி ஓடறது - என்ன பிரயோசனம்?'' என்று ஆரம்பிப்பார் ஒரு மப்ளர் ஆசாமி. அவ்வளவுதான்; அண்ணாசாமிக்கு எங்கிருந்தோ ஓர் ஆவேசம் பிறந்துவிடும்.

    ''இது என்ன அக்கிரமம், ஸார்? வெள்ளைக்காரன் காலத்திலே இப்படிக் கேள்விப்பட்டிருப்போமா? குடிக்கிற தண்ணிக்கு 'க்யூ'வாம்! இந்த அழகிலே காவேரி வாட்டரை மெட்ராஸ¤க்குக் கொண்டு வரப் போறானாம். பக்கத்திலே இருக்கிற திருச்சிக்கு வழியைக் காணோம்!'' என்பார் அண்ணாசாமி.

    ''கிருஷ்ணா நதியைக் கொண்டுவரப் போறதா ஒரு 'ஸ்கீம்' இருந்துதே, அது என்ன ஆச்சு?'' என்று மெதுவாகக் காவேரியிலிருந்து கிருஷ்ணாவுக்குத் தாண்டுவார் சந்தனப் பொட்டுக்காரர்.

    ''ஸ்கீமுக்கு என்னங்காணும்? ஆயிரம் ஸ்கீம் போடலாம்! சி.பி.யும், சீனிவாசய்யங்காரும் போடாத ஸ்கீமா இவன் பெரிசா போட்டுடப் போறான்? பணத்துக்கு ஒரு ஸ்கீமையும் காணோம்! கன்னா பின்னான்னு கடனை வாங்கி, தண்ணி இல்லாத இடத்திலெல்லாம் டாமைக் கட்டிண்டிருக்கான். கேட்டா, 'இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்'புங்கறான். ஐக்கும், குருஷேவும் எதுக்குத் திருப்பி திருப்பி இந்தியாவுக்கு வந்துண்டிருக்கான் தெரியுமா? விஷயம் இருக்குன்னேன்! இண்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்பாவது, கப்பலாவது? போகப் போகத் தெரியும். பார்த்துண்டே இரும். நான் இன்னிக்குச் சொல்றேன். குருஷ்சேவ் குடுமி சும்மா ஆடாதுய்யா, அசகாய சூரன்!''

    ''அதிருக்கட்டும்; எவரெஸ்ட் எவருக்கு சொந்தம்னு தீர்மானமாயிடுத்தா?''


    ''பரமசிவனுக்குத்தான்; போய்யா! ஒருத்தன் எவரெஸ்ட் என்னதுங்கறான், இன்னொருத்தன் காஷ்மீர் என்னதுங்கறான். அப்படிச் சொல்றவனையெல்லாம் அழைச்சுண்டு வந்து நாம் விருந்து வெச்சுண்டிருக்கோம். இதெல்லாம் டிப்ளமஸியாம். இந்த லட்சணத்திலே டிபன்ஸ் வேறே! டிபன்ஸ் மினிஸ்டர் வேறே!''

    ''ஆடிட் ரிப்போர்ட் சந்தி சிரிக்கிறதே, பார்த்தேளா?''

    ''வெட்கக்கேடு: வெளியே சொல்லாதேயும்! அட்மினிஸ்ரேஷன்லெ ஒரே ஊழல். இதுக்குள்ள நாலு பைனான்ஸ் மினிஸ்டர் மாறியாச்சு. நேரு ஒண்டி ஆள். ஸின்ஸியர் மேன்தான். அவர் என்ன பண்ணுவார், பாவம்? சுத்தி இருக்கறவா சரியாயில்லையே! ஸெண்டர்லே ஒரு பாலிஸின்னா, ஸ்டேட்லே ஒரு பாலிஸி. ஒரு ஸ்டேட்லே ப்ரொகிபிஷன்ங்கறான். இன்னொரு ஸ்டேட்லே குடிக்கலாங்கறான். நம் ஊர் போலீஸ் குடிக்கிறவனையெல்லாம் விட்டுவிட்டு வெளியூர்லேருந்து வர பிரெடிரிக் மார்ச்சை அரெஸ்ட் பண்ணிண்டு இருக்கு. பிரெடிரிக் மார்ச் குடிச்சா என்னா? குடிக்காவிட்டா என்னா? அவனுக்காகவா புரொகிபிஷன் கொண்டு வந்தோம்? பர்ப்பஸையே மறந்துடறோம். இதைப்பத்தி நேருவே நன்னா டோஸ் கொடுத்திருக்கார் பார்த்தேளா? 'காமன்ஸென்ஸ்' இல்லைன்னு!''

    ''அது சரி; அசெம்பளிலே லாண்ட் ஸீலிங் அஞ்சு நாளா அமர்க்களப்படறதே!''

    ''நான் சொல்றேன், இதெல்லாம் டெமாக்ரஸியிலே ஒண்ணுமே நடக்காது, ஸார். இந்த கவர்மெண்டிலே எதையாவது உருப்படியாச் செய்ய முடியறதா பார்த்தேளா? எலெக்ஷனை எவன் நடத்தறான்; பணக்காரன்தானே நடத்தறான்!''

    ''ரிடயரிங் வயசை அம்பத்தஞ்சிலேருந்து அம்பத்தெட்டா பண்ண முடியலே. பென்ஷன் வரியை எடுக்க மாட்டேங்கறான். என்ன கவர்மெண்ட் வேண்டியிருக்கு? என்ன லாண்ட் ஸீலிங் வேண்டியிருக்கு? இதையெல்லாம் பார்த்தா கம்யூனிஸ்ட் கவர்ன்மெண்டே தேவலைன்னு தோண்றது.

    ''அதான் வந்துட்டிருக்கானே, சைனாக்காரன். மெதுவா பார்டர்கிட்டே வந்துட்டான். சூ என் லாய் வரான் பார்த்தயளா? வர சமயத்தைக் கவனிச்சயளா? அதுலேதான் இருக்கு ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம் பஞ்சசீலம்னு இருக்கிறதையெல்லாம் கோட்டைவிடப் போறோம்!''

    ''என்ன அண்ணாசாமி ஸார், ஏன், இப்படி எதுக்கெடுத்தாலும் கவர்ன்மெண்டை அட்டாக் பண்றேள்? சர்க்கார் என்னய்யா பண்ணும்?''

    ''என்ன பண்ணுமா! தட்டிக் கேக்கறதுக்கு ஓர் ஆள் இருந்தா இப்படி நடக்குமா? சோஷலிஸ்டிக் பாட்டனாம் பேரனாம்? என்னய்யா சோஷலிஸம் வேண்டியிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம்.

    சோஷலிசம் பண்றாளாம்'' என்பார் அண்ணாசாமி.

    ''அதான் பெரியவர் ஆரம்பிச்சிருக்காரய்யா புது பார்ட்டி!''

    ''ஆமாம்; புது பார்ட்டி ஆரம்பிச்சு ஓயாமல் கவர்ன்மெண்டை கிரிடிஸைஸ் பண்ணிட்டா ஆயிடுத்தா? அப்கோர்ஸ், பெரியவர் இண்டலிஜெண்ட்தான். ஸ்ட்ராங்காதான் பேசறார். யார் இல்லேங்கறா? நேருவும் ரெஸ்பெக்ட் வெச்சுதான் மீட் பண்ணியிருக்கார். பாலிஸி கிளியரா இல்லியே!''

    ''ஸார், இந்த ஸெளத் ஆப்பிரிக்கன் ப்ரீமியர்!''

    ''அட, சரித்தான், ஸெளத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயுமாச்சு. அடேடே! மார்க்கெட்டுலே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக்காம். விலை ஏர்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம், வாரும்.''

    புதன், ஜூன் 01, 2005

    உடல் பருமன்

    'தொப்பை கண்ட்ரோல்' ஆயில் என்று ஒரு விளம்பரம் சன் டிவியில் வருகிறது. கடந்த மாதத்தில்தான் தோன்றினாலும், உடனடியாக கவனத்தைக் கவர ஆரம்பித்தது. 'அம்மா பாசம்', 'அல்வா தொப்பை', 'எடை பார்க்க முடியாத தொப்பை', என்று அன்றாட சபலங்களினால் ஏற்படும் குண்டு விளைவுகளை நகைச்சுவையாக சொல்கிறார்கள்.

    கடைசியாகத் தொப்பையை குறைக்க சன்ஃப்ளவரோ, சன்பீமோ (Brand recognition பதிய வைக்காத விளம்பரம் எல்லாம் ஒரு விளம்பரமா... லட்சங்களை செலவழித்து என்ன பயன்?) ஏதோவொன்றை காண்பித்து பயன்படுத்துமாறு அட்வைஸ்.

    எண்ணெயை கண்ணால் பார்த்தாலே ஊளைச் சதை உண்டாகும். அதற்காகவே அவர்களின் மேல் பொதுநல வழக்குப் போடலாம்.

    வியர்க்க விறுவிறுக்க சோர்ந்து போகுமளவு உடற்பயிற்சி செய்தால் மட்டுமே தொப்பை கரையும். அப்படியும் எண்ணெய் வேண்டுமென்றால் ஆலிவ் ஆயில்தான் உகந்தது. மணி-பர்ஸுக்கு உகந்ததாக இல்லையே என்றால் கனோலா எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    MyPyramid.gov பக்கம் போனால் உங்களுக்கான தொப்பை கண்ட்ரோல் முறையை சொல்கிறார்கள். (தப்பித் தவறி MyPyramid.org சென்று விடாதீர்கள்; தொப்பை வலிக்க சிரிக்க மட்டும்தான் வைத்து அனுப்புவார்கள் ;-))


    மங்கையர் மலரில் இருந்து:

    சென்னை அடையார் நேச்சர் க்யூர் சென்டர் :: கீழ்க்கண்ட உணவு முறைகளை கையாண்டால் மாதம் குறைந்தது 5 கிலோ குறையும்.

    காலையில் எழுந்ததும் சூரியக் குளியலை ரசித்தபடி 6 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது இரவு ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் பத்து கிருஷ்ணா துளசிகளைப் போட்டு ஊறவைக்கவும். காலையில் துளசிகளை அதிலிருந்து வெளியே எடுத்து துளசி குணம் நிறைந்த நீரை மென்சூடாக்கி பிறகு வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    காப்பிக்குப் பதில் பால் இல்லாத சுக்குக் காப்பி சிறிது பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

    ஒரு மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.

    காலை 8.30 - 9.30 மணியளவில்: காலையில் எந்தவிதமான மாவு ஆகாரமும் சேர்க்கக் கூடாது. பசி தாங்க முடியாதவர்கள் 1 தம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம்.

    சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். 2 கேரட்களை கொதிக்கும் வெந்நீரில் போட்டு, கொதிக்க வைத்து, ஆறவைத்த தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக்கி சிறிது மிளகு தூள் போட்டுச் சாப்பிடலாம்.

    காலை 10.30 - சாம்பல் பூசணி ஜூஸ் அல்லது முள்ளங்கி ஜூஸ்

    காலை 11.00 - ஊறவைத்த அவல் + நாட்டுச் சர்க்கரை + பொடி செய்யப்பட்ட வாழைப்பழம் + வாசனைக்காக ஏலக்காய்... அனைத்தும் கலந்து அப்படியே சாப்பிடவும். (பச்சை வாழைப்பழத்தைக் கவனமாகத் தவிர்த்து விடவும்).

    மதியம் சாப்பாடு: மதியம் சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன் காய்கறி சாலட் சாப்பிடவும்.

    மதிய உணவிற்கு கீரையைப் பாதி வேகவைத்த நிலையிலேயே சமைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பு சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

    மாலை 3 - 4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவதொன்றை 4 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடவும்.

    மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடவும். பால் கலக்காத டீ சாப்பிடலாம்.

    இரவு 7.30 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பச்சைக் காய்கறிகள் சாப்பிடுங்கள். கவனம், எண்ணெயில் குளிப்பாட்டும் உணவுகளைத் தவிர்த்த இரவு உணவு இருக்க வேண்டும்.

    பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.

    குறிப்பேடுகளின் அட்டைப்படங்கள்

    Sadha in Monalisaவாசகர் டிஷ்யூம்: ஜூன் மாதம் பிறந்து விட்டது... பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட விருக்கின்றன. என்னுடைய பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்க கடைக்கு சென்றேன். சினிமா கவர்ச்சி என்பது பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள் வரை வந்துவிட்ட கொடுமையை பார்த்து மிரண்டு போனேன். நோட்டுப் புத்தகங்களில் அரைகுறை டிரஸ்ஸில் குளோசப் படங்களாக நடிகைகள் மின்னிக் கொண்டிருந்தார்கள். அந்த நோட்டுப் புத்தகங்களைத்தான் மாணவர்கள் வாங்கிச் சென்றார்கள்.

    ரோட்டில் அவ்வப்போது ஒட்டப்படும் கவர்ச்சிப் பட காட்சியைப் பார்த்து வரிந்து கட்டிக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் போலீஸார், இந்த மாதிரி கவர்ச்சிப் படம் போட்ட நோட்டு புத்தகங்களை தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்?

    பள்ளி ஆசிரியர்களே... பெற்றோரே... இந்த ஆண்டாவது சினிமா கவர்ச்சியை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்று புது சபதம் போடுங்கள்!

    - சிதம்பர செல்வன், சென்னை - 24.

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு